Saturday, April 20, 2013

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல் !

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு ஊடுவியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் ஏப்ரல் 15-ம் தேதி இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளது.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்தும் தங்கியுள்ளனர். சுமார் 50 வீரர்கள் அடங்கிய குழு இந்த ஊடுருவலை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர்கள் கூடாரம் அமைத்த பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸாரின் (ஐடிபிபி) முகாம் உள்ளது.

சீனாவின் ஊடுருவல் குறித்து தெரியவந்ததும் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப் படை சார்பில் கூட்டம் நடத்த சீன தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சீன ராணுவத்தினர் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இது தொடர்பாக அப்படைப் பிரிவின் வடக்குப் பிரிவு கமாண்டர் கர்னல் ராஜேஷ் காலியா கூறியது: கிழக்கு லடாக் பகுதியில் சரியான எல்லையை வரையறை செய்வதில் பிரச்னை இருப்பதால் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் இருதரப்பு பேச்சு மூலம் சுமுகமாக தீர்க்கப்படும் என்றார். சீன ஊடுருவல் குறித்து முழுமையாக விளக்கமளிக்க அவர் மறுத்துவிட்டார்.

ஊடுருவல் நடைபெற்ற பகுதி கடுமையான குளிர் நிலவக் கூடிய இடமாகும். அங்கு மக்கள் நிரந்தரமாக வசிப்பது இல்லை. அதே நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாம் அங்கு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் லடாக்கையும், சீனாவின் யாங்காண்ட் பகுதியையும் வர்த்தக ரீதியாக இணைக்கும் வழியாக அது உள்ளது. அங்கு மைனஸ் 30 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவும்.

சீன ஊடுருவலால் பதற்றம் ஏற்பட்டுள்ள பகுதியை நோக்கி இந்திய ராணுவத்தின் லடாக் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவு முன்னேறியுள்ளது.

ஏற்கெனவே இந்திய எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது, இந்தியப் பகுதியை சொந்தம் கொண்டாடுவது என பல்வேறு வழிகளில் சீனா தொந்தரவு அளித்து வருகிறது. இதனால் சீனாவுடனான உறவு எப்போதுமே சுமுகமானதாக இந்தியாவுக்கு  இல்லை. இந்த நிலையில் சீன ராணுவம் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவியது இருநாடுகள் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.                                                                                     
நன்றி ள்- தினமணி, 20,ஏப்ரல், 2013                                                                           


0 comments:

Post a Comment

Kindly post a comment.