Saturday, April 6, 2013

தமிழகத்தில் தொடர்கதையாகும் மின் மீட்டர்கள் பற்றாக்குறை !


தமிழகத்தில் மின் மீட்டர்கள் பற்றாக்குறை தொடர்கதையாகி வருவதால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குறைபாடுள்ள மின் மீட்டர்கள் மாற்றப்படாமல் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மேலும், இந்தக் குறைபாடுள்ள மீட்டர்கள், குறைந்த பயனீட்டு அளவைக் காட்டுவதால், மின் வாரியத்துக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின் வாரியம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான அளவில் மின் மீட்டர்களை கொள்முதல் செய்யாத காரணத்தால், சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் மின் மீட்டர்களின் தேவை 15 லட்சத்தைத் தாண்டியது.

இதன் காரணமாகப் புதிய மின் மீட்டர்கள் கோரி விண்ணப்பித்தவர்கள் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மின் மீட்டர்களே பயன்பாட்டில் வைத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையைச் சமாளிக்க நுகர்வோரே, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் மின் மீட்டர்களை வாங்குவது என்பன உள்ளிட்ட தாற்காலிக ஏற்பாடுகளை மின் வாரியம் அறிமுகம் செய்தது. இதில் பல்வேறு சிக்கல்களை நுகர்வோர் சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு முதல், 17 லட்சம் ஒருமுனை மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கும், 7.5 லட்சம் மும்முனை மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்குமான ஆணைகளைப் பிறப்பித்து மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.

மேலும், தமிழகத்தில் நிலவி வரும் மின் மீட்டர் பற்றாக்குறை 2012ஆம் ஆண்டு ஜூலை இறுதிக்குள் சீராகிவிடும் என்று மின் வாரியம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் மின் மீட்டர்கள் வந்து சேராததால், பற்றாக்குறை தொடர்கதையாகி வருகிறது. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் குறைபாடுடைய மீட்டர்களே பயன்பாட்டில் உள்ளன என்கின்றனர் மின் வாரிய ஊழியர்கள்.

 குறிப்பாக சென்னை அம்பத்தூர் பகுதியில் மின் மீட்டர் பழுதாகியுள்ளதால் பலர் புகார் தெரிவித்து புதிய மீட்டருக்காகக் காத்திருக்கின்றனர்.

 நுகர்வோர்களுக்கு, கடந்த முறை மீட்டரில் பயனீட்டு அளவு குறைந்து காட்டியதோடு, குறைவான பயனீட்டு அளவுக்கு ஏற்ப மிகவும் குறைவான கட்டணமும் மின் அளவீட்டு அட்டையில் குறித்துத் தரப்படுகிறது. இதையடுத்து, புகாரை பதிவு செய்தோருக்கு,

கடந்த ஓராண்டில் செலுத்திய மின் கட்டணத்தின் சராசரி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு செலுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இதே நிலைதான் தொடர்கிறது.

 இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:-

 மின் வாரியத்தின் சார்பில் 17 லட்சம் ஒரு முனை மீட்டர்களும், 7.5 லட்சம் மும்முனை மீட்டர்களும் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன் மூலம் படிப்படியாக மீட்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

 இதுவரை வந்து சேர்ந்த 1.63 லட்சம் ஒரு முனை மீட்டர்களும், 1.26 லட்சம் மும்முனை மீட்டர்களும் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 2.45 லட்சம் ஒரு முனை மீட்டர்களும், 1.15 லட்சம் மும்முனை மீட்டர்களும் வந்து சேரவுள்ளன.

 எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழகத்தின் மின் மீட்டர் பற்றாக்குறை நிலைமை முழுமையாக சீராகிவிடும்.

மேலும் நுகர்வோர், மின் மீட்டர்கள் மாற்றுவது தொடர்பான புகார்களை அந்தந்த பகுதி அலுவலக ஏ.இ. (உதவிப் பொறியாளர்) அல்லது அதற்கு மேலான அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை
மின் மீட்டர் பழுதாகி புகாரைப் பதிவு செய்யாமல் தொடர்ந்து குறைந்த மின் கட்டணம் செலுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின் வாரிய உயர் அதிகாரிகள் எச்சரித்தனர்.

 ""தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. இதனால் நிதி ஆதாரத்தைப் பெருக்குதல், நிதி இழப்பைத் தவிர்த்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

 மிகவும் குறைந்த மின் கட்டணம் செலுத்தும் மின் நுகர்வோர் குறித்து கம்ப்யூட்டர் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதால், தமிழகம் முழுவதும் எந்த மின் நுகர்வோரும் ஏமாற்ற முடியாது.

 மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்படும் நிலையில், ஏமாற்றிய காலம் முழுவதும் சேர்த்து கட்டணத்தை மீண்டும் வசூலிக்கும் வகையில் மின்வாரிய விதிகள் உள்ளன'' என்று அந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.                                                                                                   

நன்றி :- தினமணி, 06-04-2013                                                                    



0 comments:

Post a Comment

Kindly post a comment.