Friday, March 29, 2013

ரூ. 2,000 கோடி வரி செலுத்த நோக்கியாவுக்கு நோட்டீஸ் !



செல்போன் நிறுவனமான நோக்கியா, ரூ. 2,000 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் உறுதி செய்தது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

இந்தியாவில் நிலவும் சட்டங்களுக்கும் இந்தியா-ஃபின்லாந்து அரசுகள் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கும் உட்பட்டு நோக்கியா செயல்பட்டுவருகிறது. வருமான வரி பாக்கியை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தில்லி உயர் நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மறு உத்தரவு வரும் வரை, வருமான வரி கோரும் நோட்டீஸýக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நோக்கியா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, ரூ. 2,000 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி மார்ச் 21-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இந்தத் தொகையைச் செலுத்த ஒரு வார கால அவகாசம் தரப்பட்டதாக அவர்கள் கூறினர். வரி பாக்கியைச் செலுத்த காலக் கெடு நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்ப வருமான வரி விதிமுறைகளின் கீழ் தங்களுக்கு அதிகாரம் உள்ளது என தங்களது பதிலில் தெரிவிக்கப்போவதாக அதிகாரிகள் கூறினர்.

ஃபின்லாந்து நோக்கியா நிறுவனம் சென்னைக் கிளை நிறுவனத்துக்கு அளித்த மென்பொருளுக்காக தரப்பட்ட காப்புரிமைத் தொகைக்கு 10 சதவீத வரி உண்டு. இதன் மதிப்பான ரூ. 2,000 கோடியை செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை கோரியுள்ளது. 
                              

நன்றி :- தினமணி, 29-03-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.