Thursday, April 25, 2013

திருக்குறளுக்கு விளக்கம் தரும் புதுக்குறள்: தூத்துக்குடி என்ஜினியரின் புது முயற்சி ! உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி அறியாதவர்கள் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது என்று கூறும் நேரத்தில் திருக்குறளுக்கு அதே வரிசையில் குறள் வடிவில் விளக்கம் தந்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் உச்சிமாகாளிதுரை. 

பொதுவாகத் திருக்குறளுக்கு உரைநடை வடிவிலேயே விளக்கம் எழுதியுள்ளனர் தமிழ் அறிஞர்கள். ஆனால் மரபு இலக்கணத்தில் குறள் வடிவிலேயே 7  சொற்கள் வரிசையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இதுவரை யாரும் திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்ததில்லை. 

உரைநடை வடிவிலான விளக்கத்தைப் படித்து விளக்கம் பெற முடியாதவர்கள் கூட, குறள் வடிவான விளக்கத்தை எளிதில் புரிந்து கொள்கின்றனர். அந்தளவிற்கு அதனை வடிவமைத்துள்ளார் தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் உச்சிமாகாளி துரை. 

இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது, நான் படிக்கும்போது தமிழ்ப் பாடத்தில் வரும் செய்யுள், இலக்கணத்தை அர்த்தம் அறிந்து படித்தது இல்லை. ஏதோ தமிழில் பாஸ் ஆக வேண்டும் என்பதற்காகவே படித்தேன். எனது தந்தை கட்டுமானப் பணி மேற்கொண்டு வந்ததால் நானும் பொறியாளருக்குப்’ படித்துக் கட்டுமானத் தொழிலை மேற்கொண்டுள்ளேன்.

நான், எனது பணி தேவைக்காக இமெயில் சேவையை பயன்படுத்த ஆரம்பித்தேன். அப்போது முதல் முதலாக ஒரு தமிழ் இணையதளத்தில் புதுக்கவிதை ஒன்றை வெளியிட்டேன். இதனைக் கண்ட தமிழ் அறிஞர் ஒருவர் என்னை மிகவும் கண்டித்தார். நீ எழுதியது கவிதையே இல்லை, பப்ளிக் பாத்ரூமில் கிறுக்குவது எல்லாம் கவிதையாகாது என்றெல்லாம் சாடினார். 

இதனைக் கேட்ட நான் அவரிடம் ''அப்படியெனில் கவிதை எழுதுவது எப்படி என்று எனக்கு சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டேன். அதுக்கு அவரோ அது உடம்புல இருக்கிற உயிர்போல ஆரம்பத்திலே இருந்தே வரணும், இடையிலே வந்தெல்லாம் சொருக முடியாது'' என்று கூறிவிட்டார். இருந்தாலும் நான் விடவில்லை, இன்னும் இரண்டே மாதத்திலே நான் மரபுக்கவிதை எழுதிக் காட்டுகிறேன், அதுமட்டுமல்ல ஒரு வருடத்திற்குள் நீங்களே பாராட்டுகிற மாதிரி தமிழ் இலக்கியத்தில் சாதித்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டேன். 

அதற்கேற்ப, புத்தகக் கடைகள், நூலகங்களுக்குச் சென்று தமிழ் இலக்கிய புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படித்து இலக்கியம் கற்று மரபுக்கவிதை எழுதினேன். இருந்தாலும் என்னுடைய கவிதையைப் பாராட்டும் மனநிலையில் அவர் இல்லை. அதனால் எல்லோரும் பாராட்டுற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். 

அப்பொழுது தான் திருக்குறள் புத்தகம் கண்ணில் பட ஒரு ஐடியா தோன்றியது. அதுவே திருக்குறளுக்குக் குறள் வடிவிலே விளக்கம் எழுத காரணமாக அமைந்துவிட்டது. திருக்குறளுக்கு விளக்கம் எழுதிய தமிழ் அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் வாங்கிப் படித்தேன். பகல், இரவு பார்க்காது கடுமையாக முயற்சி செய்து திருக்குறளுக்குக் குறள் வடிவிலேயே விளக்கம் எழுத ஆரம்பித்தேன். 

4 மாத முடிவிலே அனைத்துக் குறளுக்கும் குறள் வடிவிலே விளக்கம் எழுதி முடித்தேன். இதைப்பார்த்த தமிழ் அறிஞர்கள் பலரும் என்னை பாராட்டினர். என்னை முதலில் திட்டியவர் கூட என்னை மனமுவந்து பாராட்டியது எனக்கு கிடைத்த வெகுமதியாகும். 4 மாதத்தில் எழுதிய இந்த குறள்வடிவ விளக்கத்தை எனது கூகுள் குழும நண்பர்களின் உதவியுடன் கடந்த 3 வருடங்களாகத் திருத்தம் செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. இதனைப் புத்தகமாக வெளியிடும் 99.99 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.. இந்தப் புத்தகத்தைத் தமிழ் அறிஞர் குன்றக்குடி  பொன்னம்பலம் அடிகளார் திருக்கரங்களால் விரைவில் வெளியிட இருக்கிறேன். குறள்வடிவ விளக்கப் புத்தகமானது அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் இலவசமாக வழங்கிடவும், மற்றவர்களுக்கு ரூ.133க்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளேன். குறள் வடிவான இந்த விளக்கம் படித்தவுடனே சட்டென்று புரிந்துவிடும் என்பதால் மாணவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. 

என்னைப் பொறுத்தவரை இந்த குறள் விளக்கம் தமிழகத்திலுள்ள அனைத்து மாணாக்கரிடத்தும்,  சென்றடைய  வேண்டும் என்பதே எனது தீராத ஆசையாகும் என்றார். பொறியாளர் துரை ''தூதுக்குறள்”'' என்ற பெயரில் திருக்குறள் போன்றே அதிகாரங்களின் வரிசையில் புதுக்குறட்பாக்களை எழுதி வருகிறார்.

இன்றுள்ள இன்டர்நெட், இமெயில், செல்போன் காலத்தில் இளைய தலைமுறையினர் கேளிக்கை கொண்டாட்டங்களில்தான் தங்களின் பெரும்பங்கு நேரத்தை வீணடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இளையதலைமுறையினரும், வரும் தலைமுறையினரும் திருக்குறளின் புனிதத்தை உணரும் வகையில் பொறியாளர் துரை மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. 

பொறியாளர் துரையைத்தொடர்புகொள்ள...919443337783 என்ற எண்ணை டயல் செய்யவும். துரை திருக்குறளுக்கு குறள் வடிவில் எழுதியுள்ள விளக்கம். (எடுத்துக்காட்டு) குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு விளக்கம்: அகரம் முதலாம் மொழிக்கு; பகவான் பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு 

 குறள்: ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் விளக்கம்: பேருவகை கொள்வாள்; தன்மகனை நல்லதாய் ஊர்சொல்ல கேட்டறியும் தாய் 

இப்படியாக இவர் 1330 குறட்பாக்களுக்கும் குறள் வடிவில் விளக்கம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 English summary Durai, Tuticorin based engineer has written an explanation for Thirukural in the kural style itself. April 24, 2013 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/24/tamilnadu-kural-style-explanation-valluvar-kural-tuticorin-engine-174059.html

1 comments:

Kindly post a comment.