Friday, April 5, 2013

தமிழன் வேறு, திராவிடன் வேறு ! - ஞா. தேவநேயப் பாவாணர்

இந்தியா விடுதலயடைந்தவுடன் தமிழ்நாடு தமிழ் மாகாணம் எனத் தனியாய்ப் பிரிந்து தமிழுக்கு ஆக்கம் பிறக்கும் என எண்ணியிருந்தோம். ஆயின், இன்றுள்ள நிலைமையை நோக்கும்போது, நாம் இலவு காத்த கிளியானோமோ என்று ஐயுற இடந்தருகின்றது. மொழிவாரி மாகாணப்பிரிவு தேசீயப் பேரவைத் திட்டக் கூறுகளில் ஒன்றாயிருந்தது அனைவர்க்குந் தெரிந்ததே. அது ஏனோ இன்று முற்றும் கை நெகிழவிடப்பட்டுள்ளது. பிறநாட்டாரால் மட்டுமன்றித் தமிழ் நாட்டாராலும், தமிழுக்கு மாறான கருத்துக்கள் தமிழ் நாட்டில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள், தமிழ் நாட்டைத் திராவிட நாடு ( அல்லது தமிழனைத் திராவிடன் ) என்பதும் ஒன்று.

புதிதாய்க் கறந்த பாலுக்கும் புளித்துப் புழுப்புழுத்தத் தயிருக்கும் எத்துணை வேறுபாடுண்டோம் அத்துணை வேறுபாடு தமிழுக்கும் திராவிடத்திற்கும் உண்டு. புதிதாய்க் கறந்த பாலின்றே புளித்துப் புழுபுழுப்புழுத்த தயிரும் தோன்றியதாயினும் அவ்விரண்டையுங் கலக்க முடியாதவாஉ, அவற்றுட் பின்னது அத்துணை திரிந்துள்ளது. அவ்விரண்டையும் வேண்டுமென்று கலப்பின், முன்னது தன்னிலை கெட்டுப் பின்னதின் நிலையை அடையும். அங்கனமே தமிழும் திராவிடத்தோடு சேரின் திராவிட நிலையடைந்துவிடும். திஎஇந்து வந்த திராவிடம் என்ற பெயரும், எத்தனை வேறுபட்ட மொழிகளைக் குறிக்குமோ , அத்துணையே, தமிழர் என்னும் பெயரும் அதனின்று திரிந்த திராவிடர் என்னும் பெயரும் வேறுபட்ட இனத்தாரைக் குறிக்கும்.

 தமிழ் ஒன்றே தூயது. வடமொழித் துணையன்றித் தனித்தியங்க வல்லது. ஏனைத் திராவிட மொழிகளோ தமிழ்த் துணையை விட்டு வடமொழித் துணையை வரையிறந்து பற்றி ஆரியமாயமாய்ப் போனவை. வடசொல் குறையக் குறையத் தமிழ் தூய்மையடைந்து உயரும் ஆனால், பிற திராவிட மொழிகளோ, வடசொல் கூகக் கூட எழில் பெற்று உயர்வனவாகக் கருதப்படும். தமிழர் தம்மை ஆரியக் கலப்பில்லாத தனியினமாகக் கருதுவதில் பெருமை கொள்கின்றனர். ஆனால், ஏனைத் திராவிடர் தம்மை ஆரியராகக் கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர்.

இங்ஙனம் வேறுபட்டிருப்பதால், திராவிடத்திற்குள்ளேயே தமிழல்லாத பிற திராவிட மொழிகளைத் திராவிடகம் என்றும், தமிழரல்லாத பிற திராவிட இனத்தாரைத் திராவிடகர் என்றும் அழைக்கலாம்.   

எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு : ஆங்கிலம் - ஆங்கிலேயர்
செருமன் - செருமானியர், சீனம் - சீனர், சப்பான் - சப்பானியர்,. ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம். ஆனால், மொழியைப் பொறுத்தவரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியார் பெயர் பெறுபவரேயன்றி ஒரு மொழித் தொகுதியாற் பெறுபவரல்லர். தமிழ் என்பது ஓர் தனி மொழித் தொகுதி. அது 13 மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப் பகுதிகளாகத் தமிழ் நாட்டிலிருந்து பெலுச்சிஸ்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவதுமில்லை.

வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடற்பற்றவை. தென்னிந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெரு நிலப்பகுதியாய் உள்ளன. அதனால், அப்பகுதியைத் திராவிட நாடாக்கலாம். என்னின், தென்னிந்தியத் திராவிடநாடுகள் இன்னும் ஒன்று சேரவில்லை. இனிமேல் சேரப் போவதாக ஒரு குறியும் இல்லை.


இதுபோது பிற தென்னிந்திய திராவிட நாடுகள் சேராவிடினும் எதிர்காலத்தில் அவை சேருமாறு தமிழ்நாட்டில் இன்று அடிகோலுவோர் எனின்; அதுவும் பொருந்தாது. ஏனெனில் , அங்ஙனம் அடிகோலுவதற்கும் ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய ஏனை முப்பெருந் திராவிட நாடுகளில் உள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து வீதமாவது திராவிட நாட்டியக்கத்தில் சேர்ந்து உறுப்பினர்களாகத் தம் பெயரைப் பதிவு செய்திருத்தல் வேண்டும். அல்லது அவ்வியக்கம் பரப்புரைக்காவது அங்குள்ள மக்கள் இடந்தரல் வேண்டும். இவ்விரண்டுமில்லை; ஆகையால் திராவிட நாட்டுத் துவக்கத்திற்கும் வழியில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்திலிருந்து இவ்வியக்கத்தைப் பாராட்டி எழுதின், அது வலியுறாது.

இனி, பல திராவிட இனத்தார் தமிழ் நாட்டிலிருத்தலின், தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின் , அது தமிழுக்கு உலை வைப்பதாகும். ஏற்கனவே, தமிழ் நாட்டில் தமிழுணர்ச்சியும், தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன. நீதிக்கட்சி ஆட்சியிலாவது காங்கிரஸ் ஆட்சியிலாவது பார்ப்பனத் தமிழனும் எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை. தமிழ் நாடு தமிழ் நாடாயிருக்கும்போதே இந்நிலைமை எனின், திராவிடநாடாகிவிடின், தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ் நாடு புகுந்து தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்க வேண்டியதுதான்.

தமிழ்நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால், அவரை எல்லாம் திராவிடர் என்றே அழைத்தல் தகுதி எனின், எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயின், பெரும்பான்மை பற்றியுமே பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும். இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை. ஆயின், அது பற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்து விடாது. ஆதலால் தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே.

அற்றேல்  திராவிடர் அல்லோரோவெனில், தமிழர் திராவிடர்தான். ஆயின் என்றும் திராவிடரென்று அழைக்கப்பெறுபவரல்லர். தொகுதியினத்தைக் குறிக்கும்போது திராவிடரென்றும், தமிழ் இனத்தைக் குறிக்கும்போது தமிழர் என்றும், அவர்
அழைக்கப் பெறுவர். இயல்பாகத் தமிழினங் குறிக்கப்படுமேயன்றித் தொகுதியினங் குறிக்கப்படாது. இனி, தொகுதியினத்தினும் விரிவுபட்ட தேச இனம் கண்ட இனம் முதலியவுண்டு. அவையுங் குறிக்கப் பெறும்போது, தமிழர் முறையே, இந்தியர் என்றும் ஆசியர் என்னும் பெயர் போன்றதே திராவிடர் என்னும் பெயரும் என்க.

ஒரு நாட்டில் பிறநாட்டு மக்களுமிருப்பின், வெளிநாட்டார் உள்நாட்டாரை எல்லா வகையிலும் பின் பற்ற வேண்டுமேயன்றி, உள்நாட்டார் வெளிநாட்டாரைப் பின்பற்ற வேண்டியதில்ல. வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருப்பின், உள்நாட்டார் அவரைப் பின்பற்றலாம். தமிழரல்லாத திராவிடர் அத்தகையரல்லர். மேலும் வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருந்தவிடத்தும் உள்நாட்டாரின் இனப்பெயர் மாறிவிடாது. ஆதலால், எவ்வகையிலும் தமிழ் நாட்டிலுள்ள பிற திராவிடர் தம்மைத் தமிழர் என்று கொள்ளுதல் வேண்டுமேயன்றி, தமிழைத் திராவிடன் என்று அழைத்தல் கூடாது. .   


ஆரியன் என்னும் பெயருக்கு எதிரானது திராவிடம் என்பதுதான் என்னின், அதுவும் பொருந்தாது. ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் ர்ன்று திருஞானசம்பந்தர் கூறியிருத்தல் காண்க. ஆரியத்தை எதிர்ப்பது தமிழ் ஒன்றே. அவ்வெதிர்ப்புணர்ச்சி இருப்பதும் தமிழ் நாடொன்றே.

தமிழர் ஒரு சிற்றினத்தாராதலானும், பிற திராவிடரோடு சேரினல்லாது அவர்க்குப் பாதுகாப்பு இல்லாமையாலும், திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்வதே அவர்களுக்கு நலமெனின், இது பேதைமையர்க்குக் கூறும் ஏமாற்றுரையேயன்றி வேறன்று. பிற திராவிடர் தமிழரோடு சேருவதில்லையென்று முன்னரே கண்டோம். மேலும் இக்காலத்தில் ஒரு நாட்டினற்குப் பாதுகாப்பாயிருப்பது உலக அரசுகளிடை வளர்ந்து வரும் அமைதி விருப்ப அறவுணர்ச்சியேயன்றி, அந்நாட்டின் பருமை அல்லது வன்மையன்று. ஆதலால், தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிடநாடு சேர அல்லது திராவிடரென்று கூறச் சொல்வதெல்லாம், கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகக் கூறியது போன்றதே 

தமிழர் என்னும் பெயர் பார்ப்பனரையும் தழுவுவதால், இனவுணர்ச்சி ஊட்டுதவதற்குத் திராவிடர் என்னும் பெயரே ஏற்றதெனில், வடசொல்லின்றிப் பிற திராவிட மொழிகட்குநிலையும் உயர்வுமின்மையானும், இலக்கண இலக்கிய ஆசிரியருட் பெரும்பாலார் பிராமணராயிருந்திருத்தலானும், பிற திராவிடர் தம்மை ஆரிய வழியினராகக் கூறிக் கொள்ளுதலானும், தமிழையும் தமிழரையும் புறக்கணித்து வருதலானும், திராவிடர் என்னும் பெயர் தமிழர் என்னும் பெயரினும் தகுதியற்றதாகும்..


மேலும் ஒரு நாட்டில் அயலாரையெல்லாம் அறவே வெறுத்தொதுக்கிவிட முடியாது. பன்னீராண்டு வாழ்க்கையில் ஒருவனுக்கு, ஒரு நாட்டில் குடியுரிமையுண்டாகி விடுகின்றது. பார்ப்பவர் கி.மு. 2000-ம் முதல் பல்வேறு காலத்திற் கூட்டங் கூட்டமாய் வந்து ர்ஹென்னாட்டிற் குடிபுகுந்து குடி நிலைத்து விட்டனர். தமிழ்நாட்டு நிலையான வாழ்நரெல்லாம் தமிழரென்றே கருதப்படத் தக்கார். இனத்தூய்மை கொண்ட நாடு இப்போது உலகத்தில் எதுவுமில்லை. உலக ஒற்றுமையும் உலகப் பொது ஆட்சியும் பேசப்படும் இக்காலத்தில் மொழி, பழக்கவழக்கம், பண்பாடு முதலியவற்றில் மட்டும் தமிழர்தம் தூய்மையைக் காத்துக் கொள்ள முடியுமேயன்றி, இனத்தில் முடியாது. ஆகையால், தமிழன் - தமிழ்ப் பகைவன் என்ற பாகுபாடே இக்காலைக்கேற்கும். பார்ப்பனராயினும் தமிழன்பர் தமிழரே. பார்ப்பனரல்லாதாராயினும் தமிழ்ப் பகைவர் தமிழரல்லாதோரே. இக்கொள்கையை இறுகக் கடைப்பிடிப்பின், தமிழுக்கும் தமிழருக்கும் என்றுங் கேடில்லை; ஆக்கமே உண்டாகும்.

ஆங்கிலேயர் ஒரு கலவை இனத்தாராயிருப்பினும், தம்மை ஆங்கிலேயர் என்று தம் மொழிப் பெயரால் அழைக்கின்றனரேயன்றி, அவருக்கும் தெல்லாந்தருக்கும், செருமானியருக்கும் பொதுவான தியூத்தானியர் என்னும் தொகுதியினப் பெயரால் அழைப்பதில்லை. அதுபோன்றே, தமிழரும் தம்மைத் தமிழ் மொழிப் பெயரால் தமிழர் என்றே அழைக்க வேண்டுமேயன்றித் திராவிடர் என்னும் தொகுதியினப் பெயரால் அழைக்கக் கூடாது.

தமிழ், வடமொழித் துணை வேண்டாத தனி மொழி எனக் கொள்ளுதலும், வட சொற் கலப்பின்றித் தமிழைத் தூய்மையாக வழங்குதலும், இந்திய நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று த்ளிதலும், பிறப்பால் சிறப்பில்லை என்பதைக் கடைப்பிடித்தலும், கல்வியையும் அலுவற்பேற்றையும் எல்லார்க்கும் பொதுவாக்குதலும், இவ்விலக்கணங்களைக் கொண்டவரெல்லாம் தமிழரென்றே துணிந்து, தமிழுக்கும் தமிழருக்கும் கேடாக அரசியற் கட்சியார் கூறும் வீண் வம்பு வெற்றுரைகளையெல்லாம் செவிக்கொள்ளாது விடுத்துத் தமிழர் கடைதேறுவாராக..  

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் பெயரன்னும், திருச்சி, உருமு தனலட்சுமி கல்லூரி இணைப்பேராசிரியருமான, முனைவர். கோ. வீரமணி அவர்களால் நகலெடுக்கப்பட்டு, கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தமிழர் எழுச்சி மாத இதழுக்கு அனுப்பப்பட்டு, மார்ச் 2013 உதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் மீள் பதிவு.

தமிழர் எழுச்சி

thamizharezhuchi@yahoo.com










  

 .

1 comments:

  1. படிக்க வேண்டிய கட்டுரை.

    ReplyDelete

Kindly post a comment.