Wednesday, April 24, 2013

மராட்டிய மாநிலத்தின் குக்கிராமத்தில் குடி இல்லை; புகை இல்லை - ஆர். நடராஜ்




மெய்வருத்தம் கூலிதரும்

By ஆர். நடராஜ்

First Published : 24 April 2013 02:00 AM IST

ரோமாபுரி நாட்டைச் சேர்ந்த சிசிரோ என்ற அறிஞர், ஒரு நாட்டின் பொருளாதார சித்தாந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிமையாக விளக்குகின்றார். அரசு கஜானா அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும். அரசின் கடன் அல்லது பற்று குறைக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கும் நடவடிக்கையாக, பொது மானியங்களை மட்டும் சார்ந்திராமல் மக்கள் நன்கு உழைக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசு அதிகாரிகளின் அகங்காரத்தை சமன்செய்ய வேண்டும்; இன்று சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்தது இன்றும் எவ்வளவு உண்மை!

""உழைப்புதான் இறை வணக்கம்'' என்பது மாறி, உழைக்காமல் எப்படி குறுக்கு வழியில் வசதியடையலாம் என்ற நிலை வேதனைக்குரியது. பணிகளைப் புறக்கணிக்கும் கலாசாரம் பெருகி வருகிறது, இதை எல்லா அலுவலகங்களிலும் பார்க்கலாம். சராசரியாக 30 சதவிகிதம் பணியாளர்கள்தான் இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்வார்கள்; அரசு அலுவலகங்களில் இந்நிலை பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஆனால், சமுதாயத்திற்குத் தனது பங்கினை அளிக்க வேண்டும் என்று பிரதிபலனை எதிர்பார்க்காமல் உத்வேகத்துடன் கடமை ஆற்றுபவர்களும் இருக்கிறார்கள், 300 மரங்களை 50 வருடங்களில் வளர்த்த கர்நாடகத்தைச் சேர்ந்த திம்மக்கா - சிக்கண்ணா தம்பதிகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. மனிதனின் ஒழுங்கற்ற இயற்கைச் சூறையாடலால் வானம் பொழிவதில்லை. வெப்பம் அதிகரிக்கிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு அதிகரிக்கிறது. பிராணவாயு மண்டலம் குறைகிறது, மன்னர்கள் காலத்தில் குளங்கள் வெட்டப்பட்டன. சாலை நெடுகிலும் மரங்கள் நடப்பட்டன என்று சரித்திரப் புத்தகத்தில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இன்று மரங்கள் சகட்டு மேனிக்கு வெட்டப்படும் அவல நிலையைப் பார்க்கிறோம்.

வனங்களை ஆராதிப்போம் என்று சுதந்திர இந்தியாவின் முதல் வேளாண் அமைச்சர் கே.எம். முன்ஷி 1950-இல் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அத்திட்டத்தின்படி ஜூலை மாதம் மழைக்காலத்திற்கு முன்பு நாடு முழுவதிலும் மரக்கன்றுகளை நடவேண்டும். மரங்களைப் பாதுகாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வளவோ திட்டங்கள் நல்ல எண்ணத்தில் தொடங்கப்படுகின்றன. ஆனால், காலப்போக்கில் சுருங்கிச் சுருண்டுவிடுகின்றன. ஆனால், வன ஆராதனை திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பது போற்றுதலுக்குரியது. இந்த முயற்சி மேலும் தீவிரமாக்கப்படுதல் வேண்டும். அணைகள் கட்டுவது, சாலைகள் விரிவாக்கம், தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு முதல் பலி மரங்கள்தான். புதிதாக நடப்படும் மரங்கள் இந்த அழித்தொழித்தலுக்கு ஈடாகுமா? உயிரோடு உள்ள மரங்களை வெட்டாது, திட்டங்களை நிறைவேற்ற முடியாதா?

ஒரு நாட்டின் வளத்திற்குக் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் பரப்பளவு மரங்கள் இருந்தால்தான் சீதோஷ்ணம் சீராக இருக்கும். சுற்றுப்புறச் சூழல்கள் பாதுகாக்கப்படும். நமது நாட்டின் மொத்த வனங்களின் பரப்பளவு 20.6 சதவிகிதம்தான். மாசற்ற காற்று மற்றும் பிராணவாயு நமக்குக் கிடைக்க மரங்கள் உதவுகின்றன. நச்சுப்பொருள்களை அகற்றும் சக்தி மரங்களுக்கு உண்டு. நெடுஞ்சாலைகளில் மூங்கில் மரங்களை நட்டால் அவை வாகனங்களில் இருந்து வரும் நச்சுப்பொருள்களை அகற்றிவிடும். இல்லங்களிலும் இவற்றை நடலாம். கழிவுப்பொருள்களில் இருந்து வெளியேறும் வாயுவைச் சரிசெய்து விடும். ஆனால், மூங்கிலை நட்டால் பாம்பு வரும் என்ற மூட நம்பிக்கையில் இந்த ஜீவநாடியை நடுவதில்லை. சீனாவில் உழவு நிலங்களில் ஒரு பகுதி மூங்கில் மரங்களை நடுவதற்கு ஒதுக்கப்படுகின்றது. அதற்கு மானியமும் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வனப்பகுதி மொத்த நிலப்பரப்பில் 18 சதவிகிதம்தான். மரங்கள் அடங்கிய இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். சமீபத்தில் தமிழக அரசு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் துவக்கியது மன நிறைவைத் தருகிறது, தமிழக மக்கள்தொகையில் 50 சதவிகிதம் 18 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டாலே சுமார் மூன்றரை கோடிக்கு மேலாக மரங்கள் வளர்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளில் ஏராளமான நிலம் இருக்கின்றது, அங்கு மரங்கள் நடுவதற்கும் காய்கறிச் செடிகள் வளர்ப்பதற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, ஒவ்வொரு சிறை இல்லவாசிகளும் தான் நட்ட செடியை வளர்க்க வேண்டும். அது மரமான பின் அவருடைய பெயரைத் தாங்கும். மிகுந்த உற்சாகத்தோடு சிறையில் உள்ளவர்கள் பங்கு கொண்டனர். இப்போது புழல் சிறை, சோலையாகக் காட்சி அளிக்கிறது. காய்கறித் தோட்டம் பன்மடங்காகப் பெருகியுள்ளது.

தனி மனிதர்களாக கர்நாடகத்தைச் சேர்ந்த சிக்கண்ணாவும் திம்மக்காவும் மரங்களை நடுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். பெங்களூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் மேற்கே அமைந்துள்ள கூடூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. ஏமாற்றம் இருந்தாலும் மனம் தளராமல் ஏதாவது ஒரு உயிரை ஏன் வளர்க்கக்கூடாது என்று முடிவு செய்து, நிழல் தரும் மரங்களைப் பதியன் முறையில் செடிகளாகத் தமது குடிசை அருகில் வளர்த்தனர். அது சிறிது வளர்ந்த பிறகு தமது கிராமத்தில் அருகில் உள்ள ஊளிக்கல் நெடுஞ்சாலையில் இருபுறமும் நடுவதை முக்கிய பணியாகக் கொண்டிருந்தனர். விவசாயக் கூலிகளாக ஜீவனத்திற்கு நாள் முழுவதும் வயலில் கடும் உழைப்பு. மாலை வேளையில் தமது குழந்தைகளாக பாவித்து மரங்களுக்கு நீர் ஊற்றி வளர்த்தனர். வருடங்கள் உருண்டோடின. 1990-இல் சிக்கண்ணா இறந்தார். ஆயினும் 80 வயதான திம்மக்கா மரங்களின் பராமரிப்புப் பணியைத் தொடர்கிறார். ஹெப்பல் சாலையில் அவர் பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை சுமார் 300. அந்த மரங்கள் சாலையை உபயோகிப்பவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலைத் தருகின்றன; இந்திரா பிரியதர்ஷினி தேசிய மாமனிதர் விருதும் கர்நாடக பசுமை விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. திம்மக்கா பரிவோடு வளர்த்த குழந்தைகள் சாலையின் இருபுறமும் கம்பீரமாக நிற்கின்றன. மரங்களின் தோராய மதிப்பு சுமார் ரூபாய் 2 கோடி. ஆனால், திம்மக்கா இன்னும் தனது சிறிய குடிசையில் தன்மானத்தோடு பெருமையாக வாழ்கிறார். இளைஞர்களுக்கு மரம் நடுவதின் அவசியத்தை உணர்த்த பல இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றார்,

தமிழ்நாட்டில் சுமார் 17,200 வருவாய் கிராமங்கள் உள்ளன. கிராம நிர்வாக அலுவலகங்கள் ஏன் தம் கிராம மக்களை ஊக்குவித்து மரம் நடுவதை முக்கியப் பணியாக எடுத்துக்கொள்ளக்கூடாது? நேர்மையான கனவுகளோடு கிராம நிர்வாக அலுவலர் பணியில் சமீபத்தில் சேர்ந்தவர்கள் இதைத் தமது சமுதாயக் காணிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

""தனி மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றார் பாரதியார். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 70 சதவிகிதம் இந்தியர்கள் வறுமையில் வாடுகின்றனர். மதுரையைச் சேர்ந்த நாராயணகிருஷ்ணா என்ற இளைஞர் தன்னால் ஏழைகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை யோசித்து, வசதியான தனது பணியைவிட்டு சமுதாயப்பணியில் இறங்கியுள்ளார். தினமும் அதிகாலை எழுந்து சுத்தமான சாப்பாடு செய்து, மதுரை நகரில் பொது இடங்களில் போக்கிடம் இன்றி வாழும் ஏழைகளுக்கு உணவு விநியோகிக்கின்றார். மருத்துவ உதவியும் உடையும் அளிக்கிறார்; ஏன், அவர்களுடைய முடியை வெட்டி, குளிக்கவும் வசதி செய்து வருகின்றார். அரசு நலதிட்டங்கள் முதியோர் உதவித்தொகை இத்தகைய நலிந்தவர்களுக்குச் சென்று அடைய வேண்டும். உதவி கேட்டு பெறப்படும் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அரசு நலத்திட்டங்களைப் பற்றி தெரியாது வறுமையில் வாடுபவர்களை இனம் கண்டு தன்னார்வத்தோடு, அரசுப் பணியாளர்கள் உரியவர்களுக்கு உதவி கிடைக்க வழிசெய்தால்தான் திட்டங்கள் முழுமையடையும்.

""பனியில்லாத மார்கழியா, படையில்லாத மன்னவனா?'' என்பதுபோல் காவலும் கதவுகளும் இல்லாத கிராமம் இந்தக் காலத்தில் உள்ளது என்பது ஆச்சரியம். ஆனால் உண்மை. மராட்டிய மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில் உள்ள காத்தேவாடி என்ற கிராமத்தில் இத்தகைய அமைதியான சூழல் உள்ளது; அமரிக்கையான மனித நேயத்தோடு பழகும் மக்கள், தூய்மையான தெருக்கள், அழகான வீடுகள், பசுமை கொஞ்சும் கிராமம் காத்தேவாடி.

தமது கிராமம் ஒரு முன்மாதிரி கிராமம் என்பதில் அங்குள்ள மக்கள் பெருமை கொள்கிறார்கள், அயலூரார் யார் வந்தாலும் அவர்களை உபசரித்து தம் வீட்டில் உள்ள எளிமையான உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சாலைகள் மண் சாலைகள்தான். ஆனால், மக்கள் யாரும் குப்பை போடுவதில்லை. குப்பைகள் அவ்வப்போது அகற்றப்பட்டு ஊர் ஒதுக்குப்புறத்தில் உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கிராம மக்களுக்கு வசதியாக சிறிய கூட்டுறவுக்கடைககள் உள்ளன. நகரில் உள்ள பெரிய அங்காடிகள்போல் அங்கும் பொருள்கள் அழகாக அடுக்கப்பட்டு அதன்மீது விலைப்பட்டியலும் போடப்பட்டிருக்கிறது, ஆனால், ஒரு வித்தியாசம் கடைகளை நிர்வகிக்கப் பணியாளர்கள் இல்லை. அதற்குப் பதிலாக இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பொருள் வாங்குபவர்கள் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு அதற்கான விலையை ஒரு பெட்டியில் போட்டுவிட வேண்டும், மனது வைத்தால் அடுத்த பெட்டியில் கிராமப் பொது நிதிக்காக தன்னால் இயன்றதைப் போடவேண்டும், பணியாளர்கள் இல்லாத அந்த அங்காடி சாதாரண மக்கள் நேர்மையானவர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாக இயங்கி வருகின்றது.

காத்தேவாடியில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் மக்கள் கூடிப்பேசி முடிவெடுக்கிறார்கள். ஜாதி, மத பேதம் இல்லை. மனித நேயத்தோடு மக்கள் பழகுகிறார்கள். முன்பு பல பிரச்னைகளைச் சந்தித்த அந்தக் கிராமம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இந்த கிராமத்தில் குடிப்பழக்கம் இல்லை. மக்கள் புகையிலை போடுவது இல்லை; சுத்தம் சுகாதாரம் ஒற்றுமை பேணப்படுகின்றன. நன்மதிப்பீடுகள், பரோபகாரம் போன்ற அமைதியான சமுதாயத்திற்கு வேண்டிய எல்லா நற்குணங்களும் நிரம்பி உள்ளன. ஏற்றமிகு இந்த மாற்றத்தை ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது; இம்மாதிரியான மாற்றம் மற்ற இடங்களிலும் சாத்தியம்தான். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் சந்தர்ப்பவாதிகள் ஜாதி வெறியர்கள் தலையீடும் இல்லாமல் இருந்தாலே போதும்.

மக்கள் உழைப்பதற்கு வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு மூன்று குறிக்கோள்களை வைத்தார். 1) மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கான வழிகள் 2) அவர்களது செயல்திறனை உயர்த்துவதற்கான முயற்சி 3) உண்மையாக உழைத்தால்தான் புதிய வசதிகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தல். இது எல்லா அரசாளுமைக்கும் பொருந்தும்.

ஜனநாயகத்தில் தொலைநோக்குப் பார்வை, அரசியல் திண்மை, செயலாக்க உறுதி மிக முக்கியம். மழைநீர் சேகரிப்பு, சென்னைக்குக் குடிநீர் போன்ற திட்டங்கள் நமது முதலமைச்சரின் நேரடி தலையீட்டால் வெற்றி பெற்றன என்பது நாடறியும். அவ்வாறு மரம் நடுதல் என்ற பசுமைப்புரட்சி, எல்லா இல்லங்களிலும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் என்ற பசுமை வீடு திட்டம் மக்கள் ஒத்துழைப்போடு வெற்றியடைய வேண்டும்.

பொதுநலம் பேணும் நாராயண கிருஷ்ணா, திம்மக்கா - சிக்கண்ணா போன்ற எளியவர்கள் பலர் இருக்கிறார்கள். "உழைப்புதான் உயர்வைத் தரும், மெய்வருத்தம் கூலிதரும்' என்று உணரும் வேளை வந்துவிட்டது.

கட்டுரையாளர்: முன்னாள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர்.

நன்றி :- தினமணி, 24-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.