Friday, March 15, 2013

திருமூலர் குறிப்பிடும் “பைகள்” - அ.சிவபெருமான்

திருமூலர் அருளிய திருமந்திரத்தில், எட்டாம் தந்திரத்தில் இடம் பெற்றுள்ள "காயப்பை' என்னும் பாடலில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன.

 காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
 மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
 காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
 மாயப்பை மன்னா மயங்கிய வாறே. (2122)

 நம் உடம்பில் பல்வேறு "பை'கள் உள்ளன. அவற்றுள் முதல் பை காயப்பை. அதாவது, புற உடம்பாகிய தூல உடம்பைக் காயப்பை என்பர். அவற்றுள் இரண்டாவது பை மாயப்பை. மாயம் என்பதற்கு மறைந்து எனப் பொருள் கொண்டு மறைந்திருக்கும் சூக்கும உடம்பு என்பர். மூன்றாவது ஆனந்த மயகோசம் என்கின்ற மற்றுமோர் பையாகும்.

 இந்தப் பாடலில் வந்துள்ள சரக்குப்பலவுள என்பதன் விளக்கத்தைத் திருமூலர் "இரதமும்' எனத் தொடங்கும் பாடலில் (2125) குறிப்பிட்டுள்ளார். அதன்படி இரதமும், உதிரமும், இறைச்சியும், தோலும், மேதையும், அத்தியும், வழும்பும், மச்சையும், சுக்கிலமும் ஆகிய ஒன்பதும் காயப்பையில் உள்ள ஒன்பது சரக்குகளாம்.

 1. இரதம் - உண்ட உணவின் சாரம்
 
2. உதிரம் - இரத்தம்
 
 3. இறைச்சி - உதிரம் பரவுவதற்கு இடமான தசையும் நாரும்
 
 4. தோல் - ஊனை உள்வைத்துப் பாதுகாப்பாய் மூடியிருப்பது
 
 5. மேதை - அறிவு விளக்கத்திற்குப் பயன்படும் மூளைப் பகுதியை சுற்றியுள்ள வெள்நிணம். இது நீர்மையானது. (சிலர் கொழுப்பு என்பர்)
 
 6. அத்தி - எலும்பு
 
 7. வழும்பு - நிணத்திலிருந்து ஊறும் வெண்மையான நீர்
 
 8. மச்சை - எலும்புக்குள்ளே ஓடும் வழுவழுப்பான திரவம்
 
 9. சுக்கிலம் - வெண்ணீர் (பெண்களுக்குள்ள சுரோணிதம்)
 
 காயப்பை என்னும் தூல உடம்பில் உள்ள ஒன்பதும் சரக்கும் சேர்ந்து உடல் எனக் கொள்ளப்படுகிறது.         

நன்றி :- வெள்ளிமணி, தினமணி, 15-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.