Monday, February 11, 2013

தீர்க்க முடியாதவையா நதிநீர்ப் பிரச்னைகள் ? - மாங்குயில் ஜனா




காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெறுவதில் சிக்கல்'', ""தமிழ்நாட்டுக்குச் செல்லும் பாலாற்றுத் தண்ணீரைத் தடுத்து நிறுத்த தடுப்பணை கட்ட ஆந்திரத்தில் முயற்சி'', ""முல்லைப் பெரியாறு அணையில் அதிக அளவு தண்ணீரைத் தேக்கக் கேரளம் எதிர்ப்பு'' என்று நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக தமிழகத்துக்கு 3 பக்கங்களிலிருந்தும் பிரச்னைகள்.

இந்தப் பிரச்னைகளுக்கு நடுநிலையோடும் சர்வதேச நதிநீர்ப் பங்கீட்டு முறைகளின்படியும் தீர்வு காணவேண்டிய மத்திய அரசு, அரசியல் ஆதாயங்களுக்காகத் தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுக்கிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மெத்தனமாகச் செயல்படுகிறது.

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தின் பிரும்மகிரி மலையில் உற்பத்தியாகிறது "காவிரி'. கர்நாடக மாநிலத்தில் 220 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்தோடி, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியிலேயே சுமார் 70 கிலோ மீட்டர் ஓடி, பிறகு ஒகேனக்கல், மேட்டூர், கல்லணை வழியாக தமிழ்நாட்டில் சுமார் 410 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாய்கிறது. இறுதியில் கொள்ளிடத்தில் இளைப்பாறி கடலில் கலக்கிறது. காவிரியின் வடிகால் பகுதி தமிழகமே.

கர்நாடகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நந்திதுர்க்கம் குடைவரைக் கோயிலின் அருகே நீர்ச்சுனையாக உருவாகிறது "பாலாறு'. கோலார் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைக் கடந்து தமிழகத்தின் வேலூர் மாவட்டம் புல்லூரை வந்தடைகிறது. அங்கிருந்து வேலூர் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து காஞ்சி மாவட்டத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் 100 கிலோ மீட்டரும், ஆந்திரத்தில் 50 கிலோ மீட்டரும், தமிழகத்தில் சுமார் 200 கிலோ மீட்டரும் ஓடுகிறது பாலாறு.

"முல்லை' ஆறும் "பெரியாறு'ம் இணைந்து "முல்லைப்பெரியாறானது'. இந்த அணையின் மூன்றில் இரு பகுதி கேரளத்திலும், ஒரு பகுதி தமிழகத்திலும் உள்ளது. நீரின் ஒரு பகுதி கேரளத்தின் இடுக்கி மின்சார உற்பத்திக்கும், ஒரு பகுதி தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. முல்லைப் பெரியாறின் வடிகால் பகுதியும் தமிழ்நாடே.

நீண்ட நெடுங்காலமாக ஆற்றின் நீரை எப்பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனரோ அவர்களுக்கே அதை "உரிமை' செய்துதர வேண்டும் என்பது "ஹெல்சிங்கு' விதியாகும். இது சர்வதேச அளவில் இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் நியதி. பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கு நகரில் 1966-இல் நடந்த சர்வதேச சட்ட சங்கக் கூட்டத்தில் இது ஏற்கப்பட்டது. "பன்னாட்டுச் சட்டம்' என்ற தகுதி இதற்கு இல்லையென்றாலும் இதுவே மேம்படுத்தப்பட்ட, செழுமைப்படுத்தப்பட்ட கோட்பாடாக இன்றளவும் இருந்து வருகிறது. உலகம் தழுவிய முறையில் நாடுகளுக்கு இடையே எழுந்த நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளுக்கு இதன் மூலமே தீர்வு காணப்பட்டுள்ளது.

எகிப்துக்கும் சூடானுக்கும் இடையேயான நைல்நதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்னை, ஆஸ்திரியாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான டான்யூப் நதிநீர்ப் பிரச்னை, ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயான ரைன் நதிநீர்ப் பிரச்னைக்கும் இப்படித்தான் தீர்வு காணப்பட்டது.

அவ்வளவு ஏன், உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே ரியோ கிராண்டி, கொலராடோ நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைக்கும் இப்படித்தான் தீர்வு காணப்பட்டது.

ரவி, பியாஜ், சட்லஜ் நதிகள் இந்தியாவுக்கு எனவும் சிந்து, ஜீலம், செனாப் நதிகள் பாகிஸ்தானுக்கு எனவும் இப்படித்தான் தீர்மானிக்கப்பட்டது.

சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றுமே இந்திய எல்லையில் இமயமலையில் உற்பத்தியாகி பாகிஸ்தான் நோக்கிப் பாய்கிறது.

ஃபராக்கா அணையில் கங்கை நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 1966-இல் இதன்படியே சுமுக உடன்படிக்கை ஏற்பட்டது.

ஆறு எங்கு உற்பத்தியாகிறது என்பது நதிநீர்ப் பகிர்வில் முக்கியமல்ல; ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் முன்னுரிமை என்பது புவியியல், மரபியல், வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஆற்றின் வடிகால் பகுதி மக்களுக்கே ஆற்றுநீர்ப் பயன்பாட்டில் முன்னுரிமை தரப்படுகிறது. காவிரியைப் பொருத்தவரை கர்நாடகம், தமிழ்நாடு இரண்டுமே பாசனப்பகுதியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கே முன்னுரிமை தரப்படவேண்டும்.

ஆற்றில் ஒவ்வோராண்டும் முதல் பருவமழை பெய்தவுடன் அணையில் நீரைத் தேக்காமல் கடைமடைவரை பாயவிடவேண்டும் என்பது சர்வதேச நியதியாகும். ஆற்றில் உள்ள ஊற்றுக்கண்கள் அடைபடாமல் இருக்கவும் முதல் மழைக்குப் பிறகு மழை பொய்த்துவிட்டால் கீழ்மடைக்காரர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் முன்னோர்கள் வகுத்த நியதி இதுவாகும். தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதைப் போல வறட்சியையும் பகிர்ந்துகொள்வதென்ற நல்லெண்ணம் அப்போது இருந்தது.

1972 முதலே தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகம்; மத்திய அரசும் இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துவந்தே பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டது. நதிநீர் இணைப்பு சாத்தியமா, அதற்கான நிதியைத் திரட்ட முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் காரியசாத்தியமான திட்டங்களை வகுத்து படிப்படியாக அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேசிய நீர்க்கொள்கை அறிவிக்க மத்திய அரசு திட்டம் தீட்டிவருகிறது. இது, நீர் ஆதாரங்களைத் தனியாரிடம் ஒப்படைத்து அவர்கள் தண்ணீரை இஷ்டப்படி விலைக்கு விற்பதற்குத்தான்.

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வாகன உரிமையாளர்களிடம் இஷ்டப்படி வசூல் செய்துகொள்ள தனியாரை அனுமதித்ததைப் போலத்தான் தேசிய நீர்க்கொள்கை மூலமும் அனுமதிக்கப்படும் என்று ஊகிக்கலாம்.               

நன்றி:- கருத்துக்களம், தினமணி, 11-02-2013





   

0 comments:

Post a Comment

Kindly post a comment.