Wednesday, April 24, 2013

"தமிழ் எழுத்தாளர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம்'


     சென்னை கவிதா பதிப்பகத்தில் நடைபெற்ற உலகப் புத்தக தின விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார் எழுத்தாளர் ஜெயகாந்தன். உடன் (இடமிருந்து) நல்லி குப்புசாமி, இளையராஜா, எழுத்தாளர் மாலன், யுஎஸ்எஸ்ஆர் நடராஜன், கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கம்.

தமிழ் எழுத்தாளர்கள் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகம். எனவே தான் தமிழுக்கு உரிய விருதுகள் கிடைப்பதில்லை என எழுத்தாளர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், மு.மேத்தா ஆகியோர் கூறினர்.

சென்னை பாண்டிபஜாரில் உள்ள கவிதா பதிப்பகத்தில் உலகப் புத்தக தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, முதல் விற்பனையை இளையராஜா, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் தொடங்கி வைக்க, கற்பகம் புத்தகாலய உரிமையாளர் நல்லதம்பி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், சா.கந்தசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், மு.மேத்தா, சுகி.சிவம், மாலன், ம.ராஜேந்திரன், டாக்டர் கே.எஸ்., த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் வாசகர்களுடன் கலந்துரையாடினர்.

சிற்பி பாலசுப்பிரமணியம், மு.மேத்தா ஆகியோர் கூறியதாவது:

இலக்கியத்துக்கான நோபல், புக்கர் மற்றும் இந்திய அளவிலான உயரிய விருதுகள் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கிடைக்காததற்குக் காரணம், ஒரு தமிழ் எழுத்தாளர் இன்னொரு தமிழ் எழுத்தாளரை முன்னிறுத்துவதில்லை.

வேறு மொழிகளில் உள்ள எழுத்தாளர்கள், சக எழுத்தாளருக்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு வரும் போது, அதனை தமது மொழிக்குக் கிடைக்கும் விருதாகக் கருதுகின்றனர். கருத்துவேறுபாட்டை மறந்து, விருதைப் பெற்றுத்தர முயற்சி செய்கின்றனர்.

தமிழ் எழுத்தாளர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு அதிகம். தமிழை முன்னிலைப் படுத்திக் கொள்ளக்கூடிய மனோபாவம் தமிழர்களுக்கு இல்லை. விருதை மொழி அடிப்படையில் பார்க்காமல், தனிப்பட்ட நபருடன் இணைத்துப் பார்க்கின்றனர். இந்திய அளவில் எல்லா எழுத்தாளர்களும் தங்களை முக்கியத்துவப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் அந்தச் சூழல் இல்லை.

தமிழில் ஒரு நல்ல எழுத்தாளனைப் பற்றி இன்னொரு நல்ல எழுத்தாளன் பேசுவதில்லை. உயர்வாக வைத்துப் பேசப்படுகிற எழுத்தாளர்கள் மத்தியிலும் இதே நிலைதான்.

நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இதுவரை தமிழர் யாரும் வந்ததில்லை. மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கும் தமிழர்கள், தமிழ் மொழி, கலை, பண்பாட்டோடு எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.

சாகித்ய அகாதெமியின் தென் மண்டல தலைமையிடமாக சென்னை இருந்தது. அதனை பெங்களூருக்கு மாற்றிய போது, அதன் பின்னணியில் கன்னட அரசியல்வாதிகளும் இருந்தார்கள். ஆனால் தேசிய நிறுவனம் ஒன்றை ஏன் சென்னையில் இருந்து மாற்றுகிறீர்கள் என தமிழகத்தில் யாரும் கேள்வியெழுப்பவில்லை. அதைப் பிரச்னைக்குரிய விஷயமாகவே கருதவில்லை.

தொல்பொருள் ஆய்வுத்துறையை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றம் செய்த போதும், அதனை யாரோ சம்பந்தப்பட்ட விஷயமாகவே இங்குள்ளவர்கள் பார்த்தார்கள்.

தென்னிந்தியாவில் சென்னைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்ட பின்புலத்தில் அரசியல் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள எந்த மொழி எழுத்தாளர்களுக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பின்தங்கியவர்கள் இல்லை. சில துறைகளில் முன்னோடிகளாக உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை என்று சிற்பி, மேத்தா கூறினர்.

நிகழ்ச்சியில், நல்லி குப்புசாமி, சோம. வள்ளியப்பன், பாரதி புத்தகாலயம் நாகராஜன், கீதம் பதிப்பக உரிமையாளர் முத்துசாமி, கவிதா பதிப்பக உரிமையாளர் சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்                                               

நன்றி :- தினமணி, 24-04-2013

1 comments:

  1. Hi! ӏ ϳust ωοuld like to give you a big thumbs up for your excellent infoгmation yοu
    haѵe right herе on this pοѕt.
    I аm rеturning to your wеb site fоr
    mоre soοn.

    Feel free to visіt my web page ... jewelry purchasing

    ReplyDelete

Kindly post a comment.