Monday, May 13, 2013

"யுனெஸ்கோ குல்லெர்மோ கனோ' விருது என்றால் என்ன ? இந்த ஆண்டில் பெறுபவர் யார் ?


                                   Ethiopian journalist Reeyot Alemu wins

                                    2013 UNESCO -  GUILLERMO CANO 

World Press Freedom Prize


எத்தியோப்பியாவில் பத்திரிகையாளராக பணியாற்றிவந்த 
ரியொட் அலிமு   ( REEYOT ALEMU )   இன்று சிறையில் உள்ளார். "மாற்றம்' எனும் இதழை நடத்திய இவர் சமூக அவலங்களையும் அரசியல் தகிடுதத்தங்களையும் எந்தவித அச்சமும் இன்றி ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றதன் பயனாக 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த உலக பத்திரிகையாளருக்கான "யுனெஸ்கோ குல்லெர்மோ கனோ' விருதினைப் பெறுகிறார். இவர் ஒரு பெண். இவர் 2010-இல் ஒரு பதிப்பகத்தினையும், ஒரு மாத இதழையும் சொந்தமாகத் தொடங்கினார்.

எத்தியோப்பியாவில் வாரந்தோறும் வெளியாகும் தேசிய செய்தி இதழான "ஃபெட்டி' எனும் இதழில் ஜூன் 2011-இல் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இன்று எத்தியோப்பாவில் உள்ள கலீட்டி சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு, மக்களை விழிப்படையச் செய்யும் வகையிலான கட்டுரைகள் எழுதியது மட்டுமே.




இலங்கையைச் சேர்ந்த லசந்தா விக்ரமசிங்கேவுக்கு 2009-ஆம் ஆண்டிற்கான "யுனஸ்கோ குல்லெர்மோ கனோ' விருது, அவரது இறப்புக்குப் பிறகு வழங்கப்பட்டது. 2009 ஜனவரி 8-இல் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களால் இலங்கையில் கொல்லப்பட்டார் லசந்தா. அதற்கான காரணம் வாசகர்களுக்கே புரிந்திருக்கும் 

சீனாவைச் சேர்ந்த இருவர் யுனஸ்கோ குல்லெர்மோ கனோ விருதினைப் பெற்றுள்ளனர். ஹா யூ 1997-இலும்,
செங் ழ்யோங் 2005-இலும், இந்த உயரிய விருதினைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் சிறை வைக்கப்பட்டனர்.

  1. ஏன், குல்லெர்மோ கனோ பெயரில் விருது வழங்கப்படுகிறது? 1925 ஆகஸ்ட் 12-இல் கொலம்பியாவில் உள்ள பகொடாவில் பிறந்த கனோவின் முழுப் பெயர் குல்லெர்மோ கனோ ஐசசா. தனது 27-ஆவது வயதில் "எல் எஸ்பக்டேடர்' எனும் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். குல்லெர்மோ கனோ, போதைப் பொருள் கடத்தும் மாபியா பற்றியச் செய்திகளைத் தனது இதழில் வெளியிட்டு வந்தார். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தைரியமாக தனது பணியைச் செய்து வந்தார். இவரது செய்திகள் கொலம்பிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தின. மாபியாக்கள் மத்தியில் இது பிரச்னையினை ஏற்படுத்தியது. 16 டிசம்பர் 1986-இல் அவரது பத்திரிகை அலுவலகத்திற்கு வெளியில் வைத்தே கனோ சுடப்பட்டார். அவர் இறந்து மூன்று வருடத்திற்கு பின், அந்த "எல் எஸ்பக்டேடர்ட பத்திரிகைக் கட்டடமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

1991-இல் நமீபியாவில் யுனஸ்கோவின் ஆதரவுடன் நடைபெற்ற ஊடகம் தொடர்பான கருத்தரங்கில் "வின்ட்ஹாக் பிரகடனம்' வெளியிடப்பட்டது. தனித்துவமான, சுதந்திரமான அமைப்பாக ஊடகங்கள் இருக்கவேண்டும் எனக் கூறும் இந்தப் பிரகடனம் உருவான நாளே மே 3. அதனையே கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறார்கள்.                                                                                                                                  

நன்றி :- தங்க.ஜெயசக்திவேல், திருநெல்வேலி, 

கருத்துக்களம் ,தினமணி, 13-05-2013 








                                                                                                                                 





0 comments:

Post a Comment

Kindly post a comment.