Monday, March 18, 2013

திருக்குறள் உலகிலேயே முதல் தேசிய நூலாக வேண்டும் !

திருக்குறளை உலகிலேயே முதல் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி (படம்) வலியுறுத்தினார்.

திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கவிஞர் மா.கோமுகிமணியன் தலைமை வகித்தார். பல்வேறு தமிழ்ச்சங்கங்களின் தலைவர்கள் இரா.முகுந்தன் (தில்லி), நா.மகாதேவன் (மும்பை), இராசபாண்டியன் (சென்னை),இரா.இராசமாணிக்கம் (ஹைதராபாத்) முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மூ.இராசாராம் ஆய்வுநூலை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற திருக்குறள் தேசிய நூல் ஆய்வுக் கருத்தரங்குக்கு தலைமைவகித்து க.இராமசாமி பேசியதாவது:

நான் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றியபோது மத்திய அரசிடம் இருந்து எங்களிடம் ஓர் ஆலோசனை கேட்டார்கள். திருக்குறளைத் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எங்களிடம் கேட்டிருக்கிறது. ஒரு நூல் தேசிய நூல் என்று அறிவிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு என்ன என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? தேசிய நூல் என்று உலகில் வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு விளக்கம் கேட்டார்கள்.

திருக்குறள் உலகம் முழுவதற்கும் பொதுவானது என்பதால், அதை தேசிய நூலாக அறிவிக்கும் தகுதிகளை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஆனால் உலகில் தேசியப் பறவை இருக்கிறது. தேசிய மிருகம் இருக்கிறது. தேசிய கீதம் இருக்கிறது.

இதுவரை எந்த நூலும் தேசிய நூல் என்று அறிவிக்கப்படவில்லை. எனவே திருக்குறள் தேசிய நூல் என்று அறிவிக்கப்பட்டால், அதுவே உலகில் தேசிய நூலாக அறிவிக்கப்பட்ட முதல் நூலாக இருக்கும்.

தமிழைச் செம்மொழியாக்கும்போது செம்மொழி என்று அறிவிக்கப்படத் தேவையான தகுதிகள் எவை என்று வரையறைகளை உருவாக்கினார்கள். அதுபோல தேசிய நூலுக்கான தகுதிகள் எவை என்பதற்கான வரையறைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.

நா.பழனிச்சாமி பேசுகையில் அனைத்து இலக்கிய அமைப்புகளும் சேர்ந்து இதுபோன்ற மாநாடுகளை நடத்த முன் வர வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.

முனைவர் அருகோ பேசுகையில், திருக்குறளைத் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி. யாராவது இழுப்பார்கள் என்று நினைக்காமல் முதலில் வடத்தைப் பற்றி இழுக்கத் தமிழார்வலர்கள் முன் வர வேண்டும் என்றார்.

கடவூர் மணிமாறன் பேசுகையில் பல்வேறு வகைகளில் நாம் கொடுக்கும் அழுத்தம் திருக்குறளை தேசிய நூலாக நடுவண் அரசை அறிவிக்கச் செய்ய வேண்டும். அதற்குரிய முழுத் தகுதியும் திருக்குறளுக்கு இருக்கிறது. உதாரணமாக, பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமைகள் இப்போது நடக்கின்றன. "மலரினும் மெல்லிது காமம்' என்றார். மிகை அன்பு காமம் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். காமத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் பாலியல் வன் கொடுமைகள் நடக்க வாய்ப்பில்லை. பெண்ணுக்கு கற்பையும், ஆணுக்குப் பிறர் மனை நோக்காப் பேராண்மையையும் வள்ளுவர் வலியுறுத்தி இருக்கிறார் என்றார்.

நிகழ்ச்சியில் கோ.அன்பு கணபதி, நாவை சிவம், ராஜேஸ்வரி கல்லாடன், திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், சிவ.பத்மநாபன், குடியாத்தம் குமணன், மு.சற்குணவதி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

ஆய்வுக் கருத்தரங்கத்தைத் தொடர்ந்து "மொழி வளர்ச்சியில் முதல்வர்' என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் கவிஞர் முத்துலிங்கம் முன்னிலை வகிக்க, கவிஞர்கள் தங்க. காமராஜ், ஆராவமுதன், ஆ.உசேன், அரசு. அனுசுயா தேவி ஆகியோர் கவிமழை பொழிந்தனர்.

மாநாட்டின் நிறைவு விழாவிற்குத் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் துரை. இராசமாணிக்கம் தலைமை தாங்கினார்.

பா. இந்திரராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். நம்நாடு அறக்கட்டளை தலைவர் வி.என். சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு. சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராளர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டிப் பேசினார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஆர். நடராஜ். கவிஞர் சி.உதியன் நன்றி கூறினார்.                                                                                           

நன்றி :- தினமணி, 18-03-2013                                                                                               0 comments:

Post a Comment

Kindly post a comment.