Monday, March 25, 2013

உறைக்கிணறுகள் பகுதியில் கழிவுநீர் கலப்பதால் நஞ்சாக மாறும் தாமிரவருணிக் குடிநீர் !


     திருநெல்வேலி அருகே கருப்பந்துறைப் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உறைக்கிணறு அருகே கலக்கும் கழிவுநீர்.

தாமிரவருணி ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள உறைக்கிணறுகளுக்கு அருகிலேயே கழிவுநீர் கலப்பதால் தாமிரவருணிக் குடிநீர் மாசடைந்து, நஞ்சாக மாறி வருகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதிகை மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கி.மீ. தொலைவுக்குப் பயணித்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது தாமிரவருணி.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான நீர் ஆதாரம் தாமிரவருணிதான். இரு மாவட்டங்களில் விவசாயத் தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் இந்த நதிதான் பூர்த்தி செய்கிறது.

ஆனால், சில ஆண்டுகளாக தாமிரவருணி ஆறு மாசுபட்டு அதன் பழம் பெருமையைக் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருவதைப் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நகர்ப்புறக் கழிவுகளால் புண்ணிய நதியான தாமிரவருணி மாசடைந்து வருகிறது.

மேலும், முள்செடிகள், குடிசைகள், கட்டடங்கள், தனியார் செங்கல்சூளைகள், தோட்டங்கள், தென்னந்தோப்புகள் போன்றவை ஆற்றின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துள்ளதால் பரந்து விரிந்த தாமிரவருணி குறுகி ஓடை போல காட்சியளிக்கிறது.

தாமிரவருணி தனது பழம்பெருமையை இழந்து வரும் அதேவேளையில் தாமிரவருணி குடிநீரும் மாசு காரணமாகச் சுவை இழந்து நஞ்சாக மாறி வருகிறது. பொதிகை மலையில் உற்பத்தியாகி வருவதால் பல மூலிகைகள் இந்த தண்ணீரில் கலந்து வரும். இதனால் தாமிரவருணி தண்ணீருக்குத் தனிச் சுவை உண்டு. மேலும், தாமிரவருணி நீரை குடித்தாலே நோய்கள் குணமாகும் என்று கூறுவார்கள். ஆனால், அந்த நிலை தற்போது மாறி, தாமிரவருணி தண்ணீரை குடித்தால் நோய்கள்தான் வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தாமிரவருணி தண்ணீர் மாசடைந்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளுக்கு தாமிரவருணி ஆற்றில் இருந்துதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமிரவருணி ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆற்றில் இருந்த மணல் அடுக்குகள் தண்ணீரை வடிகட்டும் அமைப்பாக செயல்பட்டன. இந்த மணல் அடுக்குகள் மூலம் வடிகட்டப்பட்டு, உறைக்கிணறுகளில் சேரும் தண்ணீர் மோட்டார் மூலம் பம்ப்பிங் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

ஆனால், மணல் கொள்ளையர்களால் தாமிரவருணியில் உள்ள மணல் முழுவதும் சுரண்டப்பட்டுவிட்டதால் வடிகட்டும் அமைப்பாக இருந்த மணல் அடுக்குகள் காணாமல் போய்விட்டன. இதனால், தற்போது ஆற்றுத்தண்ணீர் நேராக உறைகிணறுகளுக்குள் செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் தாமிரவருணி ஆற்றில் பல இடங்களில் நகர்ப்புறக் கழிவுநீர் கலப்பதால், அந்த கழிவுநீரும், குடிநீருடன் கலந்து நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சில இடங்களில் உறைகிணறுகளுக்கு மிக அருகிலேயே கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. இதனால், குடிநீர் மாசடைந்து, அதனைப் பருகுவோரின் உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்னையை அரசு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் தாமிரவருணி குடிநீர் விரைவில் விஷமாகிவிடும் என எச்சரிக்கிறார், தமிழ்நாடு சேவை பாரதி நல அமைப்பாளர் ஆர்.கணேசன்.

தாமிரவருணி நதிநீர் மாசுபடுவதற்குப் பொதுப் பணித் துறை, கனிமவளத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் என, பல துறைகளின் பொறுப்பற்ற செயல்களே காரணம்.

உள்ளாட்சி அமைப்புகளான சிற்றூர் முதல் மாநகராட்சி வரையுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தாமிரவருணியையே குப்பைத் தொட்டியாக்கி குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மனிதக் கழிவு நிறைந்த திறந்தவெளிச் சாக்கடைக் கழிவுநீரும் தாமிரவருணி நதியிலும், அதன் கிளைக் கால்வாய்களிலும் கலக்கின்றன. உள்ளாட்சி நிர்வாகங்கள் மக்கள் நலனைப் பேணுவதற்குப் பதில் மக்கள் நலனைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

இதுபோன்ற நகர்ப்புறக் கழிவுகளும், கழிவுநீரும் தாமிரவருணி ஆற்றில் கலப்பதால், குறிப்பாக உறைக்கிணறுகளுக்கு அருகிலேயே கலப்பதால், குடிநீர் மாசடைந்து பல கொடிய தொற்று நோய்கள் பரவி வருகின்றன. எனவே, தாமிரவருணியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக உறைக்கிணறுகள் பகுதியில் எந்தவிதக் கழிவுநீரும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டு குடிநீர் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். அதுபோலப் பொதுப் பணித் துறை, கனிமவளத் துறை போன்ற துறைகளும் மக்கள் நலனில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

மேலும், மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு தாமிரவருணி குடிநீரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார் அவர். மொத்தத்தில் தாமிரவருணி தண்ணீர் முழுவதும் விஷமாவதற்குள் அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை.        

நன்றி :- தினமணி, 25-03-2013                     

0 comments:

Post a Comment

Kindly post a comment.