Sunday, March 24, 2013

ஏழு சீருக்கு நான்கு சீர்களில் பொருள் சொன்ன, சுகவனம் சிவப்பிரகாசனார் !




திருக்குறள் ஒன்றே முக்கால் அடிகளில் ஏழு சீர்களில் அமைக்கப்பட்டுள்ளது. ""எல்லோரும்  திருக்குறளை குறுகியது என எண்ணினர், அறிஞர் சுகவனம் சிவப்பிரகாசனாரின் உள்ளம் மட்டுமே, அதைப் "பெரியது' என எண்ணியது. அதன் விளைவே குட்டிக்குறள்''  என்று தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் பாராட்டியுள்ளார். திருக்குறளைக் குட்டிக் குறளாக வழங்கியவர் "கிளிக்காட்டு இறை ஒளியினார்' என்று வழங்கப்பட்ட "சுகவனம்' சிவப்பிரகாசனாராவார்.

÷சேலத்திற்கு "சுகவனம்' என்ற பெயருண்டு. சேலத்தில் வசித்த சிவப்பிரகாசர் தன் பெயருக்கு முன்பாக "சுகவனம்' என்பதைச் சேர்த்து "சுகவனம் சிவப்பிரகாசர்' என்று அழைக்கப்பட்டார். சிறுவர் முதல் முதியோர் வரை எளிதில் உணரும் வகையில், ஒரே வரியில் திருக்குறட் கருத்துகளை வெளியிட விரும்பிய  சிவப்பிரகாசனார், ஏழு சீர்களில் இரண்டு வரிகளில் அமைந்துள்ள பாவினை சுருக்கி, நான்கு சீர்களுடன் ஒரே வரியில் கருத்துகள் சிதையா வண்ணம் எழுதி, தமிழ் உலகுக்கு வழங்கியுள்ளார்.

÷சிவப்பிரகாசனாரின் வாழ்நாள் சாதனையாக அவர் வழங்கிய நூல் திருக்குறள் - நூற்பா.  திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் அவற்றின் கருத்துகள் எளிதில் பரவும் வகையில் 1330 குட்டிக்குறள்களாக அமைந்ததே இந்நூல். பழத்தைச் சாறு பிழிந்து கொடுப்பதுபோல், திருக்குறள் பழத்தைப் பிழிந்து, குட்டிக்குறளாகிய பழச்சாற்றை வழங்கியுள்ளார்.

÷சென்னையிலிருந்து வெளிவரும் "செந்தமிழ்ச் செல்வி' என்ற இலக்கிய இதழில், குட்டிக்குறளை, 1925-ஆம் ஆண்டில் படித்து மகிழ்ந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், சிவப்பிரகாசனாரைத் தேடிச் சென்று அறிமுகம் செய்து கொண்டார். சிவப்பிரகாசனார் எழுதிய குட்டிக்குறளின் முதல் நூறு பாக்களுக்கு உரையும் எழுதி சிறப்பித்துள்ளார் என்றால், இந்நூலின் மேன்மை எளிதில் விளங்கும். கி.வா.ஜ.வின் உரையைத் தொடர்ந்து, சிவப்பிரகாசனாரின் மகன் மாசிலாமணி, பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக விளங்கிய காலத்திலேயே அறத்துப்பால் முழுவதற்கும் உரை எழுதி நிறைவு செய்து, "அறநூல்' என்ற பெயரில் நூலாக 1958-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதை, ""மதிப்பிற்கு அப்பாற்பட்ட பொக்கிஷம்'' என்று மனம் நிறைந்து பாராட்டியுள்ளார் மூதறிஞர் ராஜாஜி.

""அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீத்தல் அரிது''

என்ற திருக்குறளை, ""பிற வாழி நீத்தற்கு அறவாழி சேர்'' என்ற குட்டிக்

குறளாகச் சுருக்கி எழுதியுள்ளார்.

""குழலும் யாழும் மழலை முன் குழைவ''

என்ற ஓர் அடியின் திறத்தாலேயே,

""குழலினிது யாழ் இனிது என்பதம் மக்கள்

 மழலைச் சொல் கேளாதவர்''

என்ற திருக்குறளை விளங்க வைத்துள்ளார்.

÷இவ்விதம் திருக்குறளின் சாரமாக ஒவ்வொரு குறளுக்கும் உயர்ந்த வகையில் "குட்டிக்குறளை' வடித்துள்ளார் சிவப்பிரகாசர்.

÷குருகுலம் நிறுவி, அழகரடிகளாராகத் திகழ்ந்த இளவழகனார், இந்நூலின் முதல்  நூற்பாவிற்கு மட்டும் தனி விளக்கம் எழுதிப் பேருரையாக வழங்கியுள்ளார். இவரைத் திரு.வி.க. பாராட்டியதன்  காரணமாக "இளந்திருவள்ளுவர்' என்ற புதுபெயர் இவருக்குத் தோன்றியது.

÷1961-இல் இந்தக் குட்டிக்குறள் சேலம் செவ்வைத் திருக்குறட் கழக வெளியீடாக வெளிவந்தது. இதன் ஒரு பிரதிகூடக் கிடைக்காத நிலையில், கோவை கம்பன் கழகத் தலைவர் ஜி.கே.சுந்தரம் 1992-ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பித்து இலவச வெளியீடாக வெளியிட்டார். தமிழ் இலக்கிய உலகிற்குத் தோன்றாத் துணையாக நின்ற சுகவனம் சிவப்பிரகாசனார் குட்டிக்குறளைப் படிப்போம்; திருக்குறளைப் போற்றுவோம்.                                                           

நன்றி :- குட்டிக்குறள்!

தகவல்: புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி

தமிழ்மணி, தினமணி,  24-03-2013

  
                                                                                                                                           

0 comments:

Post a Comment

Kindly post a comment.