Sunday, April 28, 2013

சங்கிலியை அடகுவைத்துச் சாஹித்திய அகடமிப் பரிசை வாங்கப் பயணிக்கும் மலர்வதி!


ஒன்பதாம் வகுப்பு தாண்டாத பள்ளிக் கல்வி. மிக மிக சாதாரண குடும்பப் பின்னணி. எப்படியோ சேமித்து வாங்கியிருந்த ஒரு மெலிய தங்கச் சங்கிலியை அடகு வைத்துப் பெற்ற காசில் தொலைதூரம் போய் தாம் எழுதிய நூலுக்கு வழங்கப்படும் விருது ஒன்றினைப் போய் வாங்கும் நிலைமை. யார் இவர்? அவர் தான், இப்போது பரவலாகப் பேசப்படும் "தூப்புக்காரி" என்ற புதினத்தின் ஆசிரியர் மலர்வதி, குமரி மாவட்டத்துக்காரர்.

நடுநிலைப் பள்ளி ஒன்றில், கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த தமது தாயின் கைப் பிடித்துக் கொண்டு நாற்றம் எது, மணம்  எது என்று அறியாத ஐந்து வயதில் நேரடியாகப் பார்த்த தாயின் வாழ்க்கையின் காயம் எங்கோ மனத்தில் இருந்தது. தொழிற்கூடங்களில் துப்புரவு செய்த ஒரு தொழிலாளியின் கண்ணீர் ததும்பும் கனத்த முகம் இன்னும் கண்ணில் நிற்கிறது... சாக்கடையோரம் மூக்கைப் பொத்தி, குமட்டலில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடத் தெரியும் மனிதர்களுக்கு, அசுத்தத்தை அள்ளுகிறவன் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்கவும் தெரிகிறது என்று தமது முன்னுரையில் சாடும் மலர்வதி, ஈக்களிலும், புழுக்களிலும், நாற்றத்திலும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் மனிதர்களுடன் ஒரு நிமிட நேரமாவது சென்று அமரும் மனித நேய உணர்வு சமூகத்தில் பிறக்கட்டும் என்ற வேகத்தில் தாம் எழுதிய கதை தான் தூப்புக்காரி என்று மனம் விட்டுச் சொல்வதில் எல்லாம் அடங்கிவிடுகிறது.


தூப்புக்காரி என்ற சொல், துப்புரவுப் பணியில் இருப்போரை விளிக்கும் ஒரு வட்டாரச் சொல். அந்த விளியே சமூகம் அவர்களை 'மதிக்கும்' தன்மையை வெளிப்படுத்திவிடுகிறது. ஏய், கக்கூசைக் கழுவிட்டியா, தீட்டுத் துணிகளைக் கழுவிட்டியா, சாக்கடை அள்ளினியா...என்பதைத் தவிர, வேறு பேச்சு மொழியே அற்றுப் போன உலகம் அவர்களது. கண்ணெதிரே அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையில் தெறிக்கும் மலம். கையருகே பருக வேண்டிய தேநீரோ, கடமைக்கு வாரி அடைத்துக் கொள்ள வேண்டிய உணவோ ஏதோ ஒன்று. இந்த முடிவற்ற துயர நடையின் கதை தான் தூப்புக்காரி.

பூவரசி. மருத்துவமனை தூப்புக்காரி கனகத்தின் மகள். கனகம் தனது மகளுக்குக் கொஞ்சம் போலக் கிடைத்த படிப்பை வைத்து ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற கனவு. அதே தூப்புப் பணியில் இருக்கும் - ஆனால் சாதியில் தாழ்ந்த மாரியை அவளுக்குக் கட்டிக் கொடேன் என்று சொல்லும் வேலப்பன் அல்லது  தனது சக தூப்புக்காரி றோஸ்சிலி சொற்களை  ஏற்கவும் மாட்டாமல் வேறு திசையும் தெரியாமல் தவிக்கும் கனகம். பூவரசிக்கோ தனது தாய்க்கு உணவு கொடுக்கப் போகும் நேரம் தட்டுப்படும் குப்பை கழிவுகளையே சகிக்கப் பொறாத குமட்டல்.

பூவரசியின் நெஞ்சில் மருத்துவமனை வாகன ஓட்டுனர் மனோ மீதான காதல் காற்றில் அலைபாயும் தீபம் போல் ஆடிக் கொண்டிருக்கிறது.  அவனுக்கும் இவள் மீது ஒரு மோகம் இருக்கத் தான் செய்தது. ஆனால் சாதாரண மனிதர்களது வாழ்க்கை ஏற்கெனவே விதிக்கப்பட்ட பாட்டையில் அல்லவா இவர்களை வழி நடத்திச் செல்லும்..

அவமதிப்பும், கடுஞ்சொல்லும் தனது பயணம் நெடுக வாரி இறைக்கப் பட்டிருந்தும், எச்சில் இலை எடுக்கப் போன திருமண விருந்தொன்றில் பசியின் இரக்கமற்ற துரத்தலில் தாங்களே பந்தியில் அமர்ந்துவிடும் போது அங்கிருந்து விரட்டப்படும் கனகம் தலை சுற்றல் கண்டு நோயில் விழும் இடம் கதையில் முக்கியமானது. அது மனோ உறவினர் வீட்டுத் திருமணம். அவனோ கனகத்திற்குப் பரிந்து பேச முன் வருவதில்லை. பிறகு அதே வேலையில் தன காதலி பூவரசி தன கண்ணெதிரே தள்ளப்படும் நிலையிலும் கை கொடுப்பதில்லை.

தாய் தொடர முடியாத எச்சில் இலைகளை அகற்றும் பணிக்கு, தற்செயலாக அங்கே போன பூவரசி நியமிக்கப்படுகிறாள். நானா....நானா என்று தடுமாறும் அவளை  றோஸ்சிலி ஆற்றுப் படுத்தி பழக்கத் தொடங்குகிறாள். இந்தப் பாதையின் அடுத்த மைல் கல், மருத்துவமனையில் கழிவறைகளை 'தூக்கும்' பணியில் ஊன்றப்படுகிறது. 'தூமத் துணி' அலசவும், மலம் மிதக்கும் சாக்கடைகளைத் 'தூக்கவும்', இரத்த வீச்சம் அடிக்கும் கழிவுப் பொருள்களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளவுமான அடுத்த தூப்புக்காரியாக உரு மாறுகிறாள் பூவரசி.

குடலைப் புரட்டும் நெடியில், பார்க்க சகிக்காத கழிவுகளில் உழலும் மனித வாழ்க்கையை மலர்வதி எந்த நளினமும், இடக்கரடக்கல் மொழியும் கைக் கொள்ளாமல் நேரடிப் பார்வைக்கு அப்படியே எடுத்து வைக்கிறார். காசு வாங்கிட்டுத் தானே வேலை செய்யுற, ஓசியிலயா என்று எகத்தாளம் செய்யும் ஒரு பெண்மணியை அதே காசை வாங்கிட்டு நீ வந்து செய்வியா இந்த வேலையை என்று கேட்கிறாள் கனகம். சம்பளம் பத்திப் பேச நீ என்ன அபீசரா என்று கேட்கும் டீக்கடைக்காரரிடம், மாரி வெகுண்டு, 'ஆபிசர் தூறிவிடிய பீயை என்னைப் போல் உள்ளவன் வாராட்டா நாறிக் கெடக்கும்...அழுக்குக்கு மூக்கப் பொத்தறீங்களே வாழ்க்கை பூரா அழுக்குல கெடக்கற எங்களுக்கு சம்பளம் வேண்டாமா ஓய்' என்று கேட்கிறான்.

மனோவிடம் தன்னை இழக்கும் பூவரசி, பிறகு, வேறு மணவாழ்வில் அவன் காலடி எடுத்துவைக்கும் நிலையில் மாரியின் ஆதரவைக் கேட்காமலே கைவரப் பெறுகிறாள். அவள் பிள்ளையுண்டாயிருப்பதை அதிர்ச்சியோடு அறியும்போது மாரி அவளை ஏற்கவும் செய்கிறான். உனது குழந்தைக்கு அப்பனா மாறவும் சம்மதம் என்கிறான்.

பொன்னீலன் தமது செறிவான அணிந்துரையில் சொல்வதுபோல் கதை இங்கே நிறைவடைந்திருக்க வேண்டியது. இருந்தாலும், மலர்வதி, மாரி ஒரு விபத்தில் இறப்பது, தனது குழந்தையை, மகப்பேறு இல்லாத ஒரு வசதிமிக்க தம்பதியினருக்குத் தத்துக் கொடுக்க மருத்துவர் சொல்வதை பூவரசி முதலில் ஏற்றுக் கொண்டு, ஆனாலும் பிறகு குழந்தையோடு தனிச்சி நின்று வாழ்க்கைப போராட்டத்தை தொடர்வது என்று முடிவெடுப்பது, கோழை மனத்தோடு மனோ வந்து பார்த்துவிட்டுக் குற்ற உணர்ச்சியோடு நகர்ந்து விடுவது என்று வேகமாக சில நகர்வுகளைச் செய்து பூவரசியின் உளத் திண்மையில் கொண்டு வந்து கதையை நிறைவு செய்கிறார்.

தகழி சிவசங்கர பிள்ளை அவர்களின் தோட்டியின் மகன் நாவலை, சுந்தர ராமசாமி அவர்களது  அற்புதமான மொழிபெயர்ப்பில் வாசித்தபோது அதன் பாதிப்பிலிருந்து மீள சில நாட்கள் ஆயிற்று. அடுத்தடுத்த தலைமுறையினர் என்ன முயற்சி செய்தாலும் தோட்டியின் மகன் தோட்டியாக ஆவதிலிருந்து விடுதலை பெற இயலாத சோகத்தை உரத்த குரலில் பேசி, மூன்றாம் தலைமுறையில் போராட்ட ஆவேசம் கொண்டு எழுவதில் நிறைவு பெறும்  நாவல் அது. தி தா நாராயணன் அவர்களது சிறுகதையை முன்வைத்து செம்மண் விஜயன் ஆக்கம் செய்த புதிய தடம் குறும்படமும் தந்தையை அடியொற்றி  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலைக்குச்  செல்ல மறுக்கும் மகனின் பரிதவிப்பைப் பேசியது.

இருந்தபோதிலும், தான் நேரடியாக சந்தித்த வாழ்க்கையை அதன் நெடியோடு - அதன் அத்தனை வலிகளோடு - தப்பிக்க முடியாதபடி பிணைத்திருக்கும் சங்கிலிகளோடு மலர்வதி எழுதியிருக்கும் தூப்புக்காரி விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த முக்கிய வாசிப்பாகக் கிடைத்திருக்கிறது. ஆங்காங்கு கதையாசிரியர் குரலில் வெளிப்படும் வாழ்வின் விமர்சன வரிகளும், மிகை புனைவாக இணைக்கப்பட்டவையும் தனித்துத் தெரிந்தாலும், வலுவான உரையாடல்கள் சமூக அவலத்துக்கு எதிரான  தெறிப்புகளாக நிலை கொள்கின்றன. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் உற்சாக அணிந்துரை சாதிய, வர்க்க முரண்பாடுகள் பற்றிப் பேசும் மலர்வதி எழுத்தைக் குறித்த அவரது பிரமிப்பைப் பதிவு செய்கிறது.

குமரி மாவட்ட வட்டார வழக்கு மொழி படிக்கத் தொடங்கியதும் வாசகரைத் தம்முள் இழுத்துக் கொண்டு சகதிக் குழியில் தள்ளப்பட்டிருக்கும் மனிதர்களது பாடுகளை உணர்த்தியபடி செல்கிறது. தமது தாய்க்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற மனிதர்களுக்குமான சிறப்புப் பதிவைச் செய்திருக்கிறார் மலர்வதி.

கடந்த மாதம் கவுஹாத்தி (அஸ்ஸாம்) சென்று யுவ புரஸ்கார் எனப்படும் சாகித்திய அகாதமி இளம் படைப்பாளி விருதினைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர், அனல் வெளியீடாக வந்திருக்கும் தூப்புக்காரியின் அடுத்த பதிப்பை மாநிலம் முழுக்கக் கிடைக்க முன்முயற்சி எடுப்பார் என்றே நம்புகிறேன். வாசகர்கள் காத்திருக்கின்றனர்.

- எஸ்.வி.வேணுகோபால்
எழுதியவர் மா ற்று at 11:43 AM
நன்றி :- தீக்கதிர், 28-04-2013
                                                                       மலர்வதி

1 comments:

  1. மண் மணம் பரப்பும் இயல்பான நிகழ்வுகளை எள்ளலும் துள்ளலுமாகப் புதினத்தில் பதிவு செய்திருக்கும் இளம் படைப்பாளியின் இலக்கியப் பயணம் இடையறாது தொடர வாழ்த்துகள். பாவலர் பொன்.கருப்பையா , புதுகை.

    ReplyDelete

Kindly post a comment.