Saturday, April 6, 2013

மழை நீர் வடிகால்வாய்ப் பணியால் தொலைபேசிக் கேபிள்கள் துண்டிப்பு !

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்வாய் தோண்டும் பணியால் மிக நீண்ட தூரத்துக்குத் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்னை தொலைபேசியகம் (பி.எஸ்.என்.எல்.) முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.  மக்கள்தொடர்பு அலுவலர் விஜயலட்சுமி வெளியிட்ட செய்தி:

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 4-ம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய் தோண்டும் பணியால், சென்னை தொலைபேசி மற்றும் சென்னை தெற்கு தொலைபேசி மண்டலத்தால் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் மிக நீண்ட தூரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு இதுதொடர்பாகத் தகவல் அளித்த சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர், பி.எஸ்.என்.எல்.க்கு தகவல் அளிக்கவில்லை.

இந்த பாதிப்பு காரணமாக சென்னை சேத்துப்பட்டு, சேட் காலனி பகுதி தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மாற்று ஏற்பாட்டைச் செய்யவதற்கான பணிகளை பி.எஸ்.என்.எல் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதுபோல் சென்னை கீழ்ப்பாக்கம், கெல்லிஸ் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதிகளில் ஏராளமான தொலைபேசியகங்களில் அகண்ட அலைவரிசை சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மிக நீண்ட தூர ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளும் பாதிக்கப்பட்டிருப்பதால், சென்னைக்கும் அந்த மாநிலங்களுக்கும் இடையேயான எஸ்.டி.டி. சேவையும் பாதிப்படைந்துள்ளது.

இந்த பாதிப்புகளால் பி.எஸ்.என்.எல்.க்கு ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை ஆரம்பகட்ட இழப்பு இருக்கும் எனவும், இந்த இழப்பு இதற்குமேல் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                

நன்றி :- தினமணி, 06-04-2013                                          



0 comments:

Post a Comment

Kindly post a comment.