Thursday, March 14, 2013

மதுவரக்கனிடமிருந்து எப்பொழுது கிடைக்கும் விடுதலை ?



இந்தியாவை "காந்தி நாடு' என்றே உலகம் மதிப்பிடுகிறது. அந்த காந்தியடிகளின் அடிப்படைக் கொள்கைகளை நாடு ஏற்றுக் கொண்டிருக்கிறதா? போரும், பயங்கரவாதமும் ஏற்படும் போதெல்லாம் அவரது அகிம்சைக் கொள்கையே விடையாகக் கிடைக்கிறது.

ஆனால் அவரது "மதுவிலக்குக் கொள்கையை அவர் பிறந்த குஜராத் மாநிலம் தவிர, பிற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தவில்லையே!'

இந்தியாவிலேயே மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் முன்னோடியாக இருந்த தமிழ்நாடு இன்று மது விற்பனையிலும், நுகர்விலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதையே இலக்காகக் கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. எப்போதும் அரசு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும் என்றே அரசியல் சட்டம் கூறுகிறது. மக்கள் நலனுக்கு எதிராக மது விற்பனையையே நோக்கமாகக் கொண்ட அரசு மக்கள் நல அரசாக இருக்க முடியுமா?

மூதறிஞர் ராஜாஜி 1931-இல் சென்னை மாகாண பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றதும் இந்தியாவிலேயே முதன்முறையாக சேலத்தில் மதுவிலக்கை அறிமுகப்படுத்தினார். மதுபான வருமானத்தை ஈடுகட்ட விற்பனை வரியை நாட்டிலேயே முதன்முறையாக நடைமுறைப்படுத்தினார்.

1971 பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற திமுக தலைவர் மு. கருணாநிதி முதன்முதலாக மதுவிலக்கைத் தளர்த்தி தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் 2003 அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் (1937) திருத்தப்பட்டு மதுக்கடைகளை நடத்தும் ஏகபோக உரிமை டாஸ்மாக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

நம் நாட்டு மதுவாகிய கள், சாராய உற்பத்தியைத் தவிர்த்து, அயல்நாட்டுச் சாராய உற்பத்தியை மட்டுமே தமிழ்நாடு அரசு மதுவாக விற்பனை செய்து வருகிறது. அதுவும் இந்தச் சாராய உற்பத்தி பெரும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளே மதுபான உற்பத்தி நிறுவனங்களில் பினாமியாகவே செயல்படுகின்றனர்.

சாராய உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் கிடைக்கும்போது அதை இழக்க யாரும் துணிவார்களா? அரசும், அரசியல் கட்சிகளும் இதை கற்பக விருட்சமாக நினைக்கின்றன. இதை மறைத்துவிட்டு, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் 2003 நவம்பர் மாதம் டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கியது. விற்பனை தொடங்கிய நிதியாண்டில் ரூ. 3,500 கோடியாக இருந்தது. இது 2004-இல் ரூ. 4,800 கோடியாக உயர்ந்தது.

டாஸ்மாக் தொடங்கப்பட்ட காலம் முதல் 2010 வரை ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 1,500 கோடியாக விற்பனை உயர்ந்து வந்த நிலையில் 2012-ஆம் நிதியாண்டில் ரூ. 5,000 கோடி வரை அதிகரித்தது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் விற்பனை இலக்கு ரூ. 25 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பருவமழை பொய்த்ததாலும், விவசாயம் சீரழிந்தது. மின்தடை காரணமாக சிறு தொழில்களும் நசிந்துள்ளன.

தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் முதலியவற்றில் நகரங்களில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு முதலிய விழா நாள்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முழுமையடையவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் டாஸ்மாக் கண்காணிப்பாளர் மீது தாற்காலிக வேலைநீக்கம் முதலிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன் டாஸ்மாக் ஊழியர்களிடம் எழுதியும் வாங்கப்பட்டது. இப்போது பார்களுக்கு தங்குதடை இல்லாமல் சரக்குகளை நேரம் காலம் பார்க்காமல் வாரி வழங்குகின்றனர். இதனால் பார்களில் மது விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது என்று கூறப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் இலக்கை பூர்த்தி செய்யாத விற்பனையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. ஆகவே இந்த ஆண்டு மது விற்பனை உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"குடி குடியைக் கெடுக்கும்' என்பது பழமொழி மட்டுமல்ல, பல காலமாக அனுபவித்து வரும் பழகிய மொழி. மனிதர்களின் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டமாகவே இது மாறியிருக்கிறது. இந்தப் போராட்டத்தை அரசாங்கமே நடத்துவதுதான் ஆபத்தானது.

காந்தியடிகளிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ""உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்?'' என்பதுதான் அது. அதற்கு அவரது பதில் என்ன தெரியுமா?

""ஒரு மணி நேரத்திற்கு இந்தியா முழுமைக்கும் என்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால், முதல் காரியமாக நான் என்ன செய்வேன் தெரியுமா? இழப்பீடு கொடுக்காமல் எல்லாக் கள்ளுக்கடைகளையும் மூடி விடுவேன். குஜராத்தில் உள்ள கள்ளு மரங்களையெல்லாம் அழித்து விடுவேன்'' என்று உரத்த குரலில் பேசினார் காந்திஜி. (யங் இந்தியா, 25-6-1931).

நமது நாட்டு மதுவாகிய கள், சாராயத்தைத் தவிர்த்துவிட்டு, அயல்நாட்டு மதுவகைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, அக்காலத்தில் வாழ்ந்த காந்தியடிகளுக்கு எப்படித் தெரியும்? இதனால் கிராமப்புறப் பொருளாதாரம் முற்றிலும் சுரண்டப்படுகிறது. வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் கிராம மக்களுக்காகக் குரல் கொடுக்க காந்திஜி இல்லையே!

மதுவின் கொடுமையை இனிமேல்தான் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அறநூல்களும், ஆன்றோர்களும் கூறாத அறிவுரைகளா? தினந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும், நாட்டிலும் இதன் கொடுமையை ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருப்பது தெரியாதா? "மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்குக் கேடு' என்று மதுபாட்டிலில் எழுதி வைத்துக் குடிக்கச்செய்வது கொலை செய்வது போன்ற கொடுமையல்லவா!

குடிப்பழக்கம் என்பது ஒருகாலத்தில் ஒழுக்கம் சார்ந்ததாக இருந்தது; பிற்காலத்தில் உடல்நலம் சார்ந்ததாக இருந்தது; இப்போது ஒரு சமூகப் பிரச்னையாகவே மாறியிருக்கிறது: சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகவும் மாறிவிட்டது.

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற மக்கள் இப்போது மதுவுக்கு அடிமையாகி விட்டனர். வழிகாட்ட வேண்டியவர்களே வழி மாறி விட்டனர். இந்த அடிமைகளுக்குத் தேவை விடுதலை மட்டுமே! இது எப்போது கிடைக்கும்? எப்போதாவது கிடைக்குமா?

கட்டுரையாளர்:  உதையை மு.வீரையன்,பணி நிறைவுற்ற ஆசிரியர்.                  

நன்றி :- தினமணி, 14-03-2013 ( கட்டுரையின் ஒருபகுதி மட்டும் )


0 comments:

Post a Comment

Kindly post a comment.