Thursday, April 4, 2013

கி.ஆ.பெ. விஸ்வநாதம் துவக்கிய தமிழர் கழகம் !

திருச்சியைச் சேர்ந்த முத்தமிழ் அறிஞர் திரு. கி.ஆ. பெ. விஸ்வநாதம் அவர்கள் பெரியாருடன் மாறுபட்டார். திராவிட நாடு கொள்கையை எதிர்த்தார். தமிழ்நாடு விடுதலை என்பதே சரி என்றார். அதற்காகத் திராவிடர் கழகம் என்பதற்கு மாற்றாக “தமிழர் கழகத்தை” நிறுவினார். திராவிட நாடு பத்திரிகைக்கு மாற்றாக “தமிழர் நாடு”  எனும் திங்களிதழைத் துவக்கினார். இதழைத் துவக்கிய நாள் 17-08-1949.

 திரு. கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள், தான் நிறுவிய “தமிழர் கழகத்தின்”  உறுப்பினர் தகுதியைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்து அறிவித்தார்.

“தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்களும், தமிழ் மொழியே எம் மொழியிலும் சிறந்த மொழி என்ற உண்மையை ஒப்புக் கொள்கிறவர்களும், தமிழ் நாட்டையே தங்கள் தாய்நாடாகக் கொண்டு தங்களைத் தமிழரெனக் கொண்டவர்களும், பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை ஒப்புக் கொண்டு தமிழர் யாவரும் ஒத்த உரிமை உடைய மக்கள் என்பதற்கு உடன்படுபவர்களும் இக்கழகத்தில் உறுப்பினராகலாம்.”

( பெரியாருடன் மாறுபட்டார் என்பதன் பொருள் : கி.ஆ.பெ.வி. அவர்கள் தாம் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர், பெரியாருக்கு முன்னரே நீதிக் கட்சியில் பணியாற்றியவர். பெரியாரை நீதிக் கட்சியில் இணைப்பதற்குக் காரணமாக இருந்தவர். 1944 சேலம் நீதிக் கட்சி மாநாட்டில் இவர்தான் திறப்பாளர். அதில் திராவிடர் கழகம் எனும் பெயரை மறுத்துத் “தமிழர் கழகம்” எனப் பெயர் வைக்க வேண்டும் என்றும், திராவிட நாடு விடுதலையைத் தவிர்த்துத் தமிழ்நாடு விடுதலை என்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார். அதில் தோற்றார். பிறகுதான் “தமிழர் கழகம்” கட்சியும் “தமிழர்நாடு” இதழும் தோற்றம் பெறுகின்றன.)

-தமிழர் எழுச்சி தமிழ்த் தேசியத் திங்கள் இதழ், ஆசிரியர், முருகு இராசாங்கம், ஏப்ரல் 2013. கோவை-641 004

tamizharezhuchi @yahoo.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.