Tuesday, May 14, 2013

வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை ஏற்க மறுக்கும் பெற்றோர் !

வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளை சில பெற்றோர் திரும்ப ஏற்றுக்கொள்வதில்லை என தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக நல ஆய்வுக் குழுமம் (சிஎச்இஎஸ்) சார்பில், வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் குறித்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி அறிக்கையை வெளியிட, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து சிஎச்இஎஸ் திட்ட இயக்குநர் டாக்டர் பி.மனோரமா பேசியதாவது:

சென்னை இராயப்பேட்டையில் உள்ள மகாகவி பாரதியார் குழந்தைகள் இல்லத்துக்கு மாதந்தோறும் சராசரியாக 40 குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர். மே, ஜுன் மாதங்களில் இந்த எண்ணிக்கை 60-80 ஆக உள்ளது.

2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை வீட்டை விட்டு வெளியேறிய 2,204 குழந்தைகள் இக்காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
காப்பகத்தில் உள்ள குழந்தைகளில் 24 சதவீதத்தினர், பெற்றோரால் கொண்டு வந்து விடப்பட்டவர்கள். தங்களால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டுவிடுகின்றனர்.

வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புவதில்லை. அதே போல், வீட்டுக்குச் செல்ல விரும்பும் குழந்தைகளைச் சில பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை.
காப்பகத்தில் உள்ள குழந்தைகளில் 67 சதவீதத்தினர் 12 முதல் 18 வயதுடையவர்கள். அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் மட்டும் வழங்கினால் போதாது. அவர்களுக்கு உளவியல் ரீதியான உதவியும், தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

சென்னையில் ஒரு குழந்தைகள் நல வாரியம் (சிடபிள்யூசி) மட்டுமே உள்ளது. 2-வது வாரியம் தொடங்கப்பட வேண்டும். காப்பகத்தில் போதுமான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்

குழந்தைகள் நல வாரியத்துக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளில் வேற்று மாநிலத்தவரும் அதிகமாக உள்ளனர்.

ஆகவே, பல மொழிகள் தெரிந்த ஆலோசகர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

அமைச்சர் வளர்மதி பேசியது:

குழந்தைகளை காப்பகத்தில் நல்வழிப்படுத்துவதை விட, அவர்களைப் பெற்றோர்களின் பாதுகாப்பில் விட்டு, பெற்றோர்களுடன் இணைந்து அவர்களின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

சில பெற்றோர்களிடம் நான் பேசியபோது, சமூகத்தில் கௌரவம் குறைந்து விடும்; துடுக்குத்தனமான குழந்தைகள் எங்களுக்கு வேண்டாம். காப்பகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினர்.
எனவே, வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளின் மனநிலை குறித்த ஆய்வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அளிக்கப்பட வேண்டும்.

இந்த அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, சிஎச்இஎஸ் நிர்வாக மேலாளர் முத்துப்பாண்டியன், திட்ட மேலாளர் வி.எஸ்.வளவன், சமூக ஆர்வலர் பி.ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.                                                                               

நன்றி :- தினமணி, 14-05-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.