Monday, March 25, 2013

கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும்: ஆர்.நடராஜ் !


     கோவை, கிக்கானி  மேல்நிலைப் பள்ளியில் தினமணி- ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்- கோவை மியூசிக் அகாதெமி ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய விழாவில், "அருட்பா அமுதம்' நூலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் வெளியிடப் பெற்றுக் கொள்கிறார் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.கிருஷ்ணன். (நடுவில்) நூல் ஆசிரியரும் கர்நாடக இசைக் கலைஞருமான பி.எஸ்.நாராயணஸ்வாமி. (வலது) விழாவில் பங்கேற்றோர்.

தமிழில் பாடல்கள் பாடப்படும்போது தான் கர்நாடக இசை மக்களைச் சென்றடையும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

÷ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், தினமணி மற்றும் கோவை மியூசிக் அகாதெமி சார்பில், கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "அருட்பா அமுதம்' என்ற நூலின் அறிமுக விழாவில், நூலை வெளியிட்டு அவர் பேசியது:

÷உலகில் மிகச் சிறந்த இசை கர்நாடக சங்கீதம் மட்டும் தான். கர்நாடக சங்கீதம் என்பது கோவில் போன்றது. பிற இசைகள் அடுக்குமாடிக் கட்டடம் போன்றவை. அவை பார்வைக்கு வேண்டுமானால் நேர்த்தியாக இருக்கலாம். ஆனால் கர்நாடக இசையில் இருக்கும் கலை நுணுக்கங்கள் அவற்றில் இருக்காது. அதனால் தான் கர்நாடக இசைக் கலைஞர்களால் பிற இசையின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு பாட முடிகிறது.

÷கர்நாடக இசை என்பது ஆழமானது, அதனைப் புரிந்துகொள்வது என்பது சிருஷ்டி தான். அந்த இசையைக் கேட்பதற்கு நமக்கு சிறிய அறிவு இருக்கிறதே என்பதற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும். கர்நாடக இசையைக் கேட்கக் கூடிய ஞானம் எல்லோருக்கும் வாய்க்காது. அப்படிக் கேட்கும் வாய்ப்பு அதிர்ஷ்டம்.

÷இசையைப் புரிந்து கொள்வது, தெரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நாம் நமது கலாசாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். எல்லா இடங்களுக்கும் கர்நாடக இசை சென்றடைய வேண்டும்.

÷கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் இசைக்கப்பட வேண்டும் என்று எழுத்தாளர் கல்கி விரும்பினார். தமிழ்ப் பாடல்கள் கர்நாடக இசையின் மூலம் பாடப்பட்டால் மட்டுமே தமிழ் மக்கள் அதைப் புரிந்துகொள்ள முடியும்.

÷தமிழ்ப் பாடல்கள் மூலமாக தமிழ் இசை, கர்நாடக இசை மக்களிடையே சென்றடைய வேண்டும். வள்ளலார் எழுதிய பாடல்களில் உள்ள கருத்துகள் எளிமையானவை. அப்பாடல்களைப் பாடும்போதும், இசையுடன் கேட்கும்போதும் தான் கருத்துகளில் உள்ள ஆழத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.÷

கர்நாடக இசையில் வள்ளலாரின் 31 பாடல்களுக்கு பெரும் முயற்சி செய்து மெட்டுக்கள் போட்டுள்ளார் இசைக் கலைஞர் பி.எஸ்.நாராயணஸ்வாமி. இவரது பணி பாராட்டக் கூடியது. இதுபோன்ற இசையைக் கேட்க இளைஞர்கள் வர வேண்டும்.

÷நமது கலாசாரம், சங்கீதம் போன்றவற்றை இளைஞர்கள் தெரிந்து கொண்டால் தான் மன அமைதியும், பொறுமையும் பெற முடியும். நாட்டில் அமைதி, கட்டுப்பாடு நிலவ அடித்தளமாக விளங்குவது நமது கலாசாரம் ஆன இசை தான் என்றார்.  

தாய்மொழியில் பாடினால்தான் இசை ரசனை வளரும் !

                                                         -தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்                                                                                           

நன்றி:- தினமணி, 25-03-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.