Sunday, April 28, 2013

இராணுவ மேஜர் அனுப் ஜோசப்புக்கு கீர்த்தி சக்ரா விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார் !

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற பதக்கங்கள் அளிக்கும் விழாவில் (இடமிருந்து 6-வது) பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள்.

இராணுவ மேஜர் அனுப் ஜோசப் மஞ்சலிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை கீர்த்தி சக்ரா விருது வழங்கி கெüரவித்தார். மேலும் ராணுவத்தில் சிறப்பாக சேவை புரிந்த 12 பேருக்கு "செüரிய சக்ரா' விருதுகளையும் வழங்கினார்

ராணுவத்தில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ராணுவ மேஜர் அனுப் ஜோசப் மஞ்சலிக்கு முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீர்த்தி சக்ரா விருது வழங்கினார். இது இரண்டாவது உயரிய விருதாகும்.

24ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்தவர் மஞ்சலி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5 பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலின்போது சிறப்பாக செயல்பட்டு 3 பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக மஞ்சலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் வீரத்துடன் செயல்பட்ட 12 பேருக்கு பிரணாப் முகர்ஜி, செüரிய சக்ரா விருது வழங்கினார். இவர்களில் கேப்டன் ஏ. ராகுல் ரமேஷ் மற்றும் நாயக் கிருஷ்ண குமார் ஆகிய இருவருக்கும் மரணத்துக்குப் பிந்தைய விருது வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. அமைதிக் குழுவின் ஒரு பகுதியாக இந்திய ராணுவம் சார்பில் காங்கோவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கிருஷ்ண குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, எல்லைப்புற சாலை நிறுவனத்தின் பொறியாளராக பணியாற்றிய ராகுல், கடந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் மேம்பால கட்டுமானப் பணியின்போது தன்னுடன் பணிபுரிந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 10 பேருக்கு பரம் விசிஷ்ட் சேவா விருதையும், ஒருவருக்கு உத்தம் யுத் சேவா விருதையும், 31 பேருக்கு ஆதி விசிஷ்ட் சேவா விருதையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

நன்றி :- தினமணி, 28-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.