Tuesday, April 23, 2013

வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் மறைவு !தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவரும் பிரபல கர்நாடக வயலின் இசை மேதையுமான லால்குடி ஜெயராமன் (82) சென்னையில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) காலமானார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாத்தமங்கலத்தில் 1930-ஆம் ஆண்டு  பிறந்த அவர், சிறிது காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்தார். தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

அவருக்கு மனைவி ராஜலட்சுமி, வயலின் கலைஞர்களான மகன் ஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன், மகள் ஜெ.விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

இசை மேதைகளுக்கு வாசித்தவர்: லால்குடி ஜெயராமனின் தந்தை வி.ஆர்.கோபால ஐயரும் வயலின் மேதை ஆவார். தந்தையிடம் கர்நாடக இசையைப் பயின்ற லால்குடி ஜெயராமன், தனது 12-வது வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

குறுகிய காலத்திலேயே கர்நாடக இசை நுணுக்கங்களைக் கற்ற அவர், கர்நாடக இசை மேதைகள் முசிறி சுப்பிரமணிய ஐயர், எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், ராம்நாட் கிருஷ்ணன், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் ஆகியோருக்கு வயலின் இசைத்தவர். அவர் வயலின் இசைக் கலைஞர் என்பதுடன், ஏராளமான சாகித்யங்கள்-தில்லானாக்களை இயற்றி சிறந்த வாக்கேயக்காரராகவும் திகழ்ந்தார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது: லால்குடி ஜெயராமனின் கர்நாடக இசை திறனைக் கௌரவிக்கும் வகையில் 1972-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2001-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது. 1979-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கலைஞராக லால்குடி ஜெயராமன் இருந்தார். "நாத வித்யா திலகம்', "நாத வித்யா ரத்னாகர', "வாத்ய சங்கீத கலாரத்னா', "சங்கீத சூடாமணி' உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

தேசிய திரைப்பட விருது: 2006-ஆம் ஆண்டு வெளியான "சிருங்காரம்' திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக தேசிய விருதைப் பெற்றார்.

இசை வாரிசுகள்: வயலின் இசையில் "லால்குடி பாணி' எனப் போற்றும் வகையில் தனக்கென தனி பாணியை இறுதி வரை கடைப்பிடித்தார். தனது கலைத் திறமை காரணமாக சிறந்த ஆசிரியராகவும் அவர் விளங்கினார். வயலின் கலைஞர்கள் ஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன் (மகன்), ஜெ.விஜயலட்சுமி (மகள்), விட்டல் ராமமூர்த்தி, பத்மா சங்கர், உஷா ராஜகோபாலன் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, எஸ்.பி.ராம், சங்கரி கிருஷ்ணன், சாகேதராம், வித்யா சுப்ரமணியன், சாஸ்வதி பிரபு ஆகியோர் லால்குடி ஜெயராமனின் முக்கிய சீடர்கள் ஆவர்.

இன்று இறுதிச் சடங்கு: மறைந்த லால்குடி ஜெயராமனின் இறுதிச் சடங்கு தியாகராய நகர் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 

வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இசைத்துறையில் எட்ட முடியாத சாதனைகளைத் தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இசைக்குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்குச் சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகுக்கு உணர்த்தியவர், இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர்.
 தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர். கடினமான ராகங்களான "நீலாம்பரி', "தேவகாந்தாரி' ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.
சங்கீத நாடக அகாதெமி, சங்கீத சூடாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர் இசையமைத்த "சிருங்காரம்' என்ற திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது.

லால்குடி ஜெயராமனின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப
முடியாது.                                                                                                                                   

நன்றி தினமணி, 23-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.