Tuesday, April 23, 2013

இலவசங்களை வழங்க அரசுப்பணம் தேவையில்லை; தொண்டுளமே போதும் !



                                 இராஜஸ்தான் இளைஞர் சங்கம் சார்பில்
                                ஒரு கோடி பேருக்கு ஒரு வேளை உணவு

 இராஜஸ்தான் இளைஞர் சங்க மெட்ரோ அமைப்பு சார்பில் ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு உணவு தானியங்களை வழங்குகிறார் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் எஸ்.டி.லட்சுமி. உடன் (இடமிருந்து) நடிகர் அருண்விஜய், செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு தலைவர் ஹரீஷ் மேத்தா, நடிகர்கள் சேது, சீனிவாசன், இளைஞர் சங்கத் தலைவர் அனுராக் துகார்.

இராஜஸ்தான் இளைஞர் சங்கம் சார்பில் உணவு வங்கித் திட்டத்தின் 20ஆம் ஆண்டு கொண்டாட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டில் ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கு ஒரு வேளை உணவு வழங்க சங்கம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இராஜஸ்தான் இளைஞர் சங்க மெட்ரோ அமைப்பு சார்பில் உணவு வங்கித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த குடும்பத்தினர், தினமும் ஒரு கைப்பிடி அளவு உணவு தானியத்தைச் சேமித்து இளைஞர் சங்கம் மூலம் 75 ஆதரவற்ற இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தானமாக அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் ஆதரவற்ற 2,000 பேருக்குத் தினமும் ஒருவேளை உணவளிக்கப்படுகிறது. உணவு வங்கித் திட்டத்தின் 20ஆவது ஆண்டு விழா இராயப்பேட்டை பைலட் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு உணவளிக்கப்பட்டது. பின்னர், தலா 700 பேர் வீதம் மூன்று அமர்வுகளாக "கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அந்தப் படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன், சேது மற்றும் நடிகர் அருண் விஜய், சாந்தனு, அறிமுக நடிகை மீனாள் உள்ளிட்டோர் ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் பணிகளைப் பாராட்டிப் பேசினர்.

மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் எஸ்.டி. லட்சுமி பேசுகையில், ""நீங்கள் (ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்) வளரும்போது, சட்டத்துக்கு உள்பட்டு நடப்பவர்களாக, நாட்டு வளர்ச்சியில் பங்கேற்கும் மனிதர்களாக உருவாக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு உதவும் இராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும்'' என்றார். இதுவரை 2 கோடி பேர் ஒருவேளை உணவு உண்ணும் அளவுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 1 கோடி பேர் ஒரு வேளை உணவு உண்ணும் அளவுக்கு உணவு தானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இளைஞர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஹரீஷ் மேத்தா, இராஜஸ்தான் இளைஞர் சங்க மெட்ரோ அமைப்பு தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அனுராக் துகார், செயலாளர் லலித் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.                     
 
 நன்றி :- தினமணி, 23-04-2013                          
 
மாணாக்கர்களுக்கு இலவச மதிய சத்துணணவு, செருப்பு, பற்பொடி, சைக்கிள்,மடிக்கணினி, புத்தகங்கள், சீருடை, பஸ்பாஸ் ...........இன்னோரன்ன பல இலவசங்களை அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி வாங்கித் தரவேண்டிய அவசியமில்லை.
 
ஆங்காங்குள்ள சர்வசமய மத அமைப்புக்களைக் கொண்ட ”அறக்  குழு ஒன்இனை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் அமைத்துவிட்டால்,அவர்களே இதைவிட நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். ”நம்ம ஊரு பள்ளிக் கூடத்தில் படிக்கும் புள்ளைகளுக்கு நாம் செய்யாமல் யார் ?செய்வார்கள் ?”  என்ற உணர்வைத் தூண்டி விட்டாலே போதுமானது.
 
பல்வேறு சந்தர்ப்பங்களில் இக்கருத்து எமது வலைப்பதிவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இது நிறைவேற்றப்பட்டால், அரசு பட்ஜெட்டில் எப்படி துண்டு விழும் ?                                                                                                           

0 comments:

Post a Comment

Kindly post a comment.