Thursday, March 21, 2013

,மணல் லாரிகளைப் பிடித்துக் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை !

தடப்பெரும்பாக்கம் கிராம ஏரியில் உள்ள மண் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாததால் அவற்றில் முள்செடிகள் மண்டிக் கிடக்கிறது. சில ஏரிகள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இங்குள்ள ஏரிகளில் தனியார் மண் எடுப்பதற்கு திருவள்ளூரில் உள்ள கனிமவளத்துறை மூலம் பல்வேறு அரசு விதிகளுடன் குவாரி அனுமதி அளிக்கப்படுகிறது.

கனிமவளத்துறை மூலம் அனுமதி அளிக்கப்படும் மண் குவாரிகளை அப்பகுதி கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு அங்கு விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுத்திருந்தால் குவாரியை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் விதிகளை மீறி மண் எடுத்துச் சென்றாலும் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறுக்கீடு காரணமாக வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குவாரியில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுப்பதால் ஏரியில் நிலத்தடி நீராதாரம் குறைந்து ஏரி நீரில் உவர்ப்புத் தன்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதியில் ஏரி நீரைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர் நீண்ட காலமாகப் புகார் தெரிவித்து வருகின்றனர்.

குவாரிகளுக்கு 40 முதல் 50 நாள்கள் வரை அனுமதி அளிக்கும் கனிமவளத் துறையினர் இவ்வளவு நீளம், அகலம் மற்றும் மொத்தம் இத்தனை லோடுகள் மட்டும்தான் மண் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு விதிமுறைகளைத் தெரிவித்து அனுமதி வழங்குகின்றனர். 

ஆனால் குவாரி எடுப்போரில் பெரும்பாலானோர் மேற்கண்ட விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் மண் மற்றும் அருகில் இருக்கும் மணலையும் எடுத்துச் செல்வதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் ஏரியில் மண் எடுப்பதற்கு தனியார் ஒருவருக்குக் குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு அண்மையில் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குவாரியில் வேலை செய்பவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்ட லாரிகளைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்னேரி போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் விதிகளை மீறி திங்கள்கிழமை இரவு குவாரியில் இருந்து மணல் எடுத்துச் செல்லப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் 4 லாரிகளைச் சிறைப் பிடித்துப் பொன்னேரி காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வருவாய்த்துறையினர் யாரும் அங்குவரவில்லை. அங்கு வந்த போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் சென்று விட்டதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விதிகளை மீறிச் செயல்படும் குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                                                                                               

நன்றி := தினமணி, 21-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.