Tuesday, March 19, 2013

மஹிந்திராவின் மின்சாரக் கார் இ-டு-ஓ புது தில்லியில் அறிமுகம் !

  புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார காரான இ-டு-ஓ அறிமுக நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்,மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா, கார் தயாரிப்பு பிரிவு தலைவர் பவன் கோயங்கா
 

மின்சாரத்தில் இயங்கும் காரை மஹிந்திரா நிறுவனம் புது தில்லியில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம் தயாரித்துள்ள முதல் மின்சார கார் மாடலாகும்.

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியது: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த ரேவா கார் நிறுவனத்தைக் கையகப்படுத்திய பிறகு, முற்றிலும் புதிய வடிவத்தில் ஒரு மின்சாரக் காரை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எங்கள் நிறுவனத்துக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடுதான் இந்தக் கார்.

அடுத்த நான்கு வாரங்களில் மேலும் எட்டு நகரங்களில் இது அறிமுகம் செய்யப்படும். மின்சாரக் கார்களுக்கு வெவ்வேறு மாநில அரசுகள் அளிக்கும் சலுகையைப் பொருத்து இதன் விலை மாறுபடும். அடுத்த 6 மாதங்களில் இந்த கார் ஏற்றுமதி செய்யப்படும். எங்கள் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களிலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளோம் என்று ஆனந்த் மஹிந்திரா கூறினார்.

நான்கு இருக்கைகள் கொண்ட இ-டு-ஓ காருக்கு இரண்டு கதவுகள் உள்ளன. புது தில்லியில் இதன் விலை ரூ.5.96 லட்சமாகும். தில்லி மாநில அரசு அளிக்கும் சலுகை போக உள்ள இறுதி விலை இது.

இந்தக் கார் ஒரு முழு மின் சார்ஜுக்கு ஐந்து மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த மின் திறனுடன் 100 கி.மீ. தூரம் ஓட்ட முடியும். ஒரு மணி நேரத்தில் விரைவு மின்சார ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.                                                                 
 
நன்றி :- தினமணி, 19-03-2013                                                    


0 comments:

Post a Comment

Kindly post a comment.