Thursday, April 25, 2013

தீபம் ஏற்றிய வெளிச்சம் - கெளதம நீலாம்பரன்

கெளதம நீலாம்பரன்

கௌதம நீலாம்பரன் 


 கெளதம நீலாம்பரன் அவர்களைப்பற்றி விரைவில் வெளிவரவிருக்கும் 
'தீபம் ஏற்றிய வெளிச்சம்' அச்சாக்க நூலின் ஒரு பகுதி)

200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்று நவீனங்கள், வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடகங்கள் என 65-  நூல்களை எழுதியுள்ளவர்.கெளதம நீலாம்பரன் இயற்பெயர் P.கைலாசநாதன் M.A.
இவர் பிறந்ததேதி.14-06-1948 பத்திரிகை உலகில் 40 ஆண்டுகள் அனுபவமுள்ளவர் ”தீபம்”’, ‘இதயம் பேசுகிறது”. “ஞான பூமி:. “   ஆனந்த விகடன் : , : குங்குமம் “, “முத்தாரம்”, “குங்குனச் சிமிழ்” ,  ஆகிய ஏடுகளில் பணிபுரிந்த இவர், தற்பொழுது முழு நேர எழுத்துப் பணியில் கவனம் செலுத்தி வருகின்றார்.
கெளதம நீலாம்பரனின் படைப்புகள்:தீபம், கணையாழி, கல்கி, கலைமகள், அமுதசுரபி, குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசிகிறது. ஞானபூமி, முத்தாரம், முல்லைச் சரம், கலாவல்லி, தினமணி கதிர், ச்ய்தேச மித்திரன் தினத்தந்தி, தினமலர் வார மலர், சிறுவர் மலர், மலேசிய வானம்பாடி போன்ற பிரபல தமிழ் ஏடுகளில் பிரசுரமாகியுள்ளன.
வரலாற்றுப் புதினங்கள் படைப்பதில் வல்லுனரான இவர் படைத்த வரலாற்று நவீனங்கள் வாசகரிடம் பரந்த செல்வாக்கைப்பெற்றன.அவை வருமாறு.
சேது பந்தனம், மன்னன் மாடத்து நிலவு, ஈழவேந்தன் சங்கிலி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித் திலகம், விஜய நந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், சோழவேங்கை, கலிங்கமோகினி,  வேங்கை விஜயம், வீரத்தளபதி மருதநாயகம், மோகினிக் கோட்டை, கோச்சடையன், ரணதீரன்,  ரஜபுதன இளவரசி, சுதந்திர வேங்கை ( பூலித்தேவன் வரலாறு ).
சிறுவர் நவீனங்கள் படிப்பதிலும் அவர் செய்த சாதனைகள் பற்பல.மாயப் பூக்கள், மாயத் தீவு, நெருப்பு மண்டபம், மாயக் கோட்டை எனப்பல.
சிறுகதைகளின் தனிச்சிறப்புக்கு ஒரு சான்று.கெளதம நீலாம்பரன் எழுதிய நூற்றுக்கணக்கான சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் ஒரே தொகுதியாக ஆயிரம் பக்கங்களில் “சரித்திரமும் சமூகமும்” என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது. ;
அவரது பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக முத்தாரம் வார இதழில் கெளதம நீலாம்பரன் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் எழுதிய சிறப்புத் தொடர், “புத்தர் சரிதம்.” 728 பக்கங்களில் நூலாகவும் வெளிவந்து, தினத்தந்தி ஆதித்தனார் நினைவுப் பரிசான ஒரு இலட்சம் ரூபாயையும் பெற்றுள்ளது.
சமூகப் புதினங்கள் :- 
 
காவியமாய் ஒரு காதல், ஜென்ம சக்கரம், கலா என்றொரு நிலா.
கவிதை நூல்கள் :- இதயமின்னல், அம்பரம்
நாடக நூல்கள் :- சேரன் தந்த பரிசு, மானுட தரிசனம், ஞான யுத்தம்
கட்டுரை நூல்கள் :- நலம் தரும்நற்சிந்தனைகள், இதய நதி, அருள் மலர்கள், ஞானத் தேனீ,. இவை அவரது மனவிசாலத்தின் மற்றும் சில ஜன்னல்கள்
இவர் பெற்ற விருதுகள் :- 
 
.அமுத சுரபி ( ஸ்ரீராம் டிரஸ்ட் ) - சுஜாதா ஃபிலிம்ஸ் இணந்து வழங்கிய பாரதி விருது
. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய “பேராசிரியர் கல்கி இலக்கிய விருது” , 
.சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய “தமிழ் வாகைச் செம்மல்”. 
.மன்னார்குடி செங்கமலர்த் தாயார் கல்வி அறக்கட்டளை விருது, : 
.கவிதை உறவு: வழங்கிய தமிழ்மாமணி விருது.
. சைதை மகாத்மா நூலகம் வழங்கிய :சக்தி கிருஷ்ணசாமி விருது : 
.கவிஞர் பொன்னடியான் சழங்கிய ‘இலக்கியப் பேரொளி” விருது
. மற்றும் திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் வழங்கிய 
‘கதைக்கலைச் செம்மல் விருது

கௌதம  நீலாம்பரன் அவர்களிடம் சில கேள்விகள்.
01.   எழுத வேண்டுமென்று ஏன் தங்களுக்குத் தோன்றியது?

 வாசிப்பை நேசித்தவன் நான். கல்கி, நா.பா, மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவார் சீதாராமன், மீ.ப.சோமு, கி.ரா.கோபாலன், கோவி.மணி சேகரன் போன்றோரது எழுத்துக்களை மிகச் சிறு வயதிலேயே அதாவது 17-18 வயதுக்குள் வாசித்துவிட்டேன். கற்றலின் பரிணாமம் செய்முறைப் பயிற்சிதானே ? நாமும் இப்படி எழுதிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது; எழுத ஆரம்பித்தேன்.
02.   முதன் முதலாக தாங்கள் வாசித்த அல்லது படைத்த படைப்பு எது ?

முதன் முதலில் நான் படித்தது பெரிய எழுத்துக்களில் வெளிவந்த பெரியபுராணம் நூல்தான். இதை என் தாயார் பவானி அம்மாள் தினமும் சிக்குப் பலகையில் வைத்துப் படிப்பார்கள். மிகவும் பக்தி சிரத்தையாக, அந்த நூலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாசிப்பார்கள். தடிமனான நூல். உள்ளே ஒவ்வொரு கதைக்கும் கோட்டு ஓவியங்கள் அச்சிடப்பட்டிருக்கும். சில போதுகளில் அம்மாவுக்காக நான் படித்துக்காட்ட நேரும். பாட நூல்களுக்கு அப்புறம் என் வாசிப்பைத் தொடங்கி வைத்தது அந்தப் பெரிய புராணம்தான். அதில் பக்தியின் பரவசம் கண்டேன், பிறகு இதே போன்று பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை நூல் வாசித்தேன். சாண்டில்யனின் யவனராணியும், கடல்புறாவும் என்னை விவரிக்க இயலாத வீரஞ்சார்ந்த ஒரு புதிய உலகுக்கு இட்டுச் சென்றது. நா.பா.வின் மணிபல்லவம் என்னுள் தத்துவ விசாரணைகளைத் தோற்றுவித்தது .
03.   ‘அருள் மலர்கள்’ நூலில் தாங்கள் சிவாச்சார்யக் குடும்பப பாரம்பர்யத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி மேலும் கொஞ்சம் கூறுங்கள்.

ஆம். நான் சிவாசார்ய மரபைச் சேர்ந்தவன். தந்தை, தமையன்கள் என எங்கள் குடும்பத்தவர்கள் பலரும் சிவன் கோவில்களில் பூஜை செய்பவர்களே. நானும் பதினாறு வயது வரையில் ஆலயத்தில் கைங்கர்யம் செய்தவனே. தென்னார்க்காடு ( பழைய ) மாவட்டம் விருதாசலம் அருகே உள்ள ஒரு  சாத்துக்கூடல் என்ற சிற்றூர் எங்கள் ஊர்,

சாத்து என்றால் உப்பு என்று பொருள்.  அந்தக் காலத்தில் ஏராளமான உப்பு வண்டிகள் அந்தச் சிற்றூரில் கூடிப் பின் பல்வேறு ஊர்களுகளுக்கும் பிரிந்து செல்லும். எனவே, சாத்துக்கூடல் என்ற பெயர் வந்தது. அதே போன்று ஒருவகையான அத்திமரங்கள் நிறைந்த காடாக விளங்கியதால் ஆர்க்காடு என்ற பெயர் ஏற்பட்டது. காலச் சுழற்சியில் நன்கு விபரம் தெரிந்தவர்கள் கூட ஆற்காடு என்று தவறாக எழுதத் துவங்கிவிட்டனர்.

தமிழ் விக்கியில்  விளக்கத்துடன் எடுத்துரைத்தால் கூட ஏற்க மறுக்கின்றனர். ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர். ஆர்க்காடு என்ற காரணப் பெயரையே தமிழன்பர்கள் இனியேனும் பயன்படுத்துவார்களாக. சாத்துக்கூடல்  அருகில் உள்ள விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயம், கண்டராதித்தர் சோழர், செம்பியன் மாதேவியரால் திருப்பணி செய்யப்பட்ட மிகப் பழைய ஆலயம். எங்கள் பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் பெரிய பெரிய கோயில்கள் உண்டு. எல்லாவற்றோடும் ஏதாவது ஒரு மன்னரின் வரலாறும் சேர்த்தே பேசப்படும். எங்கள் ஊரச் சுற்றியுள்ள பல ஊர்கள் வரலாற்றுப் பெருமையுடையவை. மன்னன் பாடி, நந்தி மங்கலம், செரு மங்கலம், இடையூர், புடையூர், கோமங்கலம்., கோனூர் என அரசர்களின் தொடர்புடையவையாகவே இருக்கும். இவை எல்லாம்கூட வரலாற்றுக் கதை எழுதுபவனாக  என்னை உருவாக்கிய காரணிகளாக இருக்கக்கூடும்.
04.   தாங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள் ?

தமிழ் மொழி, தமிழர் கலாசாரம், தமிழர் பண்பாடு, தமிழ் மண்ணின் தொன்மச் சிறப்புகள் அழிந்து போய்விடக் கூடாது அல்லது மறக்கடிக்கப்பட்டு விடக் கூடாது என்று யாரெல்லாம் எண்ணுகிறார்களோ , அவர்களுக்காக எழுதுகின்றேன். ‘ எப்படியெல்லாம் வாழ்ந்தனர் நம்முன்னோர்கள்’ என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்பவைதான் வரலாற்று நவீனங்கள், காதல், வீரம், மங்காத மானுடப் பண்புகள், மொழி வளம் போன்றவை வரலாற்று நவீனங்களில் சற்று கூடுதலாக அமைந்திருக்கும்.
05.   பலநூறு படைப்புகள் தங்கள் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறன. அவற்றில் தங்களுக்கு மிகவும் பிடித்தது என்று பல இருக்கலாம். மிக மிகப் பிடித்தது எது ? ஏன் ?

சிறுகதைகள், நாவல்கள், கட்டிரைகள், கவிதைகள் என 60-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறேன். அனைத்துமே தமிழகத்தின் முன்னணி வார, மாத, நாளெடுகளில் பிரசுரமானவை. சித்தார்த்த கெளதம புத்தரின் வாழ்க்கைச் சரிதத்தை ‘புத்தர் பிரான்’ என்னும் பெயரில் முத்தாரம்  வார இதழில் மூன்றறை ஆண்டுகள் தொடராக எழுதினேன். அது நூலாகவும் வெளிவந்தது. “தினத்தந்தி’ ஆதித்தனார் விருது ரூபாய் ஒரு இலட்சம் ரொக்கப் பரிசினையும் பெற்றுத் தந்தது. ‘குமுதம்’ வார இதழில் நான் எழுதிய மருத நாயகம் அண்மையில் நான் எழுதிய ’கோச்சடையான்’ போன்ற வரலாற்று நவீனங்கள் மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தன. இருப்பினும் நான் எழுதிய ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்னும் வரலாற்று நவீனத்தை எனக்கு மிக மிகப் பிடித்த நாவலாகச் சொல்லலாம்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் , பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன். வீரபாண்டியன் சரித்திரத்திற்கு இணையான சரித்திரம் இவனுடையது. காலத்தால் இவனே முந்தையவன். கட்டபொம்மன் பிற்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்தான். சங்கிலி மன்னன் அதற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த வந்த போர்த்துக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டான். இப்புரட்சி வீரனைத் தந்திரமாகச் சிறைப்பிடித்து , ஹோவாவிற்குக் கொண்டு வந்து தூக்கிலிட்டுக் கொன்றனர், போர்த்துக்கீசீயர். வெள்ளையர் தங்சையை ஆண்ட இரகுநாத நாயக்கன் , வருண குலத்தான் என்னும் தலைவன் மூலம் படைகளை ஈழத்திற்கு அனுப்பி , சங்கிலி மன்னனுக்கு உதவினான். இந்த வரலாற்றை 1983-இல் ஈழம் கொந்தளித்தபோது, நாடகமாக எழுதி, நம் தமிழ் மக்களிடம், ஈழ வரலாற்றைப் பேசச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.
இந்த நாடகம் அன்ன்றைய தமிழக முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அரங்கேறுவதாக ஏற்பாடானது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை.
இக்கதையைக் கேட்ட மக்கள் திலகம், ‘பிறகு இதை ரஜினி குமாரை நடிக்க வைத்துத் திரைப்படமாக எடுக்கலாம். முதலில் பத்திரிகையில் வெளியிட்டு, ஈழ வரலாற்றை மக்கள் அறியச் செய்யுங்கள்.’ என்று மணியன் அவர்களிடம் கூறியிருக்கிறார். நான் அப்போது, மணியனின் இதயம் பேசுகிறது வார இதழில் பணி புரிந்து கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். கூறிய படியே அந்த வார இதழில் ஈழ வேந்தன் சங்கிலி கதையைத் தொடராக வெளியிட்டார். இதற்காக ஜெமினி ஸ்டுடியோ வாசலில் பிரம்மாண்டமான கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அமிர்தலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டபடி நான் அந்தக் கதையை நாவலாகவும் எழுதினேன்.  அந்த நவீனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருப்பதில் வியப்பில்லையே ?
06.   தங்கள் எழுத்து வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது என்ற திருப்தி தங்களுக்கு உள்ளதா ?இல்லையெனில் காரணங்களைக் கூறுங்கள் 

இதில் அவசரப்பட்டு எதுவும் சொல்ல இயலாது. நல்ல எழுத்துக்கள் அதற்கான நல்விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை உள்ளவன் நான். பத்திரிகைகளில் ஒரு படைப்பு வெளியாகும்போது, அவற்றைப் பல்லாயிரம்பேர் வாசிக்கின்றனர். அதே படைப்பு நூலாக வரும்போது சில நூறுபேர் படிப்பதே அரிதாக அமைந்து விடுகிறது. வாசித்த அத்தனைபேரும்  தன் மன உணர்வுகளைப் படைப்பாளரோடு பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது. ஒரு சிலர் கடிதம் எழுதுவர். இதை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது.

ஒரு கவிதை அல்லது ஒரு சிறு கதை அல்லது ஒரு நவீனம் அதை எழுதிய படைப்பாளியின் காலத்திற்குப் பின்னாலும் கூடப் ப்யன் விளைவிக்கலாம்.என் படைப்புகள் சிலர் மனங்களில் அழுத்தமான பாதிப்பு ஏற்படுத்திய விபரங்களை நானறிவேன். ’புத்தர்பிரான்’ என்னும் தொடரை ‘முத்தாரம்’ வார இதழில் நான் எழுதும்போது , திருவள்ளூர் அருகே ஒரு கிராமப் பொதுமன்றத்தில் அதை வாரந்தோறும் மக்களைக் கூட்டி வைத்து வாசித்துக் காட்டியதாக ஒரு வாசகர் எனக்கு தபால் எழுதினார். ( திருவள்ளூர் மாவட்டத்தில் தற்பொழுது ஒரு புத்தர் சிலை வைத்த கோவில் எழுப்பப் பட்டுள்ளது )
 ’விரிசல் விழாத அணைகள்’ என்கிற எனது சிறுகதை விகடனில் வெளியானபோது அதை வாசித்தபின், ஒருவாசகர் பிரிந்துபோன மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டதாக, எனக்கு எழுதியிருந்த கடிதம் மகிழ்ச்சியைத் தந்தது.
‘ஈழ வேந்தன் சங்கிலி’ நாடகத்தை வாசித்துப் பலவருடங்கள் கழித்து, லண்டனில் இருந்து ஒரு இலங்கைத் தமிழர் ( Dr.இந்திரகுமார் ) மணிமேகலைப்பிரசுரம் மூலம் என்னோடு தொடர்புகொண்டு, நெகிழ்ந்து பேசியதுடன், அதை வாங்கி நூலாக வெளியிட்டார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழரது வெளியீடு பலருடைய பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.
07. எழுத்துக்கு ஒரு காலத்தில் இளைஞர்களை உருவாக்கும் ஆற்றல் இருந்தது. இப்போதும் அவ்வாறு ஒரு புதிய தலைமுறையை உருவாக்குகிற வாய்ப்பை தாங்கள் ஒரு “ஜர்னலிஸ்ட்” என்ற முறையில் சந்தித்துள்ளீர்களா?

நா, பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர், பொன் விலங்கு, பாண்டிமாதேவி, மணிபல்லவம் போன்ற நவீனங்களை வாசித்துத்தான், நான் அவருடைய ரசிகனாகி, அவரைச் சந்தித்தேன். அவரும் என்னை ‘தீபம்’ இதழில் சேர்ந்து பணிபுரிய வாய்ப்பளித்தார். இது நிகழவில்லையெனில் இன்று கெளதம நீலாம்பரன் என்கிற ஓர் எழுத்தாளனே உருவாகியிருக்க முடியாது. அந்த அளவு நான் பிறரை உருவாக்கக் கூடிய வெற்றியாளன் இல்லை. ஏதோ காலம் ஓடியது; அவ்வளவுதான். ஆனால், பல ஏடுகளில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவன் என்ற வகையில் என்னால் பலர் நலன் பெற்றதுண்டு. முன்னுக்கு வந்ததும் உண்டு. அதையெல்லாம் மனதுக்குள் எண்ணி மகிழ்வதே சிறப்பு.
08   பொதுவாக யாரும் எதையும் படிப்பதில்லை. அதற்கு நேரமும் இல்லை. என்ற குற்றச்சாட்டு பரவி உள்ளது. அதைத் தாங்கள் நம்புகிறீர்களா ?

நம்பவில்லை. நல்ல நூல்களைத் தேடிப் படிப்பவர்கள் எண்ணிக்கை என்றுமே குறைவுதான். இன்றும் படிப்பவர்கள் இருக்கிறார்கள். நவீன ஊடகங்கள் எத்தனை வந்தாலும், புத்தகம் பெற்றுள்ள தனிச் சிறப்பிடத்தை எதுவும் அசைக்க முடியாது. ,அலைகள், நதிகள் அதே மகிமையுடன் அங்கேயே இருக்கின்றன. அணுகியவர் அனுபவம் ஆனந்தம். அணுகாதவர் பற்றிப் பேசிட எதுவுமில்லை.
09 புதிய வாசகர்களை உருவாக்க என்ன செய்யவேண்டும் ? ஒரு ‘ஜர்னலிஸ்ட்; என்ற முறையில் நாட்டு நலம் நாடும் எழுத்தாளர் முறையில் தாங்கள் என்ன யோசனையைக் கூறுக்கிறீர்கள் ?

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் நடமாடும்  புத்தக விற்பனை நிலையங்களை தமிழகம் முழ்ழுவதும் கொண்டு செல்கிறது. அதே போன்று நடமாடும் நூலகங்களையும் அரசாங்கம் சிறு கிராமங்களுக்குக்கூட கொண்டு செல்லவேண்டும். எளிய கட்டண வசதியுடன் நூல்களைப் பலருக்கும் வாசிக்கக் கொடுத்து , ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் திரும்பப் பெறவேண்டும். இப்படி நடமாடும் நூலகங்கள் அந்தந்த மாவட்டநூலகங்களை / வட்டார நூலகங்களை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிற்றூர்களுக்கெல்லாம் பயணிக்கவேண்டும். பழைய பேருந்துகளைக் கூட தேவைக்கேற்ப மாற்றி வடிவமைத்துக்கொள்ளலாம். தமிழக அரசு மனம் வைத்தால் இந்த அறிவுப் புரட்சியை நிச்சயம் செய்ய முடியும். சத்துணவு ஊழியர்களையும், மகளிர் சுய உதவிக் குழுக்களையும் கூடப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழனிடம் சங்க இலக்கியங்களும், நீதி நூல்களும், நவீன் இலக்கியங்களும் ஏராளம் உள்ளன. அவற்றை அனுபவிக்கத்தான், பாமர- பொது மக்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இந்த அறிவுப் பொதுவுடைமைப் புரட்சி அவசியம் நிகழ வேண்டும். நிகழ்ந்தால், ஊரில் வீண் தகராறு, வெட்டு, குத்து, சக மானுடப் பகைமை நிச்சயம் மறையும். மானுட நேயம் தழைக்கும் யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவார்களோ தெரியவில்லை.
10.நெடிய இலக்கிய உலக அனுபவமும், பத்திரிகை உலக அனுபவமும் கொண்ட தங்கள் வாழ்வில் பல பெரிய மனிதர்களைச் சந்தித்த அனுபவம் மற்றும் அவர்கள் அறிவுரைகள் தங்களுக்குக் கிடைத்திருக்கும். தங்களால் விரிவாக அவற்றைப் பகிர்ந்து கொள்ள இயலுமா ? அன்பு கூர்ந்து விவரிக்கவும்,

தீபம் இலக்கிய இதழில் பணி புரிந்தபோது, நா.பா. என்னை இலக்கிய உலகப் பிரபலங்கள் பலருடைய இல்லங்களுக்கும்,. கடிதங்கள் தருவது, படைப்புகள் வாங்கி வருவது, தீபம் இதழைக் கொண்டு அளிப்பது  போன்ற பணிகளுக்காக அனுப்புவார். இந்த வாய்ப்புகள், அகிலன், கி.வா.ஜா.கவிஞர் சுரதா, கண்ணதாசன், முத்துலிங்கம், ஞானக் கூத்தன், ஜெயகாந்தன், அசோக மித்திரன், திருவாரூர் தியாகராஜன் ( சின்னக் குத்தூசி ), போன்ற பல பிரபலங்களைச் சந்திக்கவும்,, பழகவும் அருந்துணையாய் அமைந்தன. திருமதி லட்சுமி, சிவசங்கரி, இந்துமஇ, ஆர்.சூடாமணி, லட்சுமி இராஜரத்தினம் போன்ற பிரபலங்களையும் சந்தித்தித்த அனுபவங்களும் உண்டு.
அஞ்சறைப் பெட்டி, ஆறாங்கம் என்ற பகுதிகள் தீபம் இதழில் வெளிவரும் . இதற்காகவும் ”மினி” பேட்டி மாதிரி திரையுலகப் பிரபலங்கள் பலரைச் சந்தித்து எழுதுவேன். நடிகர் சகஸ்ரநாமம், ஆர்.எஸ்.மனோகர், இயக்குநர் பஞ்சு அருணாசலம், ஏ.எஸ்.பிரகாசம், கே.பாலச் சந்தர், ஏ.பி.நாகராஜன், வசனகர்த்தா பால முருகன், மதுரை திருமாறன், தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல், கலாகேந்திரா கோவிந்தராஜன் என ஏராளமான பிரபலங்களுடன் எளிதில் கலந்துரையாட முடிந்தது. ஒவ்வொரு அனுபமும் விரிக்கிற் பெருகும். எனது சினிமா ஆசைகளை எவரிடத்தும் வெளிப்படுத்தவே இயலாமற் போனது. இத்தனைக்கும் எனது பன்னிரண்டு வயதிலேயே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் சில மாதங்கள் சேர்ந்து நடித்த அனுபவமும் உண்டு. நாடகக் கம்பெனியிருந்து வீட்டார் பிடித்து இழுத்துச் சென்று விட்டனர். சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவன் நான். ஆனால், என்னவோ எப்படியோ எழுத்தாளனாகிவிட்டேன்.
 
( மேலும் வரும் )
    . .  

0 comments:

Post a Comment

Kindly post a comment.