Monday, February 11, 2013

தேசப் பிதாவின் சர்வாதிகாரக் கனா ! ( 1931 )

காந்தியடிகள் மக்கள் ஜனநாயகத்தில் எத்துணை அளவில்  ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதனை உலகு நன்கறியும். 1931-ஆம் ஆண்டில் “யங் இந்தியா” இதழில் அவர்கள் தன்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால் முதற்பணியாக மேற்கொள்ளவிருப்பது எது தெரியுமா எனக் கேள்வி கேட்டுத் தன் உள்ளத்தைப் புலப்படுத்துகிறார்.

 ‘ஒரு மணி நேரத்திற்குள் இந்தியா பூராவுக்கும் என்னைச் சர்வாதிகாரியாக நியமித்தால், முதல்காரியமாக என்ன செய்வேன் தெரியுமா ? நஷ் டு கொடுக்காமல் எல்லாக் கள்ளுக் கடைகளையும் மூடிவிடுவேன். குஜராத்தில் உள்ள கள்ளுக் கடைகளையெல்லாம் அழித்துவிடுவேன். தொழிற்சாலை அதிபர்கள் தம்மிடம் உள்ள தொழிலாளர்கள் சிரமமில்லாமல் வேலை செய்வதற்கான நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும், இவர்கள் சாதாரண பானங்கள் அருந்துவதற்கும், அதே மாதிரி சாதாரணமாய்ப் பொழுது போக்குவதற்கும் உணவு விடுதிகளையும், ஓய்வு அகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வற்புறுத்துவேன். தொழிற்சாலை அதிபர்கள் இதற்கெல்லாம் பணமில்லையே என்று சொன்னால், அந்தத் தொழிற்சாலைகளை மூடிவிடுவேன். எனக்குக் குடிப் பழக்கமே கிடையாது. ஆகையால் நான் ஒரு மணிநேரம் சர்வாதிகாரியாய் இருந்தால்கூட நிதானம் தவறாமலே இருப்பேன். எனது ஐரோப்பிய நண்பர்களுக்கு வைத்திய காரணங்களுக்காய்ப் பிராந்தி அவசியமாகும். வியாதிகளையும் சர்க்கார் செலவில் பரிசோதிக்கச் செய்வேன்”
 

என்று தான் விரும்பாத சர்வாதிகாரக் கனவு நிலையிலும் கூடக் குடிப்பழக்கத்தை ஒழிக்கும் நெறிமுறைகளை எடுத்துரைப்பார். அந்தத் தொழிலுக்கு மாற்றாக வேறு பணிகளைத் தர வேண்டும் என்பதும், எளிமையான வேறு பானங்கள், ஓய்வு அறைகள் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதும் முடிவின் விளைவுகளால் ஏற்படும் மன மாற்றத்தீற்கு இட்டுச் செல்லும் நல்ல வழிகளாகும்..

உதவி :- மகாத்மாகாந்தி நூல்கள் 

எடுத்துத் தந்தவர் :-டாக்டர்.இ.சுந்தர மூர்த்தி

பேசும் சுவடுகள்-தொகுப்பு டாக்டர்.அ.சிவக்கண்ணன்

நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-600 098

அக்டோபர் 1994,  ஜூன் 1996, ஜுன் 1997


 

0 comments:

Post a Comment

Kindly post a comment.