Thursday, May 16, 2013

சுயமரியாதைச் சுடரொளி. குருவிக்கரம்பை சு. வேலு
 சுயமரியாதைச் சுடரொளி.குருவிக்கரம்பை வேலு அவர்களுக்கு வீரவணக்கம்
பாரதி விஜயன் ஞாயிறு, 08 ஆகஸ்ட் 2010 22:13

சுயமரியாதைச் சுடரொளி பகுத் தறிவைப் பாடிப் பறந்த பறவை, போராளி, முதுபெரும் எழுத்தாளர்   என்கிற பெருமைகளுக் கெல்லாம் உரிய பெரியவர் குருக்கரம்பை சு.வேலு அவர்கள்     03.03.2010 அன்று பிற்பகல் தமதில்லத்தில் மாரடைப்பால் கால மானார். அன்னாருக்கு வயது எண்பது.

03.03.2010 அன்று காலையில்தான் அவர் ஏலகிரியிலிருந்து சென்னைக்குத் திரும்பி இருந்தார். வழக்கமான தன் பணிகளை முடித்துக் கொண்டு  நண்பர்களுடன் பகல் 12.00 மணி வரை தொலைபேசியில் உரையாடிக் கொண்டி ருந்தவர் மாலை 3.00 மணி அளவில் தன் பேச்சையும், மூச்சையும் நிறுத்திக் கொண் டார்.  இறப்பிற்குப்பின்  தன் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்விற்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற அவரது விருப்பத்திற்கிணங்க அன்னாரது உடல் 04.03.2010 அன்று சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில்  ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்குப் பக்கத்திலுள்ள குருவிக்கரம்பையில் 26.11.1930ல் பிறந்தவர் சு.வேலு . தந்தை சுப்பையா தேவர். சித்த மருத்துவர். தாயார் சௌபாக்கியத்தம்மாள். இவர் களுக்குப் பிறந்த இரு மகன்களில் மூத்தவர் தெட்சிணா மூர்த்தி, இளையவர் வேலு. மூத்தவர்  மகன் தான் கவிஞர். ஏ.தெ. சுப்பையன் என்பதும் . ‘தீக்கதிர்’ ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவராகவும் இருந்த முதுபெரும் பொதுவுடை மையாளர் தோழர் கே.முத்தையா அவர் கள்தான் வேலுவின்  மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 வயது வரை ஆடு, மாடுகள் மேய்த் துக் கொண்டிருந்த வேலு, நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்தான் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பட்டுக் கோட்டை இராசா மடத்தில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித் தார். அப்போது அங்கு அவருக்கு ஆசிரி யராக இருந்த திரு. டேவிட் திராவிடர் கழக முன்னணி ஊழியர். வேலுவிற் குப் பள்ளிக் கல்வியோடு சமூக உணர்  வையும் ஊட்டினார். இந்தப் பின் புலனில்தான் வேலுவுக்கு     திராவிடர் கழகத்தின் மீது ஈர்ப்பும், பெரியாரின் மீது மதிப்பும்  ஏற்பட்டது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூ ரியில் இன்டர்மீடியட் படிப்பைத் தொடர்ந்தார் வேலு. இக்கால கட்டத்தில்தான் குத்தூசி குருசாமி யோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு  ஏற்பட  குத்தூசி குருசாமியாரின் எழுத்தின் மீதும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உருவாகியது.

20.8.1953இல் இராமாமிர்தம் அம்மையாரைக் கரம் பிடித்தார் வேலு. திருமணம் முடிந்து நான்கு ஆண்டு காலம் மாமனார் வை. மாணிக்கம் அவர்களின் மளிகைக் கடையில் பணி புரிந்தார். பிறகு தனது சொந்த ஊரான குருவிக்கரம்பையில் தனக்குச் சொந்த மான தென்னந் தோப்பையும், நிலங் களையும் கவனிக்கலானார். பேரா வூரணியில் “வேலு மெடிக்கல் ஹால்” என்னும் ஆங்கில மருந்துக் கடை யையும் நடத்தினார்.

பேராவூரணியில் தன் மாமனார் தன் மகள் பெயரில் அளித்த மனையில் வீடு கட்டி வை.மா இல்லம் என பெய ரிட்டு 1963இல் குடிபுகுந்தார். தந்தை வழிச் சொத்து, மாமனார் அளித்த சொத்து, சொந்த வணிகம் எனச் செல்வச் செழிப்போடும், திராவிடர் கழக ஈடுபாட்டோடும் வேலு அவர் கள் வாழ்ந்துவந்த காலத்தில், தந்தை பெரியாரைத் தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்தார். அப்போது தன் மனைவிக்குக் கட்டிய தாலியை தன் மனைவியின் விருப்பத் தோடு கழற்றித் தரச் செய்து, அதனைப் பகுத்தறிவு இயக்கத்திற்கு நன்கொடையாக பெரியாரிடம் வழங்கினார்.

1963ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். குத்தூசி குருசாமியுடன் இளமைக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டு சுயமரியாதை இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் களம் கண்ட குருவிக்கரம்பை சு.வேலு. பெரியாரின் இயக்கத்தில் இருந்து குத்தூசி குருசாமி பிரிந்த போது அவருடன் வெளிவந்து தொடர்ந்து இணைந்து பணியாற்றினார் அவ்வியக்கத்தின் திங்கள் இதழாக ‘குத்தூசி’யும் கிழமை இதழாக ‘அறிவுப் பாதை’யும் வெளிவந்தன.

11.10.65 அன்று குத்தூசி குருசாமி அவர்கள் மறைந்தார். அதற்கு அடுத்து 20.11.68ல் தன் மாமனார் வை. மாணிக்கம் அவர்களும் மறைந்தார். இந்நிகழ்வுகளுக்கு பின்னர் 1970ல் குருவிக்கரம்பை வேலு அவர்கள் சென்னை இந்திரா நகரில் குடியேறி னார். இக்கால கட்டத்தில் குத்தூசி யாரின் படைப்புகள், அவரைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியவற்றை திரட்டு வதில் ஈடுபட்டார். குத்தூசி குரு சாமியின் கையெழுத்துப் படிகள், நாட்குறிப்புகள், கடிதங்கள், அவர் பயின்ற நூல்கள் அனைத்தையும் குருசாமியின் மகள் ரஷ்யா வேலு அவர்களிடம் ஒப்படைத்தார். அதனை ஏற்று பாவைச் சந்திரன் ஒத்துழைப் போடு 1975இல் குத்தூசி குருசாமியின் வரலாற்றைப் படைத்தார்’.

இவ்வாறு பாலோடு கலந்த சர்க்கரையாகக் குத்தூசியாருடன் கலந்துவிட்ட குருவிக்கரம்பை வேலு அவர்கள் குத்தூசியாரின் படைப்புகள் அனைத்தையும் கொண்டுவரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். இவர் 22 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாறு, இதுதான் வேதம், சிந்து முதல் குமரி வரை, இவர்தான் புத்தர், அரப் பாவில் தமிழர் நாகரிகம், அரப்பாவில் தமிழர் ஆட்சி, சிந்துவெளித் தமிழகம், மீன், ஊன், கள்ளும் கலந்த தமிழ், வால்மீகி இராமாயணம், நாத்திகம் பேசும் சூத்திரச்சியே, குத்தூசி குருசாமி விலகியது ஏன்? முதலான நூல்கள் குறிப்பிடத் தக்கவை. இதில் குத்தூசி குருசாமி விலகியது ஏன் என்ற நூல் கடைசியாக வந்த நூலாகும்.இதை  எழுத ‘விடுதலை’, ‘அறிவுப்பாதை’ மற்றும் ‘குத்தூசி’ ஆகிய இதழ்களில் எழுதி வெளிவந்த கட்டுரைகளை அரும்பாடு பட்டு ஒன்று திரட்டினார்,

“குத்தூசியாரை இருட்டிப்புச் செய்ததில், வெற்றி பெற்று விட்டோம்” என்று இறுமாந்து நின்றவர்களின் பகல் கனவைப் பொய்யாக்கி, அவரைப் பற்றி முழு வரலாற்று நூலை முதன் முதலில் வெளியிட்டவர், குருவிக்கரம்பையார் அவர்கள்தான்’ என்று புதுகை.க. இராசேந்திரன் குத்தூசி குருசாமி விலகியது ஏன் என்கிற நூலில் குறிப்பிடுகிறார் .

இத்தகைய பணிகளுடன் சென்னை யில் ஆங்கில மருந்து கடை, நெய்தல் உணவு விடுதி என்ற வணிக நிறுவனங் களையும் சில காலம் நடத்திவந்தார் வேலு. வயது வேறு பாட்டையும், தலைமுறை இடைவெளியையும் கடந்து அனைவரிடமும் அன்பு பாராட்டிப் பழகக் கூடியவர் குருவிக்கரம்பை வேலு. தமிழ் நாட்டில் தொலைபேசி கட்ட ணம்அதிகமாக செலுத்தியவராகவும் குருவிக்கரம்பை வேலு அவர்கள் இருப்பரோ என எண்ணத் தோன்றும் வண்ணம் எப்போதும் மணிக் கணக்கில் தொலை பேசியிலேயே விவாதங்களையும், விமர்சனங்க ளையும் தொடருவார்.

வேலுஅவர்களுக்குத் திருமா வளவன், சித்தார்த்தன் என்ற இரு மகன்களும், ரஷ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்குச் சாதி மறுப்புத் திருமணம் நடத்தி வைத்துள் ளார் குருவிக்கரம்பை வேலு கல்லடி யும், சொல்லடியும் பட்டு இரத்தம் சிந்தி, சுயமரியாதை இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும் வளர்ந்தவர், தியாகங்கள் பல புரிந்து இயக்கத்தைக் கட்டிக் காத்தவர், தடம் மாறுகிற பகுத்தறிவு வாதிகள், பொதுவுடமையாளர்களி டையே இறுதி வரை தான் கொண்ட நாத்திகக் கோட்பாட்டிலும், பகுத் தறிவுப் பாதையிலும் தடம் மாறாத வராக இருந்து நம் நெஞ்சில் இடம் பிடித்தவர் குருவிக்கரம்பை வேலு அன்னாரின் அரும்பணி பணி மகத் தானது, போற்றுதலுக்குரியது. அம் மாமனிதருக்கு வீரவணக்கம்‘

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10308:2010-08-08-16-48-07&catid=1160:10&Itemid=427

சுயமரியாதை இயக்கப்போராளி குருவிக்கரம்பை வேலு மறைவு

சுயமரியாதை இயக்கப் போராளியும், முதுபெரும் எழுத்தாளருமான குருவிக்கரம்பை சு.வேலு 03.03.2010 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. பெரியாரின் இயக்கத் தளபதியாக இருந்த குத்தூசி குருசாமியுடன் இளமைக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டு சுயமரியாதை இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் களம் கண்டவர் குருவிக்கரம்பை சு.வேலு. பெரியாரின் இயக்கத்திலிருந்து குத்தூசி குருசாமி பிரிந்தபோது, அவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றினார் வேலு. இவரின் மனைவி இராமாமிர்தம். தாலி அடிமைச் சின்னம் என்பதால் தனது தாலியைப் பெரியாரிடம் பகுத்தறிவு இயக்கத்துக்காக மனமுவந்து நன்கொடையாக வழங்கியவர். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் இவர்களின் மகள் மற்றும் இரு மகன்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு இயக்கத்தின் சித்தாந்தத் தளபதி குத்தூசி குருசாமியின் வாழ்க்கை வரலாற்றை பகுத்தறிவு இயக்கத்தின் வரலாற்றுடன் இணைத்து உருவாக்கியவர் வேலு.

ஆரியர்கள் வருகைக்கு முந்திய சிந்துசமவெளியில் வாழ்ந்த‌ தமிழர்களின் மகத்தான வரலாற்றை, பண்பாட்டு மேன்மையை பல்வேறு நூல்களில் ஏராளமான ஆதாரங்களுடன் உருவாக்கியவர். மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை வேதங்களையும் உபநிஷதங்களையும் ஆதாரமாகக் கொண்டு இதுதான் வேதம், இவர்தான் புத்தர் என்று பல்வேறு நூல்களில் அம்பலப்படுத்தியவர். சுமார் 22 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 'சிந்து முதல் குமரிவரை', 'இதுதான் வேதம்', 'இவர்தான் புத்தர்' போன்றவை மிகவும் பிரபலமான நூல்கள். இப்பூவுலகில் வாழ்ந்த காலங்களில் ஆற்றிய களப்பணிகளோடு நின்றுவிடாமல், தான் இறந்த பின்பும் தனது உடல் பயன்தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், தனது உடலை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பணிகளுக்காக ஒப்படைக்க கோரியிருந்தார். அன்னாரின் எண்ணப்படியே அவர்தம் உடலை குடும்பத்தினர் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
http://www.orkut.com/Main#CommMsgs?tid=5456886422178807031&cmm=55724442&hl=en

0 comments:

Post a Comment

Kindly post a comment.