Sunday, April 28, 2013

சென்னை மாநகராட்சி குப்பையைக் குத்தம்பாக்கத்தில் கொட்ட எதிர்ப்பு

சென்னை மாநகராட்சியின் குப்பைகளைக் குத்தம்பாக்கம் ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்துக்கு உள்பட்டது குத்தம்பாக்கம் ஊராட்சி.

இந்த குத்தம்பாக்கம் ஊராட்சியில், சர்வே எண். 820-1-ல் சுமார் 40.33 ஹெக்டேர் பரப்பளவில் மேய்க்கால் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னை மாநகராட்சியின் குப்பைகளை இங்கு கொட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய வந்துள்ளோம் என கூறியுள்ளனர்.

அதற்கு அப்போதே கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இப்பகுதியில் குப்பைக் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏரி நீர் பாழாகும்... குத்தம்பாக்கம் கிராமத்தில் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையொட்டி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.

இங்கு குப்பை கொட்டுவதன் மூலம் ஏரி நீர் மாசுபடும் அபாயம் ஏற்படும்.

மேலும் அந்த இடத்தில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீர் நிலைகள், மழைநீர் வடிகால் கால்வாய்கள் மற்றும் புது பங்காரு கால்வாய் ஆகியவை உள்ளன.

எனவே இந்த நீர்நிலைகளும் மாசடையும்.

எனவே குத்தம்பாக்கத்தில் சென்னை மாநகராட்சியின் குப்பைகளைக் கொட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பலதா சதீஷ்குமார் தலைமையில் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திருவள்ளூருக்கு பேரணியாக வந்தனர்.

பின்னர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது ஆட்சியர், அலுவலகத்தில் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வமணியைச் சந்தித்து மனு அளித்தனர். 

நன்றி :- தினமணி, 28-04-2013                                                   

0 comments:

Post a Comment

Kindly post a comment.