Friday, April 26, 2013

சென்னை- பெங்களூர் டபுள் டெக்கர் ரயில்சேவை தொடக்கம் !



சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையிலான முதல் டபுள் டெக்கர் ரயில் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ரயில் சேவையில் 520 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.

சென்னை - பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள டபுள் டெக்கர் ரயில்தான் தென்னிந்தியாவில் இயக்கப்படும் முதல் டபுள் டெக்கர் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 7.25 மணிக்கு டபுள் டெக்கர் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் ஒவ்வொரு நாளும் சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு 1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

டபுள் டெக்கர் ரயிலின் 2 அடுக்குகளிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். மாடி பகுதியில் உள்ள இருக்கைகளுக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாதாரணமாக ஏ.சி. சேர்களில் 72 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

ஆனால் இந்த ரயிலில் 120 பேர் ஒரு பெட்டியில் பயணம் செய்ய வசதி உள்ளது. இருக்கைகள் சாயும் விதமாக சொகுசாக அமைக்கப்பட்டுள்ளன. 10 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் 1200 பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த ரயில் 6 மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைகிறது.

பெங்களூர் செல்லக்கூடிய சதாப்தி அதிவேக ரயில் வழியில் எங்கும் நிற்காது. கட்டணமும் அதிகம். ஆனால் டபுள் டெக்கர் ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், கன்டோன்ட்மென்ட், பெங்களூர் நகரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் உள்ள 10 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாகும். இதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் எதுவும் கிடையாது.

அதனால் சாதாரண டிக்கெட் பெற்றுக் கொண்டு இதில் ஏறினால் பல மடங்கு அபராதம் விதிக்கப்படும். வியாழக்கிழமை முதல்நாள் என்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை.

சென்னை - பெங்களூர் இடையிலான டபுள் டெக்கர் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று 2012-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தச் சேவையைத் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் டபுள் டெக்கர் ரயிலுக்கான சோதனை ஓட்டம் பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வரை இயக்கப்பட்டது.

பெங்களூரில் டபுள் டெக்கர் பெட்டிகளின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டது. பின்பு சென்னையிலும் பெட்டிகள் மற்றும் ரயிலின் இயக்கம் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்ததால் டபுள் டெக்கர் ரயில் சேவையை தொடங்க ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணயம் அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து இப்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நன்றி :- தினமணி, 26-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.