திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சைவநெறிக் கழகத்தின் சார்பில் மே 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 15
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சைவநெறிக் கழகத்தின் சார்பில் மே 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 15 நாள் இலவச சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
விக்கிரமசிங்கபுரம் சைவநெறிக் கழகத்தின் சார்பில் சைவ சித்தாந்தப் பயிற்சி கடந்த 1987ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 27ஆவது ஆண்டாக இந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த இலவசப் பயிற்சியில் சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை முன்னாள் பேராசிரியர்களும், பிற சித்தாந்த அறிஞர்களும் பாடங்களை நடத்துகின்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை முன்னாள் பேராசிரியர் ஆ.ஆனந்தராசன் இந்த வகுப்பின் இயக்குநராக உள்ளார். சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளை அறிய விரும்புவோருக்குப் பொது நிலை வகுப்பும், அடிப்படைகளை முன்பே கற்றவர்கள் மேலும் விரிவாகப் பயில்வதற்கு சிறப்பு நிலை வகுப்புகள் என 2 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்பில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு வகுப்பு நடைபெறும் 15 நாள்களும் தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்களைத் தங்களது முகவரி எழுதிய உறையுடன் ""தலைவர், சைவநெறிக்கழகம், 809/ 8, பிரதான சாலை, விக்கிரமசிங்கபுரம்- 627 425'' என்ற முகவரிக்குக் கடிதம் எழுதி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சைவநெறிக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னவேடம்பட்டி சிரவை ஆதீனம் கெüமார மடாலயத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இலவச சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தென்னக சைவ சமயப் பேரவைச் செயலர் ச.த. ஆறுமுகம் வெளியிட்ட செய்தி: கோவை சிரவை ஆதீனம் கெüமார மடாலயமும், தென்னக சைவ சமயப் பேரவையும் இணைந்து இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. மொத்தம் 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர்களுக்குப் பயிற்சிக் காலம் முழுவதும் உணவும் தங்குமிடமும் திருமடத்தால் ஏற்பாடு செய்யப்படும். மே 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
சைவ சமயக் கோட்பாட்டின் இலக்கணம் என்று போற்றப்படும் சைவ சமய வாழ்வியல் வழிபாடுகள் என்ற தலைப்பில் பாடங்களுடன் செய்முறைப் பயிற்சியும் நடத்தப்படும்.
சைவ சமயத்தில் வாழ்வியல் வழிபாடுகள் என்ற தலைப்பில் திருமணங்கள், புதுமனை புகுவிழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, நீத்தார் நினைவு நாள் உள்ளிட்ட அனைத்து சைவ சமய விழாக்கள் மற்றும் வழிபாடுகள் குறித்த பாடங்களுடன் செய்முறைப் பயிற்சியும் கற்றுத் தரப்படும். அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.
பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சுய முகவரியிட்ட ரூ.5 அஞ்சல் உறையுடன் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதினால் விண்ணப்பம், விதிமுறைகள் அனுப்பி வைக்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஏப். 20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். செயலர், தென்னக சைவ சமயப் பேரவை, 129-5, கருணாநிதி நகர், பீளமேடு முதன்மைச் சாலை, சவுரிபாளையம் அஞ்சல், கோவை -28
நன்றி:- தினமணி, 21-03-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.