Friday, May 17, 2013

கொடுத்துப் பெறுவதும் ராஜதந்திரம் - சமஸ்


நீங்கள் நூறு ரூபாய் பெருமானம் உள்ள, ஒன்றுக்கும் உதவாத, உங்களுக்கு முழுமையாக பாத்தியதை ஆகாத, பிரச்னைக்குரிய ஒரு நிலத்தை வைத்திருக்கிறீர்கள். அந்த நிலத்தைப் பாதுகாக்க எவ்வளவு வரை செலவழிப்பது லாபம்?
ஐம்பது ரூபாய்?
எழுபது ரூபாய்?
தொண்ணூறு ரூபாய்?
அதிகபட்சமாக, நூறு ரூபாய்கூட செலவழிக்கலாம். அந்த நிலத்தைப் பாதுகாக்கப் போராடிய உங்கள் சுயகெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்வது லாபம். ஆனால், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலவழிப்பீர்களா? அதற்காக ஆண்டுதோறும் உயிர்களைப் பலி கொடுப்பீர்களா? அப்படிச் செலவழித்து, பலி கொடுப்பது புத்திசாலித்தனம்தானா?

தனி மனிதர்களே செய்யத் தயங்கும் அப்படியான விஷயத்தைத்தான் ஒரு தேசம் செய்துகொண்டிருக்கிறது. நம்முடைய எல்லைப் பிரச்னைகளை நம் அரசு இப்படித்தான் அணுகுகிறது.

சீனாவின் இதுவரையிலான அத்துமீறல்களுக்கும், இந்திய எல்லைக்குள் 19 கிலோ மீட்டர் வந்து ராக்கி நாளாவில் அவர்கள் முகாம் அமைத்து நடத்திய சமீபத்திய ஊடுருவலுக்கும் வேறுபாடு ஏதேனும் உண்டா? உண்டு. இந்த அத்துமீறல் இந்தியர்களுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது: "இந்தியா இனியும் தன்னுடைய எல்லைப் பிரச்னைகளைத் தள்ளிப் போடக் கூடாது'.

சுதந்திரத்தின்போது ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற எல்லைகளின் அடிப்படையிலேயே, இந்தியா தன்னுடைய எல்லைகளை அணுகுகிறது. பிரச்னை என்னவென்றால், இந்த எல்லைக்கோடுகளை நம்முடன் சம்பந்தப்பட்ட நாடுகள் முழுமையாக ஏற்கவில்லை.

 நாம் எதிர்கொள்ளும் எல்லைப் பிரச்னைகளில் பெரும்பாலானவை ஆங்கிலேயர்கள் முறையாகக் கையாளாமல், அலட்சியமாக விட்டுச்சென்ற சாபங்கள். அவற்றின் ஒரு பகுதியே சீனாவுடன் நாம் எதிர்கொள்ளும் எல்லைப் பிரச்னைகளும்அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலரான சர் ஹென்றி மக்மோகன் 1914-இல் வரையறுத்த எல்லைக்கோடே இந்திய அரசின் சட்டபூர்வ இந்திய - சீன எல்லைக்கோடு. ஆனால், இந்த எல்லைக்கோட்டை சீனா ஏற்கவில்லை.

காஷ்மீர், உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் என்று நீளும் இந்த எல்லைப் பகுதியில் அருணாசலப் பிரதேசம், தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் வடமேற்குப் பகுதியான அக்சாய் சின், பாகிஸ்தான் ஆக்கிரமித்து சீனாவுக்குத் தாரை வார்த்த ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு மற்றும் இமாசலப் பிரதேசம், ஜார்கண்டின் சில பகுதிகளுக்கு (கிட்டத்தட்ட 90,000 சதுர கிலோ மீட்டர்) உரிமை கோருகிறது சீனா.

இந்தியா இதை ஏற்கவில்லை. 1962 இந்திய - சீன போருக்குப் பின் 4,057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட "சீன-இந்திய நடைமுறை எல்லைக்கோடு' உலகிலேயே நீளமான சர்ச்சைக்குரிய எல்லையானது. ஆகையால், பேசுகிறோம், பேசுகிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம்... இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படி ஒரு நீண்ட - பயனற்ற பேச்சுவார்த்தைகள் தொடரும் - எல்லைப் பிரச்னை வேறு எந்த நாடுகளுக்கு இடையேயும் இல்லை.

சீனாவுடன் மட்டும் அல்ல, இன்றைய தேதியில் தன்னைச் சுற்றி இருக்கும் 10 நாடுகளில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை என்று 6 நாடுகளுடன் எல்லைப் பிரச்னைகளை எதிர்கொள்கிறது இந்தியா.

ஆபத்தை விளைவிக்கும் சூழல் இது. காலனிய காலகட்டத்தில் வகுக்கப்பட்ட நம்முடைய எல்லைகளைச் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசி, மறுவரையறை செய்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பராமரிப்பதுமே இதற்கு புத்திசாலித்தனமான தீர்வு. ஆனால், நம்முடைய ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறார்கள்.

இராஜதந்திரத் துறையில் ஒத்திப்போடுவதும் இழுத்தடிப்பதும் ஒரு கலை. அதேசமயம், அந்தக் கலை தாற்காலிகமான ஓர் உத்திதானே தவிர, நிரந்தரமான தீர்வு கிடையாது. இந்திய வெளியுறவுத்துறையோ ஒத்திப்போடுவதையும் இழுத்தடிப்பதையுமே தீர்வுக்கான உத்தியாகக் காலங்காலமாகப் பின்பற்றுகிறது.

அண்டை நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது எல்லைப் பிரச்னைகளைத் தவிர்த்துப் பேசும் நம்முடைய உத்திக்கு முடிவு கட்டும் விதமாகவே சீனா ஆக்கிரமிப்புகளைப் பயன்படுத்துகிறது.2010-க்குப் பிறகு மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை சீனா நடத்தி இருக்கிறது.


சீனத்தில் கடந்த ஆண்டு புதிய அரசியல் தலைமை மாற்றம் ஏற்பட்டதும் தன்னுடைய எல்லைப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை அந் நாடு துரிதப்படுத்த ஆரம்பித்தது. கடந்த மாதம் சீன அதிபர் ஸீ ஜின்பிங் இந்தியாவுடனான உறவு தொடர்பான 5 அம்சச் செயல்திட்டத்தை வெளியிட்டார். அதில் முக்கியமானது எல்லையில் அமைதி. மே 20-ஆம் தேதி பிரதமர் லீ கெகியாங், தில்லி வரவுள்ள நிலையில், சீனா நடத்தி இருக்கும் ஆக்கிரமிப்பும் எல்லை தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், பிரச்னை ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் மீண்டும் மீண்டும் தெரிவிப்பதும் சீனாவின் வியூகத்தைத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.

உண்மையில், இந்தியாவுக்கு இது நெருக்கடி அல்ல - நல்ல வாய்ப்பு. எல்லைப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்தியாவின் எதிர்காலத்துக்கும் நல்லது. சர்ச்சைக்குரிய இடங்களில் நாமும் நுழைய மாட்டோம், அவர்களும் நம்மை நுழையவிட மாட்டார்கள். இப்படித்தான் நாம் நம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் நம்முடைய இறையாண்மையைப் பாதுகாக்கிறோம்.

எல்லையில் தொடரும் தேவையற்ற பதற்றத்தால், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழப்பதோடு, ஏராளமான துருப்புகளையும் பணயம் வைக்கிறோம். நாம் இன்றைக்கு முறுக்கிக்கொண்டு நிற்கும் பல எல்லைப் பகுதிகள் ஆங்கிலேயர்களால் சரியாக வரையறுக்கப்படாதவை என்பதோடு, பிரயோஜனமற்ற, நிர்வகிக்கச் சிரமமான பகுதிகள் என்பதும் நம்முடைய ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

ஆனால், உள்நாட்டு அரசியல் லாப - நஷ்டக் கணக்குகளும், எல்லைப் பிரச்னைகள் தொடர்வதன் பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய ஆயுத வியாபாரக் கூட்டமும் அவர்களைச் செயல்படவிடாமல் தடுக்கின்றன.

இந்த விவகாரத்தில் இந்தியத் தரைப்படையின் முன்னாள் தளபதியும் அருணாசலப் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநருமான ஜே.ஜே. சிங்கின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த ஆண்டு இந்திய - சீன உறவு தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கைத் தொடங்கிவைத்தபோது, ""இந்தியா - சீனா பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பும் விட்டுக்கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் அணுகுமுறையோடு பேச்சுவார்த்தையில் உட்கார்வது அவசியம்'' என்று சொன்னார் ஜே.ஜே. சிங். இதற்கு நேரடியான அர்த்தம் என்னவென்றால், இந்தியா தன்னுடையது என்று உரிமை கோரும் சில சீனப் பகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, பதிலுக்கு நம் ஆளுகையில் இல்லாத - நமக்குத் தேவையான பகுதிகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்பதே. ஜே.ஜே. சிங் குறிப்பிட்ட - கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், நாம் நம்முடைய

அண்டை நாடுகளுடனான விவகாரங்களில் ராணுவ வியூகங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதற்கு இணையான முக்கியத்துவத்தை எல்லைப்பகுதி மக்களின் மேம்பாட்டிலும் கொடுக்க வேண்டும் என்பது. இந்த அணுகுமுறை கள யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டும் அல்ல; தொலைநோக்கிலானதும் ஆகும்.

ஏனென்றால், இந்தியாவுக்கு எல்லை தாண்டி உள்ள அச்சுறுத்தலைவிடவும் சவாலான அச்சுறுத்தல் } இந்தியா உள்ளுக்குள் தெறித்துக்கொண்டிருப்பது. ஒருபக்கம் நாட்டின் 16 மாநிலங்கள், 222 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் இருக்கும் சூழலில், மறுபக்கம் காஷ்மீர், மணிப்பூர், திரிபுரா, போடோலாந்து என்று தனி நாடு கோரிக்கைகள் நாளுக்கு நாள் மக்களிடம் வலுவடைகின்றன.

அன்னிய சக்திகள் எல்லை வழியே புகுந்து நடத்தும் நேரடியான தாக்குதலைவிடவும் பிரிவினைவாதிகளைப் பின்னிருந்து இயக்கும் சூழலை நாமே உருவாக்கித் தருவதுதான் மிக அபாயகரமானது. ஜே.ஜே. சிங்கின் கூற்று மறைமுகமாக இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

சீனாவுக்கு உண்மையாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், நாம் முறுக்கிக்கொண்டு நிற்க வேண்டிய இடம் எல்லை அல்ல - பொருளாதாரம்.

சீனாவுக்குப் பொருளாதாரரீதியாக இந்தியா அடிமையாகிக்கொண்டிருப்பது பலராலும் கவனிக்கப்படாதது. 2002-இல் 200 கோடி டாலராக இருந்த சீனாவுடனான இந்திய வணிகம் 2012-இல் 6,500 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது.

உலகமயமாக்கலின் அனுகூலத்தை முழுமையாக அறுவடை செய்தாலும், சீனா எப்போதும் "சீனத்தன்மையுடனேயே' இருக்கிறது. சீனாவில் ஓடும் சைக்கிள்களில் தொடங்கி கார்கள் வரை உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களே சீனாவை ஆள்கின்றன.

உலகத்துக்கு வால்மார்ட் என்றால் சீனாவுக்கு உமார்ட். உலகத்துக்கு கூகுள் என்றால், சீனாவுக்கு பைடு. உலகிலேயே லாபகரமாக இயங்கும் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று "ஏர் சீனா'. ஏர் இந்தியாவின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். இந்தியச் சந்தைகளில் விற்பனையாகும் சரிபாதிப் பொருட்கள் சீனாவுடையது. இந்திய உற்பத்தித் துறைக்கான நான்கில் ஒரு பங்கு பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி ஆகின்றன. நவீன உலகில் ஆக்கிரமிப்பு என்பது நிலம் சார்ந்தது மட்டும் அல்ல.

உலகம் மாறிவிட்டது. இந்தியா பேச வேண்டும். பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரும் அக்கறையோடு, தொலைநோக்கோடு பேச வேண்டும். எதை விட்டுக்கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுத்து, எதைக் கேட்டுப்பெற வேண்டுமோ, அதைக் கேட்டுப் பெறும் வகையில் பேச வேண்டும். இந்தியா எல்லைப் பிரச்னைகளை இனியும் தள்ளிப்போடக் கூடாது!

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.  நன்றி : தினமணி  

writersamas.blogspot.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.