Friday, March 29, 2013

ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று நெடுஞ்சாலையில் செயல்பட்ட 112 டாஸ்மாக் மதுக்கடைகள் அகற்றம் !


சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று நெடுஞ்சாலையில் செயல்பட்ட 112 டாஸ்மாக் மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துவிட்டனர். மீதமுள்ள கடைகள் நாளைக்குள் மாற்றம் செய்யப்படும் என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகளும், உயிர் இழப்பும் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் வெளியானது.
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் டிரைவர்கள் மது வாங்கிக் குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதே இதற்குக் காரணம் என்று கூறி நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மார்ச் 31-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை அகற்றுவதற்கு மேலும் 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று கோரி டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் டி.சவுண்டையா புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஐகோர்ட்டின் உத்தரவுப்படி 75 கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டோம். மேலும் 335 கடைகளை மாற்றுவதற்கு புதிதாக இடம் பார்த்துவிட்டோம். இதுதவிர மீதியுள்ள கடைகளையும் மாற்றம் செய்வதற்கு மேலும் 6 மாதம் அவகாசம் தரவேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச், அரசு தரப்பில் கூறப்பட்ட காரணங்களை ஏற்க இயலாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் டி.சவுண்டையாவிடம் கேட்டதற்கு, ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்று நேற்று வரை 112 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 392 கடைகள் நாளைக்குள் மாற்றிவிடுவோம். நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்டு உள்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்றார்.                           

நன்றி :- மாலைமலர், 29-03-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.