Tuesday, April 9, 2013

தூத்துக்குடியில் 15 ஆயிரம் கடைகள் அடைப்பு: மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை !

கடையடைப்புப் போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் தூத்துக்குடி டபுள்யூஜிசி சாலைக் கடைவீதி.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் திங்கள்கிழமை (ஏப்ரல் 8) கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மினி பஸ்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையில் இருந்து மார்ச் 23ஆம் தேதி அதிகாலை வெளியான நச்சுவாயு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுப்படி மார்ச் 30ஆம் தேதி ஆலை மூடப்பட்டது.

15 ஆயிரம் கடைகள் அடைப்பு: இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், மத்திய வியாபாரிகள் சங்கத்தினரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இப்போராட்டத்தையொட்டி தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஏறத்தாழ 14 ஆயிரம் கடைகளும், வி.இ. சாலையில் உள்ள வஉசி மார்க்கெட் பகுதியில் 1000 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

டபிள்யுஜிசி சாலை, வி.இ. சாலை, மார்க்கெட் பகுதிகள், சிதம்பர நகர், அண்ணா நகர், திரேஸ்புரம், தாளமுத்து நகர், மட்டக்கடை, சண்முகபுரம், கால்டுவெல் காலனி, பிரையன்ட் நகர், 3ஆவது மைல், மில்லர்புரம், டேவிஸ்புரம் பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.

மினி பஸ்கள் இயக்கப்படவில்லை: தூத்துக்குடியில் இயங்கும் 43 மினி பஸ்களும் இயக்கப்படவில்லை. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வேன், வாடகைக் கார் போன்றவையும் இயக்கப்படவில்லை.

தூத்துக்குடியில் சில பள்ளிகளில் இன்னும் தேர்வு முடியாததால் காலை 9 மணி வரை குறிப்பிட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. மாலை 6 மணிக்குமேல் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் தரப்பிலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பிலும் தனித்தனியே செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.                                                                                                        
நன்றி :- தினமணி, 09-04-2013                                                                              

0 comments:

Post a Comment

Kindly post a comment.