உலகத் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் தேசியநூல் கோரிக்கை மாநாடு மார்ச் 17-ல் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.
இதில், திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், இத்தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தப்படுகிறது.
இம்மாநாட்டில் மேலும் சிறப்பம்சமாக திருக்குறள் ஆய்வு நூல் வெளியிடுதல், திருக்குறள் தேசியநூல் ஆய்வுக் கருத்தரங்கம், கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கவிஞர் மா.கோமுகிமணியன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், பசுமைத் தீர்ப்பாய நடுவர் நீதிபதி ப.ஜோதிமணி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.ராசாராம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ ஆகியோர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2 மணிக்கு ஆய்வுக் கருத்தரங்கை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கியத் துறை தலைவர் வ.குருநாதன் தொடங்கிவைக்கிறார்.
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவன பொறுப்பு அலுவலர் க.இராமசாமி தலைமையில் நடைபெறும் இக் கருத்தரங்கில் பல்வேறு நாட்டு அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு "மொழி வளர்ச்சியில் முதல்வர்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தாண்டவன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ், உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் கோ.விஜயராகவன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு. சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
நன்றி :- தினமணி, 15-03-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.