Tuesday, April 23, 2013

இன்று உலகப் புத்தக தினம் -எழுத்துப் புரட்சியாளர்கள் !சார்லஸ் டார்வினின் குடும்பமே ஒரு மருத்துவக் குடும்பம். அவரது தந்தையும், தாத்தாவும் அந்த ஊரிலேயே மிகப் பிரசித்திபெற்ற மருத்துவர்கள். மருத்துவராகத் தனது வாழ்நாளைக் கழிக்க டார்வினுக்கு நாட்டமில்லையென்றாலும், டார்வினின் தந்தையாரின் பெரு விருப்பம்  காரணமாக டார்வின், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பிற்காகச் சேர்க்கப்பட்டார்.

 இரண்டாண்டுகள் வேண்டா வெறுப்பாக மருத்துவக் கல்லூரிக்குச் சென்று வந்த பின்னர், தான் மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பவில்லை என்று தந்தையாரிடம் அடம் பிடித்தார்.  தந்தையாரும் வேறு வழியின்றி டார்வினின் மருத்துவப் படிப்பைப் பாதியில் நிறுத்தச் செய்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் திருச்சபை ஊழியத்திற்கான பட்டப் படிப்பில் சேர்த்தார்.

 புதிய பட்டப் படிப்பிலும் டார்வினுக்கு சிறிதும் ஈடுபாடு ஏற்படவில்லை. இவரது பாடத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பூகர்ப்பவியல், தாவரவியல் போன்ற துறைகளின் பேராசிரியர்களோடுதான் இயல்பாகவும், நெருக்கமாகவும் பழகினார். அந்தத் துறைகளில்தான் கல்லூரியிலிருந்த பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டார் டார்வின்.

 அக்காலத்தில் கப்பற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுக்காக பெரும் ஆராய்ச்சியாளர்கள் கடல்பயணம்  மேற்கொள்வது வழக்கம். "பீகிள்'  என்ற கப்பல் அத்தகைய கடலாய்வுக்குப் புறப்பட்டது. அதில் செல்லும் ஆய்வுக் குழுவில்  இடம்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் அறிவியல் துறைப் பேராசிரியர்கள் டார்வினின் பேரார்வத்தையும் அறிவியல் ஈடுபாட்டையும் உணர்ந்து அவரையும் கடலாய்வுக் குழுவினரோடு இணைந்து கொள்ள அழைத்தனர். அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பினும் அதனையும் மீறி விதிவிலக்காக டார்வினை, நன்கு புரிந்துவைத்திருந்த அப்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் உடன் அழைத்துச் சென்றனர்.

 பீகிள் கப்பல் குழுவினர் ஐந்தாண்டு காலம் கடலாய்வினை மேற்கொண்டனர். மனித நடமாட்டமே இல்லாத தீவுகளுக்கெல்லாம்கூட சென்று ஆய்வுகளை நடத்தினர். டார்வின் உயிரோட்டத்தோடும் குதூகலத்தோடும் ஆய்வுக்களத்தில் ஐந்தாண்டுகளைக் கழித்தார்.

 ஆய்வின்போது சேகரித்த பழைய காலத்து மனிதர்கள் மற்றும் மிருகங்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பழம் பொருள்களையும்  அப்போதைக்கப்போது எழுதி வைத்த குறிப்புகளையும் தனது பல்கலைக் கழகத்திற்கு இடையிடையே அனுப்பிக் கொண்டே இருந்தார்.  ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பீகிள் தனது ஆய்வுப்பணிகளை முடித்து தாய்நாட்டிற்கு திரும்பி வந்த பிறகுதான், ஏற்கெனவே அனுப்பி வைத்திருந்த பொருள்களையும் குறிப்புகளையும் அடிப்படைகளாக வைத்து மேலும் ஆழமாக ஆய்வு செய்த பின்னர் "உயிரினங்களின் தோற்றுவாய்' என்ற உலகின் கவனத்தையே ஈர்த்த முற்றிலும் வித்தியாசமான புத்தகத்தை எழுதினார்.

 உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் குறித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த நம்பிக்கைகளை மறுத்து, புத்தம்புதுக் கருத்தினை முன்வைப்பது அக்கால கட்டத்தில் எளிதல்ல. அவ்வாறு மாற்றுக் கருத்துகளைச் சொன்னவர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்ற வரலாற்று உண்மைகள் எதுவும் டார்வினுக்குத் தெரியாததல்ல.  உயிரைப் பணயம் வைத்தேனும் உலகிற்கு அரிய உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் வெளிப்பாடே "உயிரினங்களின் தோற்றுவாய்' என்ற சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளமிட்ட அற்புதமான புத்தகம்.

 அரசியல், அறிவியல், ஆன்மிகம், கலை, இலக்கியம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் இவ்வாறான வித்தியாசமான நூல்கள் உலகெங்கும் வெளிவந்து மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளன.

 இத்தகைய, உலகைப் புரட்டிப் போட்ட மிகச்சிறந்த ஒவ்வொரு நூலும் உருவான வரலாறு குறித்து பல அற்புதமான நூல்கள் வெளி வந்துள்ளன.

 சிறந்த நூல்கள் எதுவாக இருப்பினும் அது ஆகப்பெரும் உழைப்பின் விளைவாக வெளிவந்தவை என்பதை முழுமையாக உணர்ந்த எவரும் வாசிப்பிறகு வசப்படுவர். சில நூலாசிரியர்கள் எழுதுவதை ஒரு வேள்வியாகவே மேற்கொள்கின்றனர். எழுத்தை ஒரு தவமாக எண்ணுபவர்களின் எழுத்தில் மட்டும்தான் உயிர் இருக்கும். உலகெங்கும் இவ்வாறு எத்தனையோ "எழுத்துப் புரட்சியாளர்கள்' இருக்கிறார்கள்.

  நம் கண்ணெதிரே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டுள்ள சிறந்த படைப்பாளிகளின் படைப்புப் பின்புலத்தை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளும் அனுபவம், வாசித்து அறிந்து கொள்வதைக் காட்டிலும் வலுவானது. ஒரு நல்ல படைப்பு எவ்வாறு உருவாகிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் எவரும் மிகச்சிறந்த வாசகராக உருவெடுப்பர் என்பதில் சந்தேகமில்லை.

 ஐம்பதாண்டுகளுக்கு முன்பு படைப்பாளர் தொ.மு.சி.ரகுநாதன், கல்கி இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். வேறு நூல் ஒன்றில் அச்சாகியிருந்த அந்தப் பழைய பேட்டியை வாசித்து நெகிழ்ந்துபோன நிலையில் அரைநூற்றாண்டுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி குறித்து அவரிடமே நீண்ட நேரம் கலந்துரையாடும் சந்தர்ப்பம், அவர் இறப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பு எங்களுக்கு வாய்த்தது. அந்தப் பேட்டியில் சொன்ன தகவல்களை இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் அதே உணர்ச்சியோடு எங்களிடம் எடுத்தியம்பினார்.

 "பஞ்சும் பசியும்' என்ற தொ.மு.சியின் நாவல் குறித்த அனுபவத்தைத்தான் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார். இந்த நாவலுக்கான கரு தனது மனதில் உருவாகி அக்கரு பரிணாம வளர்ச்சிபெற்று முழுக் கதையாக உருவெடுப்பதற்குப் பல்லாண்டுகள் பிடித்ததாம். இடையில் தோன்றிய கருக்களெல்லாம் கூட சிறுசிறு கதைகளாக அவ்வப்போது வெளிவந்து விட்டதாம்.

 நாவலுக்கான கரு, மனதிற்குள் முழு வளர்ச்சிபெற்ற நிலையில் "சுகப் பிரசவத்திற்கு'த்  தயாரான பின்பு எழுதத் தொடங்கினராம். எழுதத் தொடங்கிவிட்டால் இரவும் பகலும் அவருக்கு ஒன்றுதான். கொஞ்சம் சாப்பிடுவார். அப்படியே ஈசிசேரில் கண்ணயர்வார். சிறிது நேரத்திற்குப் பிறகு தானாக விழித்துக்கொண்டு மீண்டும் எழுதுவார். எழுதிய தாள் ஒவ்வொன்றையும் கீழே போட்டுவிட்டு பழைய தாளில் கடைசியாக என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைகூட மறுபடியும் வாசித்துப் பார்க்காமல் தொடர்ந்து மளமளவென்று எழுதிக் கொண்டேயிருப்பாராம்.  காலையில் அவரது அறை முழுக்க கிடக்கிற எழுதப்பட்ட காகிதங்களை அவரது மகள் ஒவ்வொன்றாக எடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி வைப்பாராம்.

 மொத்தம் இருபது அத்தியாயங்கள் கொண்ட அந்த நூலின்  பதினோராவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தபோது "கைலாச முதலியார்' என்ற பாத்திரம் இறந்துபோன காட்சியை எழுதினாராம். சடலம் கிடப்பதையும் அருகில் அவரது உறவினர்கள் கதறி அழுவதையும் வர்ணித்து எழுதிக்கொண்டு வந்த ரகுநாதன் தானும் உணர்ச்சிக்கு ஆட்பட்டுத் தேம்பித்தேம்பி அழுதாராம். இருபது அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் எழுத முடிவு செய்து எழுதத் தொடங்கிய தொ.மு.சி தனது பேனாவை மூடி வைத்து விட்டு கைலாச முதலியாரின் உறவினர்களோடு சேர்ந்து தானும் மூன்று நாட்கள் அமைதியாக துக்கம் அனுஷ்டித்ததாக அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நேரடியாக இதுபற்றிச் சொன்னபோதும் இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகும் அதே உணர்ச்சியோடு தொ.மு.சி இருப்பதை நன்றாக எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த நாவல் பிற்காலத்தில் பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பது தமிழ்மரபு. சமுதாய அக்கறை மிக்க சிறந்த படைப்பாளிகள் இவ்வையகத்தின் துன்பத்தைத் தனது சொந்தத் துன்பமாக எண்ணி தங்களது படைப்புகளை அரிதின்  முயன்று உருவாக்கியுள்ளனர்.

 புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை புதிய தலைமுறைக்குப் புரியவைப்பது இன்றைய காலத்தின் மிக முக்கியத் தேவையாகும். கல்வி நிலையங்களில் அவரவரின் பாடங்களை நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெறும் சூத்திரத்தை இப்போதுள்ள இளைய தலைமுறை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். பாடப்புத்தகங்களோடு இதர பொதுவான சிறந்த நூல்களையும் வகுப்பறைகளில் வித்தியாசமான விதத்தில், வாசிப்பதில் ஈடுபாட்டை, உருவாக்கும் முறையில் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.

 புத்தகங்கள் வெறும் தகவல்களைத் தந்து வாசிப்பவர்களை அறிவாளிகளாக்குவதோடு சிறந்த பண்பு நலன்களையும் உருவாக்கி மனிதனைப் பக்குவப்படுத்தவும் பயன்படுகிறது.

 பத்தாண்டுகளுக்கு முன்பு, "விடுதலை வேள்வியில் தமிழகம்' நூல் வெளியானவுடன் சென்னை வானொலியில் ஒரு மணி நேர பேட்டியெடுத்தனர். அது நேரடி ஒலிபரப்பு.  பேட்டியெடுத்தவர் இந்நூல் ஒரு விருட்சம் என்றால்... இதன் விதை எது... என்று கேட்டார். ஒரு நிமிடம் தடுமாறிய பிறகுதான் பொறி தட்டியது. பிறகு ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை காந்தியடிகளின் சுயசரிதையை வகுப்பாக எடுப்பார் அக்கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார். அவர் ஒரு தேசபக்தர். அக்காலத்திலேயே பி.ஏ., எல்.டி. படித்த மிகச் சிறந்த கல்வியாளர். எல்லாவற்றையும்விட தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தும் ஆற்றல் மிக்க இருமொழிச் சொற்கொண்டல்.

   எழுபத்தைந்து வயதைக் கடந்த அந்தப்பெருந்தகை பத்து வயதுகூட ஆகாத பாலகர்களாகிய எங்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் உணர்வுப் பூர்வமாக எடுத்த "சத்திய சோதனை' வகுப்புதான் என் மனதில் விழுந்த "முதல் விதை' என்று பதிலளித்தேன்.

 பாடப்புத்தகங்களோடு சேர்த்து சத்தியசோதனை புத்தகத்தையும் விலை கொடுத்து பள்ளி நிர்வாகத்திடமே மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டையும் நிர்வாகமே செய்திருந்தது.

 சில அத்தியாயங்களே அவர் பாடம் எடுத்திருப்பினும் பாடம் கேட்ட அனைவரும் வீட்டில் முழு சத்திய சோதனையையும் ஈடுபாட்டோடு வாசித்தனர்.

 மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஒரு கிராமத்தில் நூலகம் ஒன்றைக்கட்டி முடித்து அதனைத் திறந்து வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரை அழைத்திருந்தோம்.  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் த. கார்த்திகேயன் உரை நிகழ்த்துகிறபோது, ""நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எனது சித்தி தினசரி எங்கள் கிராமத்திலிருந்த பொது நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிப்பார்.  அவருக்குத் துணையாக என் தாயார் என்னையும் அவருடன் அனுப்பினார். அங்குள்ள நூலகர் மிகவும் நல்லவர். எனக்கு விளையாட்டாக சிறுசிறு நூல்களைப் படிக்கக்  கொடுத்தார். சிறிது காலம் கழித்து சித்தி நூலகத்திற்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். கொஞ்சம் வாசித்துப்பழகிய நான் தொடர்ந்து நூலகத்திற்குச் சென்றேன். அதன் காரணமாகத்தான் ஆட்சித்தலைவராக உயர்ந்து இந்நூலகத்தைத் திறந்து வைக்கிற வாய்ப்பினையும் பெற்றுள்ளேன்'' என்று உற்சாகத்துடன்  கூறினார்.

ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்வையே மாற்றியமைத்ததற்கு இதுபோன்ற ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தனி மனிதனின் ஆளுமைக்கு வித்திடுவதற்கும் ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமிடுவதற்கும் புத்தகங்கள் மகத்தான பங்களிப்பைச் செலுத்தியுள்ளன.

கட்டுரையாளர்: வழக்குரைஞர். த.ஸ்டாலின் குணசேகரன்

(இன்று உலகப்  புத்தக தினம்)                                                                                                  

நன்றி :- தினமணி, 23-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.