Friday, May 10, 2013

சிட்டுக் குருவிக்கு என்ன தட்டுப்பாடு ? - பாறப்புறத் இராதாகிருஷ்ணன், சென்னை

நம் வீட்டு முற்றங்களிலும், சாளரங்களின் ஓரங்களிலும், அதன் கம்பிகள் மீதும் உட்கார்ந்தும், மரங்களின் கிளைகளிலும், சுவற்றுக் கட்டைகளிலும், உறை கிணறுகளின் ஓரங்களில், மூலை முடுக்குகளிலும் அமர்ந்து மெலிதான குரலில் பேரொலியை எழுப்பிக் கொண்டும், ஓய்வின்றி அங்குமிங்கும் பறந்து வந்த சிட்டுக்குருவிகளை இப்போது அதிகம் காண முடிவதில்லை.

பறவையியல் விஞ்ஞானிகள் 1990-ஆம் ஆண்டில்தான், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதைக் கண்டுபிடித்தனர்.

16 சென்டி மீட்டர் அளவில் உருவில் சிறியதாகவும், விரைவாகப் பறக்கும் திறன் கொண்டதாகவும், அழகாகவும் இருக்கும் சிட்டுக்குருவி அழிவின் விளிம்பில் உள்ளது. ஆண் சிட்டுக்குருவிகள் தலை முதுகு, வாய், மேல்பகுதிச் சிறகுகள், பிடரி போன்றவை பழுப்பு கலந்த கருஞ்சாம்பல் நிறமும், மேல் முதுகும், இறக்கைகளும், கருப்பு - பழுப்பு கொண்ட ஆழ்ந்த பழுப்பு நிறத்துடனும் காணப்படும். பெண் சிட்டுக்குருவிகள் உடலின் மேல் பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்புக் கோடுகளும், சாம்பல் தோய்ந்த உடலமைப்புடனும் காணப்படும்.

இவை கூட்டம் கூட்டமாக வாழும். சங்க இலங்கியங்கள் இக்குருவியை "மனையுறை குருவி' எனப் போற்றுகின்றன. அதாவது, மனிதர்கள் வாழும் வீடுகளில் கூடு கட்டி வாழ்ந்ததால் இக்குருவிக்கு மனையுறை குருவி எனப் பெயர் வந்ததுபோலும். ஊர் மக்களுடன் கலந்து பழகுவதால் "ஊர்க்குருவி' என்றும், மனிதர்களிடம் அடைக்கலம் புகுந்ததால் "அடைக்கலாங்குருவி' என்றும் இப்பறவை அழைக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் கூரை வீடுகளிலும், நகர்ப்புறங்களில் அமைந்துள்ள மாடி வீடுகளின் தாழ்வாரங்கள், பொந்துகள் போன்றவைகளில் இவை கூடு கட்டி வாழும்.

வீட்டுத் தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை இக்குருவிகள் தின்பதால் "விவசாயிகளின் நண்பன்' என்று அழைக்கப்பட்டன. சிட்டுக்குருவிகளுக்கு மாட்டுச்சாணம் முதல் தானியங்கள் வரை இயற்கை தந்த உணவுகள் இருந்தன. சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவு தானியங்களே. நெல், சோளம், பயறு வகைகள், கோதுமை போன்றவற்றை விரும்பி உண்ணும்.

 வீட்டு வாசலில் காய வைக்கப்படும் தானிய வகைகளை ஓடி வந்து உண்ணும். மனிதர்கள் அந்த வழியே வந்தால் மரியாதையுடன் வழி விடும். ஆனால், இப்போது அனைத்து தினை மாவுகளும் கடைகளில் ஆயத்தமாகக் கிடைத்து விடுவதால். யாரும் வீட்டின் முன் எந்த தானியங்களையும் முடைப்பதுமில்லை, காய வைப்பதுமில்லை. எனவே சிட்டுக்குருவிகளையும் காண முடிவதில்லை.

விவசாயமும், விவசாய நிலங்களும் குறைந்து வருவதால் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரிதாகிப் போனதாலும், காற்று மாசுபடுவதாலும் உடல் நலம் கெட்டு சிட்டுக்குருவிகள் அழிகின்றன. வைக்கோல், துணித் துண்டுகள், சணல் பஞ்சு மற்றும் சில சிறு சிறு பொருட்களைக் கொண்டு கூடுகளைக் கட்டி வாழும். வீடுகளில் சுறுசுறுப்பாய் சுதந்திரமாய் பறந்து திரிந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளுக்கு நவீன கால வீடுகளிலும் கூடு கட்ட வசதியில்லாமலும், காடுகளிலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ஏனெனில் அங்கும் மனிதர்கள் அழிவைத் தொடங்கி விட்டார்கள். ஐநூறு குருவிகள் இருந்த இடத்தில் இப்போது ஐந்தாறு குருவிகளைக் கூட காண முடியவில்லை எனப் பறவையியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களிலிருந்தும், பெட்ரோலிலிருந்தும் வெளிவரும் மீத்தைல் நைட்ரேட் என்னும் நச்சு வாயுவால் காற்று மாசடைந்து சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் புழு, பூச்சிகளும் அழிகின்றன. வெளிக்காற்று வீட்டிற்குள் நுழையாதபடி வீடு முழுவதும் குளிர்சாதன வசதி பொருத்தப்படுவதால் குருவிகளால் வீடுகளுக்குள் கூடு கட்டி வாழமுடியவில்லை.

சிட்டுக்குருவிகள் குறையக் குறைய உணவு உற்பத்தியும் குறையும். 60 கோடி கைப்பேசிகளுக்கு 5 லட்சம் அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஏற்படும் காந்த கதிர்வீச்சினால் 50 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன. கைப்பேசி அலைவரிசை கோபுரங்களிலிருந்து வெளிவரும் அளவுக்கதிகமான மின்காந்தம் இந்த சிறிய பறவையின் பறக்கும் திறனையும் குறைத்து, மலடாக்கியும் விடுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சி காரணமாகவும், மரங்கள் வெட்டப்படுவதாலும், வயல் வெளிகள் அழிந்து வருவதாலும் சிட்டுக்குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது. தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட புழு, பூச்சி, வண்டுகள் இல்லாததாலும், வீட்டின் அமைப்புகள் மாறுவதாலும் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன.

வளர்ந்துவரும் நகரமயம், சுற்றுச்சூழலில் பெருகிவரும் மாசு, ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிர்களின் மேலும், வீட்டின் சுவர்களிலும் தெளிக்கப்படுவதாலும், நகரமயமாதலினால் காரணமாக கான்கிரீட் கட்டடங்கள் எங்கும் பெருகியதாலும், தானிய வகைகள் காணப்படாததாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காமலும் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சிட்டுக்குருவிகளைக் பாதுகாக்கும் வகையில் கடந்த ஆண்டு (2012) புதுதில்லி அரசு சிட்டுக்குருவிகளை மாநிலப் பறவையாக அறிவித்துச் சிறப்பித்தது. இந்திய அரசும் 2010-ம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி சிட்டுக்குருவிகளுக்காக சிறப்புத் தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

சிட்டுக்குருவி மேலும் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்றால் அவை வாழும் இடங்களுக்கு அருகில், அதாவது இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு கைப்பேசி அலைவரிசை கோபுரங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது. பயிர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தைப் பயன்படுத்த வேண்டும். எரிவாயு வாகனங்களை சிட்டுக்குருவி வாழும் இடங்களுக்கு அருகில் பயன்படுத்தக் கூடாது. பாலிதீன் பைகளில் தானியங்கள் விற்பதைத் தடைசெய்ய வேண்டும்.

சிட்டுக்குருவியின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அணில், காகம், பூனை போன்றவை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் ஒரு பகுதியில் கிண்ணத்தில் தானியத்தையும், தண்ணீரையும் வைத்து குருவிகளைப் பழக்கப்படுத்தலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் அட்டைப் பெட்டிகளில் வைக்கோல், தேங்காய் நாறுகளுடன் கூடிய சிறு கூடைகளை வைத்து வீட்டின் முன்புறம் தொங்க விட வேண்டும். வீட்டின் மேல்மாடியில் சிட்டுக் குருவிகள் குடிப்பதற்கும், குளித்து தங்களைப் புதுப்பித்துக் கொள்ள ஏதுவாகவும் சிறு பாத்திரத்தில் தண்ணீரைச் சேகரித்து வைக்கலாம். சாதம், இட்லி துகள்கள், உப்புமா மற்றும் சீரகங்கள் சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் உணவு வகைகளாகும்.
இந்த உணவுகள் எங்கே கிடைத்தாலும், தான் மட்டும் உண்ணாமல் தனது குஞ்சுகளுக்கும் கொடுத்து அவை உண்பதைக் கண்டு மகிழும்.

வீட்டின் முன், அல்லது மொட்டை மாடியில் தானியங்கள் தூவுவதன் மூலமாகவும், மண் பானையில் வைக்கோல் வைப்பதன் மூலமாகவும் சிட்டுக்குருவிகளை நாம் வீட்டிற்குள் வரவேற்கலாம்.

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க தனியார்களையும், பறவைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து சிட்டுக்குருவிகளையும், பல்வகை உயிரினவகைகளையும் காக்க வேண்டும் என்பதற்காக,

 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி "உலக சிட்டுக்குருவிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இனியேனும் சிட்டுக்குருவிகளை அழிவிலிருந்து காக்க உறுதி எடுத்துக்கொள்வோம். 

நன்றி :- கருத்துக்களம், தினமணி, 06-05-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.