Friday, May 17, 2013

வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: முன் அனுமதியின்றி கைது செய்யக்கூடாது !

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் மற்றும் இணையதளத்தில் ஒருவர் தெரிவிக்கும் கருத்துகளுக்காக அவரை கைது செய்ய வேண்டுமென்றால் உயரதிகாரிகளின் முன் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆட்சேபத்துக்கு உரிய கருத்துகளை பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தெரிவித்தால் அவரை கைது செய்யும் அதிகாரம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவின் கீழ் அளிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் சட்டத்தின் கீழ் இது செல்லுமா என்று கேட்டு சட்ட மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.செளஹான், தீபக் மிஸ்ரா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தது: இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்காக ஒருவரை காவல் துறை உயரதிகாரிகளின் முன் அனுமதி இல்லாமல் கைது செய்யக் கூடாது.

கைது நடவடிக்கைக்கு ஐ.ஜி., துணை ஆணையர், காவல் துறை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியின் முன் அனுமதி தேவை. மத்திய அரசு இது தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படும் நிலையில், முன்பு குறிப்பிட்ட உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல் கைது செய்யக் கூடாது என மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தலை மாநில அரசுகள் பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும். 66-ஏ பிரிவு செயல்படுத்தப்படுவதை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆட்சேபகரமான கருத்தை தெரிவிப்பவர்களை கைது செய்வதை ஒரேயடியாக தடை செய்து உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.