Tuesday, April 9, 2013

உடன்குடியில் ரூ.7,920 கோடியில் புதிய அனல் மின்திட்டம் உலகளாவிய டெண்டர் வெளியீடு !

தூத்துக்குடி மாவட்டம்

பதிவு செய்த நாள் : Apr 07 | 09:26 pm 
சென்னை,-

ரூ.7,920 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் புதிய அனல் மின்திட்டம் தொடங்குவதற்கான உலகளாவிய டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

புதிய மின்திட்டங்கள்

தமிழகத்தில் மின்பற்றாக்குறையை போக்க வடசென்னையில் 3–வது நிலையில் ரூ.4,800 கோடி மதிப்பில் 800 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட ஒரு யூனிட்டும், 4–வது நிலையில் 800 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட 2 யூனிட்டுகளும், எண்ணுர் அனல்மின்நிலையம் ரூ.3,960 கோடி மதிப்பில் 660 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட ஒரு யூனிட்டும், தூத்துக்குடி 4–வது நிலையில் ரூ.4,800 கோடி மதிப்பில் 800 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒரு யூனிட்டும் அமைக்கப்பட்டு வருகிறது.அத்துடன் தமிழகத்தில் உள்ள பிற அனல் மின்நிலையங்களில் பழுதான கருவிகள் மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.7,920 கோடி மதிப்பு

இவற்றுடன் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.7,920 கோடி மதிப்பில் 660 மெகாவாட் உற்பத்தி செய்யும் 2 யூனிட்டுகளும் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:– உடன்குடியில் சுமார் ரூ.7,920 கோடி மதிப்பில் 660 மெகாவாட் உற்பத்தி செய்யும் 2 அனல்மின்நிலையங்கள் அமைப்பதற்கான உலகளாவிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பிணைதொகையாக ரூ.5 கோடி செலுத்தப்பட வேண்டும், ஜூன் 19–ந்தேதி டெண்டர் பெற கடைசி தேதியாகும். அன்று மாலையே டெண்டர் திறக்கப்பட உள்ளது.

தங்குதடையின்றி நிலக்கரி


முற்றிலுமாக நிலக்கரியை பயன்படுத்தி செயல்படும் இந்த அனல் மின்திட்டம் செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டபணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 305 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு, மின்சார வாரியத்திற்கு நிலஉரிமை மாற்றி தந்துள்ளது. உலகளாவிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட உடன் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.புதிய திட்டங்கள் செயல்படுத்தினாலும், மத்திய அரசு போதிய நிலக்கரி தந்தால் தான் மின்நிலையத்தை தொய்வின்றி நடத்தி செல்ல முடியும், மின்சார உற்பத்தியும் சிறப்பாக இருக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகளும் போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.     

நன்றி :- தினத்தந்தி, 07-04-2013             


0 comments:

Post a Comment

Kindly post a comment.