Sunday, April 21, 2013

மீள் வாசிப்பில் சூபிசம் - ஹெச்.ஜி.ரசூல் - -கீற்று ,Friday February 3, 2006

 
நன்றி :-
 

சூபிகள்- 
 
இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தபடுகின்றனர். உலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னை அர்த்தப்படுத்தியுள்ளது. தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம் என எல்லாவித கடமைறைவேற்றுதல்களிலும் ஒருவித கூட்டு வழிபாட்டுமுறையை முன்வைக்கிறது. மேல் - கீழ் / உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற இறுக்கமான சமுதாய அடுக்குமுறைகளின் அடிப்படையை தகர்த்து எல்லோரும் சமம் என்னும் பேருணர்வை பூமியெங்கும் பரப்பி, மனிதநேயத்தையும், மனித நீதிக்கான அடித்தளங்களையும் வலுவாக்கிக் கொண்டது.

இஸ்லாத்தின் அகம்சார் மறைஞான, ஆன்மீக உளவியலின் பரிமாணமாக சூபிசம் முக்கியத்துவம் பெறுகிறது. மனித மனங்களின் உள் ஆழங்களில் கழும் இறைதேட்ட பயணங்களினூடே இறைவனை அடியான் நெருங்கிச் செல்வதற்கான தயடங்களை சொல்லிச் செல்கிறது. சூபிகள் - ஆடம்பரத்திற்கு எதிராக எளிமை, பொய்மைக்கு எதிராக தூய்மை, சண்டைச்சச்சரவுகளுக்கு எதிராக சமாதானம், ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவம் என்கிற அடிப்படை உணர்வுகளுடன் இஸ்லாமிய ஆத்மஞான சிந்தனையை செலவிட ஆரம்பித்தனர். இஸ்லாமியத்தை முரண்பாடுகளுள்ள நடைமுறைத் தத்துவமாக ஆக்கப்பட்டதை சகிக்காமல் ஞானத்தை இந்த நடைமுறை இருப்பியல்வாழ்விற்கு அப்பால் தேடினர். முரணற்ற, நிரந்தரதன்மை கொண்ட உண்மையை எதிர்நோக்கினர். புலன் உணர்வுகளாலும் அறிவாலும் உணரமுடியாத அந்த உண்மையைத் தேடி தியானம் செய்ய முயன்றனர். இத்தகைய அனுபூதவியல் தன்மைகொண்ட இறைவனை அறிதலுக்கு, மனதை தூய்மைப்படுத்துதல் என்கிற உபாயத்தை முன்வைத்தனர். வஞ்சகம், ஏமாற்று, பொறாமை, கோபம், ஆணவம், மனோஇச்சை உள்ளிட்ட உணர்வுகளுக்கு அப்பால் பரிபக்குவ நல்உணர்வுகளால் சூழப்பட்ட தூயபேருண்மையை தரிசிப்பது என்பதான நடவடிக்கையை கோட்பாட்டுருவமாக்கினர். இதற்கான உடல்பற்றிய ஞானத்தை அறியமுற்பட்டனர். உயிரைகாக்க உடலை வலுப்படுத்துதல், பாதுகாத்தல், மரணமில்லா பெருவாழ்வை பற்றி சிந்தித்தல் என்பதாகவும் இது நிகழ்ந்தது.

வரலாறும் தத்துவமும்
இஸ்லாமியத்தை நபிகள் நாயகம் அவர்கள் பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்திய மக்கா. மதினா அரேபிய பிரதேசங்களில் இது துவக்கம் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபிகளின் உற்ற ஸகாபாக்கள் - அஸ்ஹாபுஸ் ஸ”பா - திண்ணைத் தோழர்களின் அறிமுகத்திலிருந்தே இதற்கான துவக்கக் கூறுகள் தென்படுகின்றன.

நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின் இமாம்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு இஸ்லாம் பேசிய ஒற்றுமை உணர்வு, சமதான சகவாழ்வு, வறியவருக்கு உதவுதல் உள்ளிட்ட மனிதப் பண்புகளின் சிதைவாக்கம் நிகழ்வுறத்துவங்கியது. உமய்யாக்கள், அபாசித்துகள் ஆட்சிக்காலத்தில் இதன் கோரம் விரிவானபோது இஸ்லாம் முன்வைத்த எளிமைசார்ந்த மனிதநேய வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் ஞானிகள் சிந்திக்கவும், செயல்படவும் துவங்கினர்.

சூபிசம் பல்வேறு நாடுகளின், சூழல்களின் தன்மைகளைக் கொண்டு முகிழ்த்தது. துன்னுன் மிஸ்ரி (கி.பி.796-862) மன்சூர் ஹல்லாஜ் (கி.பி. 858-922) கஸ்ஸாலி (கி.பி. 1058-1111) ஜுனைத் பகுதாதி, முஹையத்தீன் இப்னுஅல் அரபி (கி.பி.1165) அப்துல் காதிர்ஜிலானி (1078-1166) காஜா முகீனுதீன் சிஷ்தி, (1141-1236) ஷெய்கு ஷஹாபுத்தீன் ஸுக்ரவர்த்தி, மெளலவி ஜலாலுத்தீன் ரூமி (1207-1273) என உலக அளவில் சூபி ஞானிகள் முக்கியத்துவம் பெறத் துவங்கினர். இந்திய மண்ணில் அலிய்யுனுல் ஹஜ்வீரி, பரீதுத்தீன் கஞ்சேஷகா (1175-1265), அலாவுத்தெளலா சிம்னானி (1261-1336), ஷேக் ஷஹாபுத்தீன், சேக்ஜாமுதீன் அவுலியா (1325) ஷாஒலியுல்லா, ஷராபுத்தீன் அகமது மனோ உட்பட்ட முக்கியமான மெய்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது. சூபிச சிந்தனைகளின் பல்வேறு தத்துவப்போக்குகள் பின்பற்றுதல்கள் நிகழ்ந்ததன் விளைவாக சிஸ்தியா, காதிரிய்யா, சுக்ரவர்த்தி, நக்ஷபந்தியா, ஷாதிலிய்யா, உள்ளிட்ட ஞானவழி மார்க்க பிரிவுகள் (தரீகாக்கள்) உருவாகின. இஸ்லாமிய சூபிச சிந்தனைப் போக்கு பல்வேறு கருத்துப்போக்குகளை முன் நிறுத்திய தத்துவ இயலாகவும் பரிணமித்தது.

இறைவனை ஒருவன் என்பதை ஏற்றுக்கொண்ட சூபிகள் இறைவனை அறிதல் குறித்த பாதையைப் பற்றி வித்தியாசமான கருதுகோள்களைக் கொண்டிருந்தனர். 'வஹதத்துல் ஷ”ஹுத் ' என்னும் 'ஏகஉள்ளமை ' உடையவன் இறைவன் மட்டும்தான். இறைவன்வேறு, படைப்பினங்கள் வேறு, இறைவன் இறைவன் தான், நீ நீதான், நீ-இறைவனில் ஒன்றாக கலக்கமுடியாது. இறை நெருக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது ஜுனைத் பக்தாதி. முஹயத்தீன் இபுனுல்அரபி, அலிய்யுப்னுல் ஹஜ்வீரி உள்ளிட்ட மெய்ஞானிகளின் கருத்து நிலை.

இறைவனைப் படைப்பினங்களில் உணரலாம். அவனிலிருந்தே எல்லாமும் வெளிப்படுகிறது. இறைவனைத் தெரிந்து கொள்ளும் வழி என்பதே அவனில் ஒன்றிவிடுவதே, உலகியல் உணர்வை விட்டு வெளியேறி விடுதலைபெறும் அகமே, நிரந்தர இன்பத்தில் திளைக்கும். 'தான் ' என்பதும் உள்ளமை உடையது, இறைவனில் ஒன்றும்போது 'கைரியத் என்னும் உருவெளித்தோற்றம் பார்வையையிட்டு விலக, ஐனியத் என்னும் அசல்மூலத்தில் மூழ்கி அத்தன்மைகள் தானில் தங்கிவிடும், 'தன் உள்ளமையில் இறைவனின் உள்ளமை பிரதிபலிக்கிறது ' என்பது வஹதத்துல் உஜூத் என்னும் பிறிதொரு கருத்து நிலையாகும். இஸ்லாமிய மரபுவழி உலமாக்கள் இக்கருத்துகளை தீவிரமாக எதிர்த்ததின் விளைவாக 'அனல்ஹக்கு ' 'நானே உண்மை ' (நானே இறைவன்) என்பதாக தத்துவ உச்சலைக்கு சென்று பேசிய சூபிமன்சூ‘ ஹல்லாஜ் ரகுமத்துல்லா கொல்லப்பட்டார். பல சூபிகள் நெருக்கடிக்கு ஆளாகினர்.

சூபிகள் புறவடிவ நிலைபெற்ற வணக்கமுறைகளைத் தாண்டி. அகவணக்கமுறையால் இறைவனை உணரலாம் எனப் பேசினர். ஷரீஅத் என்னும் புறவடிவ ஒழுங்குகளிலிருந்து பிற நிலைகளாக மனதால் இறைவனை தியானிக்கிற நெறியினை வழிமுறைகளாக முன்வைத்தனர். உலகியல் ரீதியாக, புறவடிவத்தில் நிகழும் உடல்ரீதியான இஸ்லாமிய அடிப்படை வணக்கநெறிகள் 'ஷரீஅத் ' இறைநெருக்கம் உருவாக்க புலன்களை கட்டுப்படுத்தி திக்றுகள், தஸ்பீகுகள் (இறைநாமங்கள் உச்சரித்தல்) வழி தவலையில் அகவணக்கம் புரிதல் 'தரீகத் ' - சித்தலையில் ஆன்மாவைக் கொண்டு இறையின் தெளிவை உண்மையை உணர்தல் 'ஹகீகத் '- பேசா அனுபூதி நிலையில் இறைதரிசனத்தை பெறுதலும், 'பனா ' வாகி இறைவனில் கலத்தல் 'மஅரிபத் ' என்பதாகப் படிலைகள் பேசப்பட்டன.

தரீகத் லையில் ஷரீஅத் விடுபட்டுவிடும் என்கிற நிலைப்பாடானது, இஸ்லாமியர்களுக்கு வரையறுத்துக் கட்டாயமாக்கப்பட்ட ஒருநாளைக்கு ஐந்து தடவை 'தொழுகை 'யின் மூலமாக இறைவனை வணங்கவேண்டும் என்கிற நிறுவப்பட்ட கடமையை மறுத்துவிடுகிறது. எனவே மரபு வழி இஸ்லாமிய சிந்தனைக்கும், சூபிகளின் சிந்தனைக்கும் இடையே முரண் உருவாகியது. இதைத்தவிர்க்கவே சூபிஞானிகளில் சிலா ஷரீஅத்-தரீகத் இரண்டிற்குமிடையே தரீகத் நிலையிலும் ஷரீஅத் விடுபடாது எனவும் சில இணைப்பு நிலைகளை மேற்கொள்ளவும் முயற்சித்தனர்.

அறிதலின் கோட்பாடு
சூபிசம் அறிதல் கோட்பாடு குறித்த சில பார்வைகளை நெகிழ்ச்சியாக முன்வைக்கிறது. மனிதனுக்குப் புறத்தே இயங்கிக் கொண்டிருக்கிற உலகை, நிகழ்வுகளின் தொகுப்பை அறிந்து கொள்ளச் சில நடைமுறைகளை கவனத்திற்கொள்ளச் சொல்கிறது. தர்க்கமும், பகுத்தறிவும் இணைந்த தத்துவவியலின் கூறுகளை பரிந்துரை செய்கிறது. மனித உணர்விற்கும், பொருளின் இருப்பிற்குமான உறவுலையைப் பேசுவதாகவும், புலனுணர்வு சார்ந்த அறிவுவாதம், அனுபவாதம் ஒருங்கிணைந்தததாகவும் இது அமைகிறது.

இல்முல்யகீன் (அனுமான ஞானம்), ஐனுல் யகீன் (தரிசனஞானம்) ஹக்குல் யகீன் (அனுபவஞானம்) என்பதாக அறிதலின் வகையினங்களை சூபியிசம் பகுத்துக் காட்டுகிறது. தூரத்தில் புகைவந்து கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணுக்கு நெருப்பு புலப்படுவதில்லை. புகையை வைத்துக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் கொள்வது இல்முல்யகீன். இது இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலான உறவு நிலை குறியீடாகும் ஐனுல் யகீன் - எரியும் நெருப்பை நேரடியாக கண்ணால் தரிசிப்பதாகும். இது இறைவனுக்கும் மெய்ஞானிகளான எனப்படும் வலிமார்களுக்கும் இடையிலான உறவின் வகையைக் குறிப்பதாகும். எரியும் நெருப்பை தொட்டுப்பார்த்து அல்லது அதனுள் சென்று நெருப்பு சுடும் என்பதை நடைமுறைரீதியாக உணரும் அனுபவ ஞானத்திற்கு பெயர் ஹக்குல்யகீன். இது இறைவனுக்கும் நபிமார்களுக்குமான பிணைப்பை பற்றி பேசப்படுகிற சொல்லாடலாகும்.

உலகம்-உயிர்-மனம் பற்றிய கருத்தாக்கம்

உலகம் பற்றிய சிந்தனைமுறையிலும் சூபிசம் நான்குவித உலகங்களை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. சமகால மனித உலகம் நாசூத், மனிதஜீவராசிகள் இல்லாத ஒளியால் படைக்கப்பட்ட இனமான மலக்குகள் என்னும் வானவர்களின் உலகம் மலக்கூத், சக்தியின் உலகம் ஜபரூத் இறைவனில் தோயும் உலகம் லாகூத் என்கிற வகையிலே விரிவான தனித்த அடையாளங்கொண்ட உலகங்கள் படைத்துக் காட்டப்படுகிறது.

உயிர் பற்றிய கோட்பாட்டுச் சிந்தனையும் சூபிசம் முன்மொழிகிறது. உலகின் உயிர்கள் பற்றிப் பகுப்பாய்வு செய்து அதன் தனித்தன்மைகளைக் கண்டறிந்து விளக்க முற்படுகிறது. ஜடப்பொருட்களின் உயிர் ரூஹுல்ஜிமாத்து என்று அழைக்கப்படுகிறது. ஜடப்பொருள்களுக்கு உயிர் உண்டு. ஆனால் வளர்ச்சி கிடையாது. இடப்பெயாச்சித் தன்மையும் இல்லை. இங்கே பூமியின் ஈர்ப்பு விசை உயிர்த்தன்மை சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தாவர இனங்களின் உயிர் ரூஹுல் நபாத்து என்பதாகும். விதையிலிருந்து, முளைகள், கிளைகள், செடிகள், கொடிகள், மரங்களாக வளர்கின்றன.. உயிர்த்தன்மை இருப்பதாலேயே செடி கொடிகள் வளர்கின்றன. ஆனால் இவ்வுயிருக்கு ஓரிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் லைகொள்ளும் தன்மையிலான நகரும் தன்மை கிடையாது. மாறாக இவற்றின் வேர்கள் மட்டுமே பூமிக்குள்ளே நகர்ந்து செல்கிறது. ரூஹுல் ஹைவானி என்பது விலங்கினங்களின் உயிர்குறித்த சொல்லாக்கமாகும். இதற்கென சில தனித்த பண்புத்தன்மைகள் உண்டு. இவ்வுயிர்களுக்கு வளர்ச்சி உண்டு. ஓரிடம் விட்டு வேறொரிடம் நகர்வதற்கான ஆற்றல் உண்டு. ஆனால் உழைப்பின் மூலமாக பொருளுற்பத்தி செய்யும் படைப்புத்திறனும் கிடையாது. மனித உயிரை குறிப்பதற்கு ரூஹுல் இன்சானி சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது. இடம்பெயர்தல், வளர்ச்சி, சிந்தனை, உழைப்பு, உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய கருத்தாக்கமாக இது விளங்குகிறது.

மனம் என்னும் கருத்துருவாக்கம் பற்றியும், அது பல்வேறு உணர்வு நிலைகளால் பின்னிப் பிணையப்பட்ட விதம் குறித்தும் சூபிஞானக் கோட்பாடு அதிகம் பேசியது. ஏனெனில் அகமியஞான உணர்வுலை முற்றிலும் நப்ஸ் எனப்படும் ஆன்மா சம்பந்தப்பட்ட கருத்து நிலையிலிருந்தே உருவாகி வளர்கிறது. எல்லாமும் கடந்த இறைநிலை மெய்மையோடு மனிதமனம் இரண்டறக் கலத்தலே இஸ்லாமிய அனுபூதி சிந்தனையின் வழிமுறை. எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லை கடந்த ஒன்றோடு சேர்ந்து ஒன்றாவது என்பதாக இதற்கு அர்த்தங்கள் உண்டு. அதீத உலகியல் நுகர்ச்சிக்கு மாற்றாக உலக இன்பங்களிலிருந்து விடுபட்ட ஆன்மா பிழைபொறுக்க (தவ்பா) வேண்டி இறையிடம் பூரண நம்பிக்கை (தவக்கல்) கொள்கிறது.

சூபிக் கோட்பாடு மனித ஆன்மாவின் இயல்புகளை ஏழு வகைகளாக பாகுபடுத்திச் சொல்கிறது.

தீயகெடுதியைத் தூண்டுகிற ஆன்மா நப்ஸ் அம்மாரா, மிருககுணம் நீங்கி நற்குணம் திரும்பும் ஆன்மா நப்ஸ் லவ்வாமா, நன்மையான காரியங்களை செய்யும் ஆன்மா நப்ஸ் முல்ஹுமா அமைதி நிலையில் இருக்கும் ஆன்மா நப்ஸ் முத்மஇன்னா இறைச்சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருக்கும் ஆன்மா நப்ஸ் ராளிய்யா, தன்னைத்தானே நிறைவு பெற்ற ஆன்மா நப்ஸ் மரளிய்யா, இறை முழுமையாக ஒளிர்ந்த ஆன்மா நப்ஸ்காமிலா என்பதாக இந்த படித்தரங்கள் விவாதிக்கப்படுகின்றன.

எந்த ஒன்றையும் சொந்தமாக்காமலும், எந்த ஒன்றிற்கு சொந்தமாகாமலும் இருத்தல் என்பதும் நீ உன்னில் இறந்துவிடும்படி இறைவன் உன்னைச் செய்து அவனில் உன்னை வாழும்படி செய்தல் என்பதும் சூபிசத்தின் அடிப்படை. ஆன்மாவின் தூய்மை, நன்மை / தீமைகளை பகுத்துணரும் வல்லமை அன்பினால் அதனை சுடர்விடச் செய்தல் என்பதான நுண்ய கருத்தாக்கங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

இந்திய பண்பாட்டுச் சூழலில் சூபிமார்க்கம் ஒருபுறம் இறைநேசத்தையும் மறுபுறம் மனிதகுலநேசத்தையும் அடிப்படையாகக் கொண்டே வெளிப்பட்டுள்ளது. எளிமை, சுயஅடக்கம், பரந்தநோக்கு, சமயஒற்றுமை உணர்வு உட்பட்ட லட்சியங்களின் வடிவமாக இது செயல்பட்டுள்ளது.

தமிழ் சூபிக்கவிஞாகளின் சிந்தனையுலகம்
இஸ்லாமிய சிந்தனையுலகம் மொழியின் மூலமாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சூபிக்கவிஞர்கள் தத்தம் சிந்தனைகளை எண்ணற்ற பாடல் தொகுப்புகளாக தமிழுக்கு வழங்கியுள்ளனர். இஸ்லாமிய இலக்கியமரபில் சுட்டிக்காட்டப்படுகிற பெருங்காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் தவிர சூபிச இலக்கியங்கள் தமிழ் இஸ்லாமிய மக்களால் இன்றளவும் அக்கவிஞாகளின் சமாதிகளிலும் தர்காக்களிலும் நினைவூட்டப்படுகின்றன. குறிப்பிட்ட வட்டாரத்தில் இலங்குகின்ற சூபிகளின் பாடல்களை அம்மக்களின் பிறப்பு, இறப்பு விழாக்கால விஷேச சமயங்களில் வீடுகளில், கூட்டிசையாகப் பாடப்படுகின்ற நிகழ்வும் கூட நடைபெறுகிறது.

திருக்குர்ஆனில் ஆழ்ந்த அறிவும் ஞானமும், நபிமார்கள் வரலாறு பற்றிய தெளிவும், நபிகள் நாயகத்தின் வாய்மொழி, செயல்கள் சார்ந்த ஹதீசுகள், இஸ்லாமிய மரபுகள், பிக்ஹு சட்டங்கள் என இஸ்லாமிய சிந்தனையுலகம் விரிந்து கிடக்கிறது. இவற்றோடு தமிழ்சிந்தனைமரபில் நிலைபெற்றிருந்த பல்வேறு வகைப்பட்ட சிந்தனைமரபுகளையும், புராதன விஞ்ஞான அறிவின் நுட்பங்களையும் உள்வாங்கிய பேரறிஞர்களாகவும் சூபிகள் நிலை பெற்றிருந்தார்கள். அணுவிலிருந்து துவங்கி பிரபஞ்ச பொருட்களிலும் படைப்பினங்களின் நுட்பங்களிலும் இறைவனின் ஆற்றலைக் கண்டு பரவச நிலைபெறுதல் ஒருபுறமும். மனிதபிறப்பு, மனித உருவின் உருவாக்கம் பற்றியும் சிந்தித்தல் உடலியல் ஞானம் பற்றிய அறிவினைத் தேடுதல் மறுபுறமும் நிலைபெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

இந்த உடலுக்குயிர் வந்த தெப்படி சிங்கி - அது

தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா

தன்னை அறியுந் தலமேது சொல்லடி சிங்கி - அது

கண்டையான நடுலை யல்லவோ சிங்கா

(தக்கலை. பீர்முகமது சாகிபு)


சரக்கலை ஞானம் இவ்வாறே பாடல்களின் மூலமாக முக்கியமாகப் பேசப்படுகிறது. சரம் என்பதே சுவாசக்கலை பற்றிய விஞ்ஞானமாகும். ஒரு நிமிடத்திற்கு எத்தனை சரங்கள் ஓடுகிறது இடக்கலை, வலக்கலை ஓடும்சரத்தை சுழிமுனைக்குக் கொண்டு நிறுத்துவது எப்படி என இக்கலையின் நுட்பங்கள் சூபிகளால் பேசப்பட்டுள்ளது.

இடது நாசி வழியாக ஓடும் சரம் (சுவாசம்) இடகலை (சந்திரக்கலை); வலது நாசி வழியாக ஓடும் சரம் பிங்கலை (சூரியக்கலை) நடுவில் நிற்கும்சரம் (கண்டையான நடுலை) சுழிமுனை (அக்கினி கலை) எனவும் முக்கிய மூன்று நாடிகளைப் பற்றி சூபிகள் பேசுகின்றனர். இத்தகைய மூச்சுப்பயிற்சியின் மூலம் நீண்டநாள் உயிருடன் வாழும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளவும் சூபிகள் முயன்றுள்ளனர்.

இதுபோன்ற வர்மக்கலை விஞ்ஞானத்தின் அடிப்படைகளை தெரிந்துள்ளவர்களாகவும், போகஞானம், யோகஞானம் சித்த மருத்துவ மரபு பற்றியும் பல்வித தளங்களில் பேசுபவர்களாகவும் சூபிகள் அடையாளம் தெரிகின்றனர்.

நவீன விஞ்ஞானம் இவற்றில் பலவற்றை நிராகரிக்க கூடும், சிலவற்றை ஏற்கக்கூடும். இன்னும் பரிசீலிக்கப்படாதவைகளும் உண்டு. எனினும் இன்றைய விஞ்ஞானத்தின் மூலவேர்கள் அவற்றிலுண்டு. 'விஞ்ஞானம் ' என்கிற அறிவுசார்ந்த வன்முறை என்னும் கருதுகோளைத்தாண்டி உளவியல்சார்ந்த வாழ்க்கை நம்பிக்கைகளும் அவற்றில் இணைந்திருப்பதைப் பார்க்கலாம்.

சூபிகளின் சமூகச்  செயல்பாட்டு இயக்கம்
சூபிகளின் இறையியல் கருத்து தனிமைப்பட்ட, வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றானதுபோல் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படை புறவாழ்வில் மனிதனை சிறுமைப்படுத்தும் குணங்களை விட்டொழித்து அகவய உயர்பண்புகளின் உணர்வுகளால் மனத்தை தூய்மையுறச்செய்வதே ஆகும். இதன் இன்னொரு பரிமாணமாகவே மனிதகுலத்திற்கு பணியாற்றும் பண்பினை சூபிகள் முதன்மைப்படுத்தினர். எனவே சூபிகளின் சமூக செயல்பாட்டு இயக்கம் குறித்தும் இவற்றினூடே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

இந்திய மண்ணில் வர்ணாசிரம மேலாதிக்கத்தாலும் சாதிப்படிலை வரிசை முறையினாலும், மனித உடம்பையே தீட்டெனச் சொல்லி ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் சூபிகளின் சகோதரத்துவ உணர்வு ததும்பிய சமயப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றனா.

குணங்குடி மஸ்தான் சாகிபு, தக்கலை பீர்முகம்மது சாகிபு, கோடை நகர மெய்ஞானி ஷெய்கு முகியத்தீன் மலுக்குமுதலியார், காலங்குடி இருப்பு மச்சரேகைசித்தர், அய்யம்பேட்டை அப்துல்கனி சாகிபு, காயல்பட்டணம் செய்யது முஹம்மது காதி‘, கயாபுரம் ஷெய்கு அப்துல்காதர் வாலைமஸ்தான் யாகோபுசித்தர் தென்காசி இறசூல்பீவி, கீழக்கரை ஆசியாவும்மா இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோரின் வாழ்க்கை, பாடல் மரபு வழியாக இந்த உண்மைகளை நாம் உணரமுற்படலாம்.

பாரசீக பெண்சூபியான ராபியத்துல் அதவியா மனிதகுலத்திற்கு தொண்டாற்றும் நற்செயலை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

நீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள் என்று

தனக்காக அன்றி பிறருக்காகவே எரிந்து எரிந்து ஒளிதருகின்ற விளக்கு போலவும், சீர்வாயாக இருந்து கொண்டே கிழிந்த ஆடைகளைத் தைக்கும் ஊசியைப் பேலவும் தன்னலமற்று மனிதகுல மேன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்பதாகவும் இது அமைகிறது.

இந்திய சூபிஞானி ஷெய்கு ஜாமுத்தீன் அவுலியா (கி.பி. 1325) 'எல்லாமக்களுக்கும் சாந்திவேண்டும் ' எனவும் மன்பதையின் நலனுக்காக இறைவனை நேசிப்பவரும், இறைவனுக்காக மன்பதையே நேசிப்பவரும் இறைவனின் நெருக்கத்துக்கு உரியவர்கள் எனவும் பேசினார்.

வடஇந்திய பக்திமார்க்கத்தின் முக்கிய மூலவரான கபீர் (1838-1440) இந்து முஸ்லிம் சிந்தனை இணைப்பின் முக்கிய சரடாகத் திகழ்ந்தார். சமயங்களின் பெயரால் புறமத அடையாளங்கள், (குறியீடுகளை முன்வைத்து நடைபெறும் சண்டைகளுக்கும் அயாயங்களுக்கும் முடிவுகட்ட ஒரு சமரச வழித்தடத்தை உருவாக்கினார்

அன்பு ததும்பும் ஞானநெறியின் உயர் நிலை அடைந்தவர்கள் புறசமய அடையாளங்களைந்து, வேற்றுமை பாராட்டும் பண்பினை மறுப்பவர்களாக, இருந்துள்ளனர். பரந்த பண்பட்ட நோக்கில் எல்லாமும் அவர்களுக்கு ஒன்றாகவே தொந்துள்ளது. எனினும், சைவ, வைணவ சித்தரீய குறியீடுகளின் தாக்கம் பெற்ற சூபிகளின் பாடல்களை இஸ்லாமிய சிந்தனை வட்டாரத்திற்குள் பிறசமயக் குறியீடுகளையும் உள்வாங்க முயற்சித்தபோது சமயநோக்கின் விளைவாகவும் கருதலாம் 'ஒவ்வொரு வகுப்பினருக்கும் நாம் ஒரு திருத்தூதரை அனுப்பினோம் ' (16:36) என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் இந்துமக்களையும் 'அஹலேகிதாப் ' என்னும் வேதம் பெற்ற மக்கள்தான் என்று சூபிஞானிகளில் ஒரு பிரிவினர் கூறியுள்ளதை இங்குநாம் கவனத்திற் கொள்ளலாம்.

சூபி இசை மரபு
இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதாக கருதிக் கொண்டிருந்த வேளையில் இமாம் கஸ்ஸாலி இசை குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினார். இஸ்லாமிய வரலாற்றின் துவக்கக்காலங்களில் திருக்குர்ஆன் ஓதுவது காதில் விழாமல் தடுப்பதற்காக முரசுகள் கொட்டப்பட்டன. மதுவில் மயங்கிக் கிடந்தவர்கள் நரம்புக் கருவிகளின் இசையை போதைக்கு பயன்படுத்தினார்கள். ஆனால் இந்த நோக்கங்கள் அற்ற நிலையில் இசை மரபைப் பயன்படுத்த வழிகாட்டுதல்கள் சொல்லப்பட்டன.

குரல், நாதம், பாடல், உணர்ச்சி என்கிற நான்கு பகுதிகளின் சேர்க்கையாக இசை உருவாகிறது. குயில், உள்ளிட்ட உயிரினங்கள் எழுப்பும் ஓசையும் மனிதக் குரலின் ஓசையும் குரலின் அடையாளங்களாக வெளிப்படுகின்றன. இது உணர்ச்சி சார்ந்தும், மொழி வழி அர்த்தம் சார்ந்து இயங்குகின்றன. புல்லாங்குழல், யாழ், மத்தளம் என கருவிகள் துணையோடு எழுப்பப்படும் ஓசை நாதமாக வெளிப்படுகிறது. தொட்டிலில் அழும் குழந்தை தாயின் தாலாட்டைக் கேட்டு கண்ணுறங்குவது இசை மனரீதியான மாற்றத்தை உருவாக்குகிறது என்பதற்கான சாட்சியாகும். குழந்தையிடம் அழுகை தூக்கமாகும் விசித்தரம் நிகழ்கிறது.

பாலைவன வாழ்வில் ஒட்டகமோட்டிகளின் பாடல்கள், கஃபாவை தரிசிக்க நடைபயணமாய் செல்கையில் போர்க்காலங்களில் எதிரிகளை தாக்குகையில், துக்கங்கள், சந்தோசங்களை வெளிப்படுத்துகையில் இறையின் மீது மீளாக்காதல் கொண்ட வஜ்த் நிலையில் பேரின்ப காட்சியான முஸாதபா நிலையில் உருகிப்பாடும் இசை என வாழ்வின் விடுபடா சுவடுகளாக இஸ்லாமிய இசை மரபு மாறியிருந்ததையும் இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைகள் சுட்டிக் காட்டுகிறது. தாவூத் நபியின் குரலைக்கேட்க பறவைக் கூட்டமெல்லாம் அவரின் தோள்களிலும், தலையிலும் உட்கார்ந்திருக்கும் என்பதையும், உயிரினங்கள், மனிதர்கள், ஜின்கூட்டம் தாவூத் நபியின் குரலில் உறைந்து போயிருந்ததான வாய்மொழி வரலாற்று குறிப்பையும், யூனானி மொழியில் வழங்கப்பட்ட சபூர் வேதம்கூட இசை வடிவத்தில் அமைந்திருந்ததையும் இவ்வேளையில் கவனத்தில் கொள்ளலாம்.

பாரசீக இசைமரபின் மூல ஊற்றாகத் திகழ்ந்தவர்களில் மெளலானா ரூமிக்கு முதன்மைப் பங்குண்டு எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாகி பதினொன்றாம் நூற்றாண்டில் சாமா இசை மரபு வடிவம் பாரசீகத்திலிருந்து துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் இந்திய துணை கண்டங்களில் பரவியது. மெளலானா ரூமியின் மெளலவியாதரீகா மத்திய ஆசியாவில் இதனை பரப்பியது. 13-ம் நூற்றாண்டி ல் வட இந்தியப் பகுதியில் அமீர்குஸ்ருவின் மூலம் இந்த இசைமரபு உயிர்ப்பிக்கப்பட்டது. பாரசீக இசை மரபை, தெற்காசிய இசை மரபுடன் இணைத்தொரு புதுவடிவமாய் கவாலி இசை வடிவம் அறிமுகமானது. சிஸ்தி தரீகா இந்த இசை மரபுக்கு முக்கியத்துவம் வழங்கியது. உருது, பஞ்சாபி, சிந்தி மொழி வழியாக இந்தப் பயணம் நிகழ்ந்தது.

சூபி இசை மரபின் தொடர்ச்சியாக இந்திய இசை மரபின் மேதையாக விளங்கிய ஹஸரத் இனயத்கானை (1882-1927) குறிப்பிடலாம். கிழக்குலகையும், மேற்குலகையும் இசை மரபால் ஒன்றுபடுத்தி ஐரோப்பிய நாடுகளிலும் இவரது இசைப்பயணம் கழ்ந்துள்ளது. சூபிமறைஞான இசை மரபின் வாஸ’பா, ஸ’க்‘ உள்ளிட்ட வடிவங்களும் வெவ்வேறு இசை அடையாளங்களாக உருமாறியுள்ளன.

தமிழக முஸ்லிம்களுக்கும் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, அரபி, உசேனி ராகங்களின் பூர்வீக வரலாற்றிற்கும், மலபாரின் கேரள மாப்பிள்ளை நாட்டார் இசை மரபிற்கும் விரிவான உறவுகள் உண்டு. தமிழ் முஸ்லிம்களின் மெளலூதுகள், பைத்துகள், பதங்கள் உள்ளிட்ட வடிவங்களோடு தமிழ் சூபிஞானிகளான தக்கலை பீர்முகம்மது சாகிபு, குணங்குடிமஸ்தான் சாகிபு, செய்கு முகியத்தீன் மலுக்கு முதலியார் என்னும 5 ஞானியார் சாகிபு உள்ளிட்ட பலபல இசைவாணர்களின் வெண்பா, விருத்தம் சார்ந்த பா வடிவங்களும் கீர்த்தனைகளும் சூபி இசை மரபின் அரிய பொக்கிஷங்களாகும். வரிகளாய் வார்த்தைகளாய் வாழும் இவை வடிவமாய் உருமாற்றம் பெறும்போது நிகழும் அற்புதங்களை மனதால் உணர மட்டுமே முடியும்.

தன்னை வருத்திப் பிறருக்கு உதவுதல், இதன்மூலம் இறை நேசத்திற்கு உரியவர்களாக உயர்தல், அனைத்து மக்களுக்குமான நன்மை, உயர்வு, விடுதலையை உருவாக்குதல் என்பதான அடித்தளங்களில் சூபிகளின் சிந்தனையும், இசை மரபும் செயல் வடிவங்களும் அமையப் பெற்றுள்ளன. நம்மை பண்பாட்டு ரீதியாக முன்னோக்கி நகர்த்தும் உந்துசக்தியாகவே இவை திகழ்கின்றன.----

mylanchirazool@yahoo.co.in

Copyright:Thinnai.com 

0 comments:

Post a Comment

Kindly post a comment.