Thursday, March 28, 2013

அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறைபடுத்தி பட்டா வழங்குவதற்கு காலக்கெடு நீட்டிப்பு !



சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் தகவல் !

அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறைபடுத்தி பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

வீட்டுமனைப் பட்டா

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பிப்போருக்கு பட்டாக்கள் விரைவாக வழங்கப்படுவது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு செய்யும் பட்டா மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது;–அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு ஒருமுறை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் நடைமுறையில் இல்லை என்று சில உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.

சிறப்புத் திட்டத்திற்குக் காலக்கெடு நீட்டிப்பு
அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அரசுக்கு தேவைப்படாத நீர்நிலைகள், மேய்க்கால், மந்தைவெளி, மயானம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்குதற்கான ஒருமுறை முறைப்படுத்தும் திட்டத்தை காலநீட்டிப்பு செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.வீடு இல்லாத ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கவும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீட்டையும் கட்டிக்கொடுக்கிறோம்.இவ்வாறு அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.                                                                    

நன்றி :-தினத்தந்தி, 28-03-2013                             



0 comments:

Post a Comment

Kindly post a comment.