Saturday, February 23, 2013

கருப்புப் பணம் ரூ. 6,799 கோடி மீட்பு !


மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துமூலமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் கூறியது:

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ. 6,799 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 2011-12-ம் நிதிஆண்டில் ரூ. 14,017 கோடி தொகை கைப்பற்றப்பட்டது. கணக்கில் காட்டப்படாத இந்த கருப்புப் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இது தவிர, கணக்கில் காட்டப்படாத ரூ. 453.53 கோடி சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

மறைமுக வரி ரூ. 3.75 லட்சம் கோடி:

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ரூ. 3.75 லட்சம் கோடி மறைமுக வரியாக வசூலாகியுள்ளது என்று அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார். இது நடப்பு ஆண்டு இலக்கில் 74 சதவீதமாகும். இதில் உற்பத்தி வரி ரூ. 1,38,654 கோடி, சுங்க வரி ரூ. 1,34,802 கோடி, சேவை வரி ரூ. 1,02 322 கோடியும் வசூலாகியுள்ளது. வரும் நிதிஆண்டில் ரூ. 5.05 லட்சம் கோடி மறைமுக வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

வங்கிகளில் உரிமை கோராத தொகை ரூ. 2,481 கோடி:

நாட்டில் உள்ள வங்கிகளில் 2011 டிசம்பர் வரையிலான நிலவரப்படி மொத்தம் ரூ. 2,481.40 கோடி உரிமை கோராமல் உள்ளது. மொத்தம் 1.12 கோடி வங்கிக் கணக்குகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று நமோ நாராயண் மீனா கூறினார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களைக் கண்டுபிடித்து அதைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்கி மோசடி ரூ. 52.66 கோடி:

நடப்பு நிதி ஆண்டில் வங்கிகளில் நிகழும் மோசடிகளின் அளவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ. 52.66 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இத்தொகை ரூ. 36.72 கோடியாக இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தொகை அதிகமாக இருந்தபோதிலும் வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக அதாவது 8,322 வழக்குகள் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.

வாராக் கடன் வசூல் அதிகரிப்பு:

வங்கிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் வாராக்கடன் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ. 1,84,193 கோடி வசூலாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 2010-ல் ரூ. 9,726 கோடி, 2011-ல் ரூ. 13,940 கோடி, 2012-ல் ரூ. 17,043 கோடி, செப்டம்பர் வரையான காலத்தில் ரூ. 10,815 கோடி வசூலாகியுள்ளது.

உரிமம் பெறாத சுரங்கங்களுக்கு ரூ. 622 கோடி அபராதம்:

உரிமம் பெறாமல் செயல்பட்ட சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் மாநிலங்களுக்கு ரூ. 622 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சர் தீன்ஷா படேல் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் ரூ. 131.43 கோடியும், ஆந்திரம் ரூ. 93.04 கோடியும், மத்திய பிரதேசம் ரூ. 85.10 கோடியும், தமிழகம் ரூ. 65.73 கோடியும், கர்நாடகம் 52.23 கோடியும் பெற்றுள்ளன. மொத்தம் 25,519 சுரங்கங்கள் முறைகேடாக நடைபெற்றதும் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 2011-12-ம் ஆண்டில் மொத்தம் 94,599 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

நால்கோ, எம்எம்டிசி பங்கு விற்பனை:

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு நிறுவனங்களானநால்கோ, செயில், எம்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.

நால்கோவில் 12.15 சதவீதப் பங்குகளையும், 

எம்எம்டிசியில் 9.33 சதவீத பங்குகளையும், 

ராஷ்ட்ரீய ரசாயனம் 

மற்றும் உரத்துறை நிறுவனத்தின் 12.59 சதவீத பங்குகளையும், 

செயில் நிறுவனத்தில் 10.82 சதவீத பங்குகளையும் 

விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.  

நன்றி :- தினமணி, 23-02-2013



                                                

0 comments:

Post a Comment

Kindly post a comment.