Sunday, March 17, 2013

இன்று..... குருவி! நாளை.....நாம்? மார்ச் 20 உலகக் குருவிகள் தினம் !

"காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று பாடினார் பாரதியார்.

அதாவது, "சக மனிதனை நேசிப்பதைப் போல குருவியையும் நேசி' என்று இதற்குப் பொருள்.

நேசிக்கிறோமா?

இல்லை என்பதுதான் பதில்.

ஒவ்வோராண்டும் மார்ச் 20 ஆம் தேதியை உலகக் குருவிகள் தினமாகக் கொண்டாடுகிறோம். எதற்கென்றால், குருவியை அழிக்கும் சுற்றுச்சூழல் கேட்டைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கும் - நமது குழந்தைகளுக்கும்  வர வேண்டும் என்பதற்காக.

நமது வீடுகளுக்குள் கூடு கட்டி வாழ்ந்த குருவிகளை இப்போது நாம் பார்க்க முடிவதில்லை. "கீச் கீச்' என்று கத்திக் கொண்டு தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டு, சட்டென்று சிறகடிக்கும் அழகைக் காண முடிவதில்லை. காரணம், சுற்றுச் சூழல் கேடுதான்.

நெல், மக்காச்சோளம், பயறு வகைகள் போன்ற தானியங்களான சைவ உணவுகளையும், புழு, பூச்சிகள், வண்டுகள் என அசைவ உணவுகளையும் உண்ணும் குருவிகளின் அழிவுக்கு  இந்த உணவுகளின் பற்றாக்குறையும் முக்கிய காரணம்.

நாம் தானியங்களைப் பயிர் செய்யும்போது பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கிறோம். இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்களை உண்ணும் குருவிகள் இறந்துவிடுகின்றன. அப்படியே இறக்காமல் இருந்து ஒருவேளை முட்டைகளையிட்டாலும் கூட, அந்த முட்டைகளின் மேல் தோல் கடினமாக இல்லாமல் போய்விடுகிறது. முட்டை உடைந்து போகிறது. புதிய தலைமுறை குருவிகள் உருவாகாமலேயே அழிந்துவிடுகின்றன.

மேலும் இந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகளால் வயல் வெளிகளில் புழு, பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகின்றன. இதனாலும் குருவிகள் பட்டினி கிடக்க நேரிடுகிறது.

நாம் நமது வீடுகளை நவீன வசதிகள் கொண்டதாக இப்போது மாற்றிவிட்டோம். காற்றுப் புக முடியாத ஏசி அறைகளில் எந்தச் சிட்டுக் குருவி கூடு கட்ட முடியும்?

வயல்வெளிகளை, வனங்களை அழித்துவிட்டு கான்கீரீட் வனங்களை உருவாக்கிவிட்டோம். உலகம் முழுவதையும் "வெப்ப மண்டலமாக' மாற்றிவிட்டோம். இதனால் குருவிகள் மட்டுமல்ல, 226 பறவையினங்கள் அழிந்து வருவதாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்து குருவிகளுக்கு நாம் இழைக்கும் மாபெரும் தீங்கு, தெருவுக்குத் தெரு செல்போன் டவர்களை அமைத்ததுதான். இந்த செல்போன் டவர்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு சிட்டுக் குருவிகளின் மாபெரும் எதிரி.

சாதாரணமாக ஒரு குருவி முட்டையிட்டு 10 - 15 நாட்களில் பொரித்துவிடும். ஆனால் செல்போன் டவரிலோ அது இருக்கும் பகுதிகளிலோ முட்டையிட்டால் 30 நாட்களானாலும் பொரிப்பதில்லை. முட்டைகளே கல்லறைகளாய் மாறிவிடுகின்றன.

ஆண்மையைப் பெருக்கச் சிட்டுக்குருவி லேகியம் என்பதுபோன்ற அறிவியலற்ற நம்பிக்கைகளின் விளைவாக, சிட்டுக் குருவிகளை நாம் சாகடித்ததும் கூடச் சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

இப்படியே நாம் சுற்றுச் சூழலை கெடுத்துக் கொண்டேயிருந்தோம் என்றால், சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு? என்றெல்லாம்  நாம் பாட வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.

சிட்டுக் குருவிகள் இருந்தால்தானே கட்டுப்பாடு... அது,,, இது,,, எல்லாம்.

இன்று குருவி?  நாளை... நாம். ------ந.ஜீ.      

நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 17-03-2013 


0 comments:

Post a Comment

Kindly post a comment.