Sunday, March 24, 2013

நல்லவேளை ! தூத்துக்குடி, போபால் ஆகவில்லை !

                                          தூத்துக்குடியில் திடீர் நச்சு வாயு கசிவு !
     ஸ்டெர்லைட் ஆலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போராட்டக்    
                         குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தும் போலீஸார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதால் மாநகரப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

நச்சுவாயு பரவியது: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சண்முகபுரம், ஆசிரியர் காலனி, திருச்செந்தூர் சாலை, தபால் தந்தி காலனி, சிப்காட், கடற்கரைச் சாலை, காய்கனி மார்க்கெட், லயன்ஸ் டவுன் பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை நச்சு வாயு பரவியது.

 அப்போது நடைப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள், சாலைகளில் சென்றவர்கள், வீட்டின் வெளிப்பகுதியில் நின்றவர்களுக்கு கண் எரிச்சலும், மூக்கரிப்பு, தொண்டை வலி உள்ளிட்டவை ஏற்பட்டதாம். இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். குறிப்பிட்ட சில இடங்களில் நச்சு வாயுவால் செடிகள் கருகின.

அதிகாரிகள் குழு ஆய்வு: இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதும், நச்சு வாயு வெளியான சம்பவம் குறித்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் லதா, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் கோகுலதாஸ் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வாளர்களைக் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 இந்த ஆலையிலிருந்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ள அளவுக்கு அதிகமாக, நச்சு வாயு வெளியேறியிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் ஆய்வு குறித்து எந்தத் தகவலையும் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஆட்சியர் ஆலோசனை: இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்தும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.

கடும் நடவடிக்கை: இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கூறுகையில், அதிகாரிகள் குழுவினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நச்சு வாயு ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் இருந்து வெளியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்த அளவுக்கு அதிகமாக நச்சு வாயு வெளியிடப்பட்டிருந்தால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஸ்டெர்லைட் மறுப்பு: இந்த விவகாரம் குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன உயர் அதிகாரிகள் கூறுகையில், எங்களது நிறுவனத்தின் இயக்கம் பராமரிப்புக்காக கடந்த ஒருவாரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், எங்களது ஆலையில் இருந்து எந்தவித நச்சு வாயுவும் வெளியாக வாய்ப்பு இல்லை என்றனர்.

ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, காற்றில் நச்சு வாயு கலந்ததற்கு தூத்துக்குடி சிப்காட் வளாகத்திலுள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைதான் காரணம் எனக் கூறியும், அதனை மூட வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ராஜாஜி பூங்கா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வீராங்கனை அமைப்பின் தலைவி பேராசிரியை பாத்திமா பாபு தலைமை வகித்தார். மேலும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை முன்பும் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் எம்.பி. அப்பாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் மோகன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஷாஜஹான், வணிகர் சங்கப் பிரதிநிதிகள், மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸார் பாதுகாப்பு: இப்பிரச்னையையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.                                                                                 

நன்றி :- தினமணி, 24-03-2013                                                                                                       

0 comments:

Post a Comment

Kindly post a comment.