பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதிச் சான்றிதழ்களைப் பெற இனி அலைய வேண்டாம்.
ஒவ்வொரு வாரமும் வருவாய்த் துறை அலுவலர்கள் உங்கள் வீடு தேடி வர உள்ளனர். இதற்கான புதிய திட்டம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தை ஈரோடு மாவட்டம் வின்னப்பள்ளி கிராமத்தில் வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தொடங்கி வைக்கிறார்.
AMMA (Assured Maximum Service to Marginal People in All Villages)
என புதிய திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை ஒட்டி, புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்னென்ன சேவைகள்?
அரசின் பல்வேறு சேவைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்குப் பொது மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு பலமுறை வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். தாசில்தார்கள் பலர் வெளி அலுவல் காரணமாகச் சென்று விடுவதால், அவர்களை பொது மக்கள் சந்தித்து முறையீடு செய்வது சிரமமாக உள்ளது.
மேலும் வயதானவர்கள், ஏழைகள், தாலுகா அலுவலகத்துக்கு வந்து செல்வதும் சிரமமாக உள்ளது. வருவாய்த் துறையின் புதிய திட்டப்படி, வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில் அதிகாரிகளும், அலுவலர்களும் முகாமிடுவார்கள்.
அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், வீட்டு மனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை முகாமின்போது சம்பந்தப்பட்ட ஊராட்சியிலேயே ஆய்வு செய்து உடனடியாக வழங்க வழி செய்யப்படும்.
இவைதவிர ரேஷன் அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் தொடர்பான பிரச்னைகளும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்அறிவித்துள்ளார்.
நன்றி :- தினமணி, 24-02-2013
Sunday, February 24, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.