Sunday, February 24, 2013

"திருக்குறள்" குமரேச வெண்பா! -இளவேலங்கால் க.நல்லையா .

கவிராஜ பண்டிதரான ஜெகவீர பாண்டியனார் கி.பி.20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறந்த புலவர். இவர் இயற்றிய நூல்களுள் எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது "திருக்குறள் குமரேச வெண்பா' என்ற நூல்.

இது ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு வெண்பாவாக இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் ஜெகவீர பாண்டியனாரின் 14 ஆண்டு கால உழைப்பில் உருவானதாகக் கூறுவர்.

÷ஒவ்வொரு வெண்பாப் பாடலிலும் தாம் வழிபடும் முருகப்பெருமானை விளித்து, வினா ஒன்று தொடுத்து, அதற்குத் தாமே விடையும் தந்துள்ளார். வெண்பாவில் முதல் இரண்டு அடிகளில் ஒரு கதையைக் கூறி, அடுத்த இரண்டு அடிகளில் திருக்குறளை அமைத்திருக்கிறார்.

பல இலக்கியங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மேற்கோள் பாடல்களை எடுத்துப் பொருத்திக் காட்டியுள்ளார். ஒவ்வொரு வெண்பாவுக்கும் உரை விளக்கம், கதை, மேற்கோள் எனச் சொல்லிவிட்டு இறுதியில், கூறப்பட்ட குறளுக்கு ஒப்பாக வேறொரு குறளைத் தானே இயற்றியுள்ளார். அறத்துப்பாலில் (வான்சிறப்பு) ஒரு வெண்பாவைக் காண்போம்:

""உண்டிதரு நீரே உணவாக சீதை பண்டு

கொண்டிருந்தாள் என்னே குமரேசா! உண்டிதனை

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை'' 

"குமரேசா! நீரையே உணவாகக் கொண்டு சீதை ஏன் முன்பு உறைந்திருந்தாள் எனின், துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்க. உண்பார்க்கு நல்ல உணவுகளை உணவாக்கி, உதவி அவற்றை உண்ணுங்கால் தானும் உணவாய் உள்ளது மழையே என்பதாகும். உண்ணும் உணவாலும், பருகும் நீராலும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த இருவகைப் பயன்களுக்கும் மூலகாரணமாய் உள்ளது மழையே ஆதலால், அதன் விழுமிய மகிமை விழி தெரிய விளக்கியது. உயிர்களும் பயிர்களும் வாழ அது அருள்கிறது' - இவ்வாறு பொருள் தரும் பாண்டியனார், வெண்பாவின் முதலடியில் சீதையைப் பற்றிய கதையைக் கூறியுள்ளார்.

அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை உணவும் உறக்கமுமின்றி தன் கணவனையே நினைந்து வாடுகிறாள். தன் உயிரைக் காக்கும் பொருட்டு அங்கே இருந்த தண்ணீர் தடாகத்துக்குச் சென்று சில சமயம் நீர் பருகி வருகிறாள்.

""தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை

வீரன் மேனியை மானும் இவ்வீங்குநீர்

நார நண்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்

சோரும் ஆருயிர் காக்கும் துணிவினால்''

(இராம; சூளா-25) 

என்பது இராமாயணம். ""அனும, இந்த இடத்தைவிட்டு நான் எங்கும் செல்வதில்லை. எனது பிராண நாயகனை மீண்டும் காணலாம் என்னும் ஆசையால் அதோ அந்த மலர்ப் பொய்கைக்குச் சென்று சிறிது நீர் அருந்தி சாகாமல் இருந்து வருகிறேன்'' என மொழிந்துள்ளமையால், சீதை உயிர் வாழ்ந்துள்ள நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. "நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்' என்கிறார் பாண்டியனார். அதுமட்டுமல்ல, "துப்பார்க்கு' என்ற குறளுக்கு ஒப்பான ஒரு குறளை இந்த வெண்பாவின் இறுதியில்,

""எங்கும் இறையருள்போல் எல்லாமுமாய் நின்றுமழை

தங்குமுயிர் இன்பமுறத் தான்''  

எனப் படைத்திருக்கிறார்.                                                                                                  

நன்றி :- தமிழ்மணி, தினமணி, 24-02-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.