Friday, March 29, 2013

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எல்லாம் வல்ல சித்தர் !


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பெருமான் சந்நிதிக்கு வடமேற்கு முனையில் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதி உள்ளது. இதில் சித்தர் வீராசனத்தில் அமர்ந்துள்ளார். அவரது ஜடைமுடி கொண்டைபோல் சுருட்டிக் கட்டப்பட்டுள்ளது.

வலது கை சின் முத்திரையும், இடது கையை யோக தண்டத்தின் மீது ஊன்றியவாறும் உள்ளார். எல்லாம் வல்ல சித்தரின் பஞ்சலோகத் திருமேனியும் சிறப்பு. அர்த்த வீராசனத்தில் அமர்ந்த இவ்வடிவில் அவரது ஜடைமுடி பின்னப்பட்டு அழகாக உள்ளது. வலது கரத்தில் மந்திரக்கோல் உள்ளது. இதனைக் கரும்புக்கழி என்பர். இடது கரம் யோக தண்டத்தின் மீது ஊன்றியபடி உள்ள இந்த எழிலார்ந்த யோக வடிவை வேறு எங்கும் காணமுடியாது.

"சகம் புகழும் தென் மதுரா புரியில் தரை மதிக்க 
அகம்தொறும் நீசெய்த ஆடல்கண்டே அழகார்வழுதி 
இகழ்ந்து நின்நாமம் என்னென்ன, எல்லாம்வல்ல சித்தரெனப் 
பகர்ந்(து) அருள்காட்டும் சொக்கே பரதேசி பயகரனே'' 

என்று வீரபத்திரக் கம்பர் இயற்றிய திருவிளையாடற்பயகர மாலை பகர்கிறது.

கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடல் நடந்த இடம் இது. சித்தராக வந்த சிவனார் கரும்பெடுத்துக் கொடுக்க கல் யானை துதிக்கை நீட்டித் தின்றதை மன்னனிடம் கூறினர். பாண்டியன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பாண்டியன் வந்து பார்த்தபோது, கல்யானையாக இருந்தது. மன்னன் கேள்வியுடன் நோக்க, யானை மீது மீண்டும் தன் பார்வையைச் செலுத்தினார் சித்தர். யானை, மன்னனின் கழுத்தில் இருந்த முத்துமாலையை அப்படியே இழுத்து வாய்க்குள் போட்டது. ஆத்திரம் அடைந்த மன்னன், காவலர்களை ஏவ, அவர்கள், சித்தரையும் யானையையும் அடிப்பதற்காக கையில் வைத்திருந்த கோலை ஓங்கினர். அப்படியே நில்லுங்கள் என்றார் சித்தர். காவலர்களின் ஓங்கிய கை அப்படியே இருக்க, கல்லாக நின்றனர்.

அபிஷேக பாண்டியன் அச்சமடைந்தான். பெரும் குற்றம் இழைத்ததாகக் கருதி சித்தர் பெருமான் திருவடிகளில் வீழ்ந்தான். சித்தர் மகிழ்ச்சியுடன் "மன்னா வேண்டும் வரம் கேள்'' என்றார். ""புத்திரப்பேறு வேண்டும்'' என்றான் பாண்டியன்.

பிறகு தம் கரத்தால் சித்தர் யானையைத் தொட அது அவனது முத்துமாலையைக் கொடுத்தது. மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, சித்தரைப் பார்த்தான். காணவில்லை. யானையைப் பார்த்தான். கல்யானையாகவே இருந்தது. திகைப்புற்ற பாண்டியன் சோமசுந்தரப் பெருமானே தன் பொருட்டு சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தார் என்பதை உணர்ந்து  போற்றினான்

நன்றி :- பா.சரவணகுமரன், வெள்ளிமணி, தினமணி, 29-03-2013.  





0 comments:

Post a Comment

Kindly post a comment.