Wednesday, March 20, 2013

சுரண்டப்படுகிறது பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கும்: அபாயம் !

                       மணல் அள்ளப் பயன்படுத்தப்படும் பொக்லைன் எந்திரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பாலாற்றில் அரசு அனுமதியின்றி தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான நதியாக பாலாறு செல்கிறது. பாலாற்றை நம்பிப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலாற்றில் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

விவசாயம் பொய்த்த நிலையில் விவசாயிகள் தங்கள் மாட்டு வண்டிகள் மூலம் பாலாற்றில் மணல் அள்ளிப் பிழைப்பு நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மணல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர்.

அரசு அனுமதித்த மணல் குவாரிகள்: இதனால் பாலாற்றில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் கனிமவளத் துறை சார்பில் பாலாற்றில் எங்கு மணல் குவாரி நடத்தலாம் என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் தாலுக்காவில் பிச்சவாடி, காவந்தண்டலம், உத்தரமேரூர் தாலுக்காவில் பழவேரி, நெய்யாடுபாக்கம், திருக்கழுக்குன்றம் தாலுக்காவில் அனூர், அட்டவாட்டம், வள்ளிபுரம் ஆகிய இடங்களில் மணல் குவாரி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பகுதிகளில் கனிமவளத்துறை சார்பில் மணல் குவாரி நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது.

 இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 2012 அக்டோபர் 11 முதல் காவந்தண்டலம் மணல் குவாரி மூடப்பட்டது. மேலும் பிச்சவாடி, நெய்யாடுபாக்கம், அனூர், அட்டவாக்கம், வள்ளிபுரம் உள்ளிட்ட மணல் குவாரிகளை நடத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மணல் குவாரி உரிமத்தை மாவட்ட நிர்வாகம் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது.  பழவேரி மணல் குவாரியில் இருந்து மட்டும் 2012 இறுதி வரையில் தமிழக அரசுக்கு ரூ. 4 கோடி வருவாய் கிடைத்தது.

உரிமம் இல்லாத மணல் யார்டு: இந்நிலையில் அரசு உரிமம் பெற்ற பழவேரி மணல் குவாரியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் சர்க்கரை ஆலைக்கு எதிரில் வாலாஜாபாத்- செங்கல்பட்டு சாலையில் தனியாருக்குச் சொந்தமான மணலை சேமித்து வைத்து விற்பனை செய்யும் யார்டு உருவாக்கப்பட்டது.

யார்டு நடத்துவதற்கும் கனிமவளத்துறையில் இருந்து உரிமம் பெற வேண்டும். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன் இப்பகுதியில் யார்டு நடத்த உரிமம் வேண்டி விண்ணப்பித்து இதுவரை அந்த விண்ணப்பம் கிடப்பில் உள்ளது.

ஆனால் கடந்த 6 மதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் உரிமம் இல்லாமல் நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உரிமம் இல்லாத மணல் குவாரி: மணல் யார்டுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்க தகர ஷீட்டால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பையும், அருகில் பாலாற்றங்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இருப்பதையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கம்பாக்கம், புளியம்பாக்கம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பாலாற்றுப் படுகையில் சர்வ சாதாரணமாக பல ஹெக்டேர் தூரத்துக்கு 10 முதல் 20 அடி ஆழத்துக்கு மணல் சுரண்டப்பட்டு வருகிறது.

இங்கிருந்து நாள்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் மணல் கடத்தி யார்டில் குவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குவிக்கப்படும் மணல்கள் சென்னையில் ஒரு லாரி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

குடிநீர் திட்டம் பாதிக்கும் அபாயம்: அங்கம்பாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பாலாற்று படுகையில் இருந்துதான், ஸ்ரீபெரும்புதூர் - பூந்தமல்லி கூட்டுக் குடிநீர்த் திட்டம், தாம்பரம் - பல்லாவரம் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்துக்காக பிரமாண்டமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, புளியம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சம்பில் நீர் தேக்கப்பட்டு நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி வழியாக தாம்பரம், பல்லாவரம் பகுதிக்கு பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல் வாலாஜாபாத், தென்னேரி, சுங்குவார்சத்திரம் சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லிக்கு பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் மணல் திருடப்படுவதால், குடிநீர்த் திட்டம் முழுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

வரைமுறையின்றி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் குறிப்பிட்ட கூட்டுக் குடிநீர்த்  திட்டம் மட்டுமின்றி, அங்கம்பாக்கம், சங்கராபுரம், புளியம்பாக்கம், நத்தாநல்லூர், ஆனம்பாக்கம், படூர், சிறுமையூர், மதூர், திருமுக்கூடல், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துவிடும். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பெருமாள் கூறுகையில், சங்கராபுரத்தில் கடந்த 6 மாதத்துக்கு மேல் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மணல் யார்டு செயல்படுகிறது. அதற்கு உரிமம் உள்ளதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த இடத்துக்கான மனைவரியோ,  யார்டு நடத்துவதற்கான தொழில் வரியோ சம்பந்தப்பட்டவர்கள் ஊராட்சியில் இதுவரை செலுத்தவில்லை என்றார்.

இது குறித்து உத்தரமேரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் கூறுகையில், மணல் குவாரி, மணல் யார்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்த அனைத்து கேள்விகளையும் மாவட்ட நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

கீழ்பாலாறு வடிநிலக் கோட்டப் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்திமதிநாதன் கூறுகையில், சம்மந்தப்பட்ட இடத்தில் மணல் குவாரி நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் அப்பகுதியில் மணல் யார்டு நடத்தவும் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கனிம வளத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். அப்பகுதி எம்.எல்.ஏ.வோ இது குறித்து தனக்கு ஏதுமே தெரியாது எனத் தெரிவிக்கிறார்.

பாலாற்றின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்பட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.          
நன்றி :- தினமணி, 20-03-2013
    








0 comments:

Post a Comment

Kindly post a comment.