Friday, April 5, 2013

அறிவியல் தமிழின் அண்டைய பூர்வீகம் ! - நெல்லை சு.முத்து

அண்டை நாட்டு அரசியல்வாதிகளும் சில நேரங்களில் வரலாற்று அறிவியலார் மாதிரி காட்டிக்கொள்கின்றனர்.

 ஆஸ்திரேலியாவின் "ஆரிஜின்' (தோற்ற மூலம்) அற்ற "அபாரிஜின்'கள் ஆகட்டும், அமெரிக்காவின் ஆதிப் பழங்குடிகளான "மாய இந்தியர்கள்' ஆகட்டும். அங்கு சென்று குடியேறிய "காகசாயிடு' வெள்ளை இனத்தவரால் தடயம் இழந்துபோன மானுட வரலாறு அறிவோம். அது போலவே அண்டை மண்ணைப் பொருத்தமட்டில், "இந்தியக் கலிங்கத்தில்' இருந்து இன்றைய இலங்கைக்குள் சென்று ஏறியவர்களால் "ஆதித் தமிழ் இனம்' அடையாளம் இழந்து வருவது என்னவோ உண்மை.

 கல் தோன்றி மண் தோன்றிய பின் தோன்றிய ஆதிவாசிகளைப் பொதுவாக "திராவிட இனம்' என்கிறோம். உள்ளபடியே "திராவிடம்' என்பது "தக்காணம்' சார்ந்து மட்டுமன்றி, நாடு முழுவதிலும் வாழ்ந்த ஆதி இந்திய இனத்தைக் குறிக்கும் பொதுச் சொல். அவ்வளவுதான். மேனாட்டினர் அவர்களை "ட்ரைபல்' என்கிறார்கள். அதுவும் "த்ரபிள' - "த்ரவிட' என்பதன் மருவல்தானே.

 இந்தியாவில் மண்ணின் மைந்தர் மொழிகளை திராவிட மொழிகள் என்று பொதுப்படையாக வரையறுக்கிறோம். அதிலும் மூன்று பிரிவுகள். தமிழ் உள்பட மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா ஆகியவை தென் திராவிட இனம்.


 தெலுங்கு, கோண்டி, கூயி, கோலாமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ (பெங்கால், பெங்களூர் ஆகியவற்றோடு ஒலிச் சார்பு சிந்திக்கத் தக்கது), மண்டா போன்றவை நடுத் திராவிடம். குருக், மால்தோ, பிராகூயி எல்லாம் வட திராவிடம்.

 "திரமிள' எனுஞ் சொல்லில் இருந்து தமிழ் என்ற சொல் உருவானதை தேவநேயப் பாவாணர் போன்ற வேர்ச்சொல் பிறப்பியலார் நிறுவியுள்ளனர். சிங்கள மொழியில் "தமேடா' என்பதும் "தமேளா' என்பதும் தமிழின் "திரவிட' மற்றும் "திரமிள' ஆகிய சொற்களே.

 ""த்ரமிடம், த்ரவிடம் என்னும் ரகர மேற்றிய வடிவுகளேயன்றி, "தபிள' ("த்ரபிள?'), "தமிட' என்னும் மிக நெருங்கிய வடிவுகளும் வட மொழி நாடகங்களிலும் சமண நூல்களிலும் வழங்கியிருத்தலை ""தேவ நேயப் பாவாணர் ("தமிழ் வரலாறு', பக்கம் 29) எடுத்துக் கூறுகிறார். அன்றியும், ""தமிழ் எனும் சொல்... தாமம் (ஞாயிறு), எல்லாம் (இலங்கை) ஆகிய இரு சொல், முறையே தாம் ஈழம் என மருவிப் புணர்ந்த வடிவென்று கந்தையா பிள்ளையும்... அதற்குப் பொருட் காரணியம் காட்டுவர்'' எனவும் மேற்கோள் காட்டுகிறார்.
 தமிழின் தொல் இலக்கியங்களான திருக்குறள் தொடங்கி சிலம்பு, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி எங்கும் சமணச் சார்பு தூக்கலாகவே இருப்பதைத் தமிழறிஞர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். கி.பி.450-ஆம் ஆண்டுவாக்கில் வச்சிர நந்தி என்கிற சமண முனிவர் தென் மதுரையில் "திரமிள சங்கம்' தோற்றுவித்தாராம்.

 சொல்லப்போனால் தமிழ் என்ற சொல் "திரமிள' (கி.மு. 5-ஆம் நூற்றாண்டு) என்றும், "தமிரா' (கிரேக்க பெரிப்பிளஸ், கி.மு. 4-ஆம் நூற்றாண்டு), "தமிரிக்கே' (ரோமானிய உலகத் திணைப்படம்), "லுமிரிக்கி' (எகிப்திய அட்டவணை), "த்ரமிட' (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு, வராக மிகிரர் நூல்கள்), "த்ரமில' (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு, மங்கலேச அரசன் பட்டயம்), "திரமிலர்' (தார நாதர் எழுதிய "இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு'' எனும் நூல், திபெத், கி.பி. 1573), "தெஹி - முலொ' (யுவான் - சுவாங், கி.பி. 7-ஆம் நூற்றாண்டு), "தமுலோ' (மகா வமிச நூல், இலங்கை), "தமுலிக்கா' (டானியர் வழக்கு) என்றெல்லாம் வழங்கிற்று.

 கி.மு. மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் இலங்கையினை அரசாண்டவன் தேவனாம்பிரிய திஸ்ஸன். அவன் அசோகப் பேரரசரிடம் தூதுக்குழு ஒன்றை அனுப்பினான். அது ஒரு வணிகக் குழு. அதன் தலைவனுக்கு அசோகன் இட்ட பட்டம் "செட்டி'. தமிழ் வணிகரைக் குறிப்பதற்கு இப்பட்டம் இன்றும் பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றன. 

 ஈழத்து உணவும் தமிழகத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று என்று பட்டினப்பாலை பாடுகிறது. "ஈழத்துப் பூதன் தேவனார்' எனும் தமிழ்ப்புலவர் பண்டைத் தமிழ்ச் சங்கத்தில் இணைந்து அகநானூறு, குறுந்தொகை, நற்றிணைப் பாடல்கள் சில பாடி உள்ளார்.

 ஏதாயினும், தேவனாம்பிரிய திஸ்ஸன் தம்பி அசேலன் இலங்கைத் தமிழரசர்களை முறியடித்தான். அவனை வென்று ஏழாரன் எனும் தமிழரசன் கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழ 48 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவனை எல்லாளன் என்றும் சிலர் குறிப்பிடுவர்.


 இங்கு ஏழம் அல்லது "ஏலு' என்றால் "கள்' என்று பொருள். இலங்கைத் தீவின் ஆதிவாசிகளின் தொழில் கள் இறக்குதல் ஆக இருந்தது. வனங்களில் வாழ்ந்த பழங்குடிகள் "வன்னிய' என்று வழங்கப்பட்டனர். ஆயின் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் "வையாட(ர்)' என்று அழைக்கப்பட்டனர். வேடர் இனமோ?

 இன்றைக்கும் கேரள மண்ணில் கள் இறக்கும் சமூகத்தினரை ஈழவர் என்று வழங்குவர். ஈழவர் என்ற சொல்லாட்சி 9-ஆம் நூற்றாண்டுத் தென்னிந்தியக் கல்வெட்டுகளில் இடம்பெறுவதாக சுவீடன் நாட்டுப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஷால்க் ""ஈழம் மற்றும் ஈழவர் ஆகிய சொற்களின் சுருக்க வரலாறு'' எனும் ஆய்வில் தெரிவிக்கிறார்.

 ஏதாயினும், முன்பொரு காலத்தில் இந்தியத் தமிழர்க்கு அடுத்தபடி இலங்கைத் தமிழர் ஜனத்தொகை அதிகமாக இருந்தது. அதனால் அமெரிக்காவில் இருந்து வந்த திருச்சபையினரால் 1816 - 1848 ஆண்டுக்கட்டத்தில் அங்கு 105 தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் 16 ஆங்கிலப் பள்ளிக்கூடங்களும் நிறுவப்பட்டன.

 ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னால், 1816 டிசம்பர் 9 அன்று யாழ்ப்பாணத்தில் "பொது இலவசப் பள்ளி' ஒன்று டச்சுப் பாதிரியார் டானியல் புவர் என்னும் அமெரிக்கத் திருச்சபைப் பாதிரியாரால் உருவாக்கப்பட்டது. அவரே அதன் தலைமையாசிரியரும் ஆனார். அங்கு ஆங்கிலமும் தமிழும் மட்டுமே பயிற்று மொழிகள். சிங்களம் இல்லை. யாழ்ப்பாணம் மாகாணத்தில் தெல்லிப்பளையில் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது ஆங்கிலப் பள்ளி. அதுவே பின்னாளில் "யூனியன் கல்லூரி' ஆயிற்று.

 ஆயின், இலங்கை மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்ற டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (1822 - 1884) அறிவியல் தமிழ் முன்னோடி. இவர் தமிழில் மருத்துவப் பாடத்தைப் பயிற்றுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். அந்நாட்டுப் பூர்வீக மக்களாகிய தமிழர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஊட்டவே தொண்டாற்றினார். நவீன அறிவியல் தமிழின் அன்றைய சிறப்பிடம் இலங்கை என்பதே உண்மை.

 டாக்டர் கிரீன் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை ("வையடர்' கோட்டை அல்லது பட்டிக்கோட்டா) எனும் இடத்தில் பணி தொடங்கினார். அங்கு ஆங்கிலம் வழி 39 மருத்துவர்களுக்கு முதலில் பயிற்சி வழங்கினார்.

 அங்கு தமிழ் மக்களோடு ஒன்றி வாழ்ந்து மருத்துவம் செய்வதற்காகத் தாமும் தமிழ் கற்றுத் தேறினார். அதனால் 33 மருத்துவர்களுக்குத் தமிழ்வழி பயிற்சி அளித்தார். அவர் மருத்துவத்தையும் ஏனைய அறிவியலையும் தம் மாணவர்களின் உதவியுடன் ஏறக்குறைய 4,640 பக்கங்களில் மொழிபெயர்த்துள்ளார்.

 இது குறித்து டாக்டர் கிரீன் எழுதும்போது, ""நான் மேற்கொண்டுள்ள இம்முயற்சியானது தமிழில் மேனாட்டு வைத்தியம் பரவ ஓர் அஸ்திவாரமாகவும், ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்புகிறேன்'' என்கிறார்.

 வெறுமனே வசனம் பேசுவதோடு நின்றுவிடாமல், இலங்கைத் தமிழர் நல வாழ்வுக்கு உண்மையாகவே உழைத்தவர் அறிவியல் தமிழ் மேதை டாக்டர் கிரீன் என்று சொல்லலாம். அவரே முனைவர் கால்வின் கட்டர் எழுதிய "உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் சுகாதாரம்' குறித்த மருத்துவ நூலினை 1857-ஆம் ஆண்டு "அங்காதி பாத சுக ரணவாத உற்பாவன நூல்' என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தார். அறிவியல் தமிழில் முக்கிய நூல் இது.

 அத்துடன் "மாதர் மருத்துவம்' (மான்செல், 1857), "இரண வைத்தியம் (அறுவைச் சிகிச்சை நூல், ட்ருவித், 1867), "மனுஷ அங்காதி பாதம்' (உடற்கூறியல் நூல், கிரே, 1872), "வைத்தியாகரம்' (1872) ஆகிய மொழிபெயர்ப்புகள், "கெமிஸ்தம்' (1875), மனுஜ சுகரணம் (உடல் இயங்கியல், 1883), "இந்து பதார்த்த சாரம்' (வாரிங் எழுதிய "இந்திய மருந்தியல்', 1884) ஆகிய 7 அறிவியல் தமிழ் நூல்களும் வெளியிட்டார்.

 இவ்வகையில் பெரும்பான்மைத் தமிழ் இனத்திற்காகவுமே அங்கு பொது மருத்துவ நூல்கள் படைக்கப்பட்டன. பாமரருக்கும் புரியும்படியான மருந்து, மகப்பேறு, மகளிர் நோயியல், சட்டம் குறித்த மருத்துவக் கையேடுகளும் வெளியிட்டார் ஃபிஸ்க் கிரீன். 1875-ஆம் ஆண்டு இவர் தலைமையில் ஏறத்தாழ 40,000 பக்கங்களில் நான்கு தமிழ்க் கலைச்சொல் அகராதிகள் தொகுக்கப் பெற்றன.

 இவ்விதம் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் என்ற ஐரோப்பியரின் முயற்சியினால் பெரும்பாலான அறிவியல் தமிழ் நூல்களும், இதழ்களும் பிரிட்டீசு இலங்கையிலிருந்து வெளியாயின.

 சங்க இலக்கியங்களில் நுட்பமான அறிவியல் தமிழ்க்கூறுகள் இருக்கட்டும். நவீன அறிவியல் தமிழ் வரலாறு 1832-ஆம் ஆண்டு தமிழகத்தில் இரேனியஸ் பாதிரியார் வெளியிட்ட ""பூமி சாஸ்திரம்'' எனும் உரைநடை நூலில் இருந்தே தொடங்குகிறது.  ஏதாயினும் இலங்கையின் பூர்வீகத் தமிழரிடம் தமிழ் கற்ற டாக்டர் கிரீன், ""மனிதனால் பேசப்படும் மொழிகளிலேயே மிகத் தூய்மையான, மெருகூட்டிய மொழி தமிழ்'' என்று குறிப்பிட்டார் என்றால் பாருங்களேன்.

 தமது கல்லறையின் மீது, ""தமிழருக்கான மருத்துவ ஊழியர்'' என்ற வாசகம் பொறிக்குமாறு வேண்டிக்கொண்டாராம். அமெரிக்காவில் அவரது வொர்ஸ்டர் கிராமத்தின் நினைவுக் கல், இதே முத்திரை மொழியுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது.

 நல்ல வேளை அவரது கல்லறை இலங்கையில் இல்லாததால் தப்பித்தது!
 
கட்டுரையாளர்: 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன 

முன்னாள் விஞ்ஞானி !  

நெல்லை சு.முத்து.

நன்றி - தினமணி, 05-4-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.