Tuesday, February 12, 2013

3.அறிமுகம் : ஜி.நாகராஜன். நினைவில் வாழும் ,படைப்பாளி ! ஜி. நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.

1959 ஆம் ஆண்டு ஆனந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் மனைவி தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில்  பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலைச் செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில்இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார்.

மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரிக் கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்பக் கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.

அதன் பிறகு மதுரைக்குத் திரும்பித் தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.

இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.

ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.

கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.

 http://pitchaipathiram.blogspot.in/2010/10/blog-post_3567.html


ஜி.நாகராஜன் - கடைசி தினம் - சி.மோகன்

இவரைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையைக் காணலாம்.
 
ஜி.நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' எனும் புதினம் க்ரியா ராமகிருஷ்ணனி்ன் பங்களிப்புடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி
 (Tomorrow one more day) எனும் நூலாகப் பெங்குவின் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது.

ஆங்கில நூல் சுட்டி.

http://www.penguinbooksindia.com/category/Classic

/Tomorrow_Is_One_More_Day_9780143414124.aspx                                                    
 
             
 அவரது படைப்பு குறித்த ஓர் விமர்சனம்.

http://kesavamanitp.wordpress.com/category/ஜி.நாகராஜன்    

 http://puthagapriyan.blogspot.in/2011/01/blog-post_26.html

 ஜி.நாகராஜனின் பொன்மொழிகள்

அவர் தன கட்டுரை ஒன்றில் தன பொன்மொழிகளாகச் சிலவற்றைக் கொடுத்துள்ளார் . அவை கூரிய சிந்தனைக்கும் பெரிதான கேலியாகவும் இருக்கிறது .அவற்றை இங்கே பகிர்கிறேன்

1.உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் கிட்டத்தட்ட சம ஆயுள்

2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர , பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும் .

3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது .

4. தனிமனிதர்களை மதிக்க தெரியதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள் .

5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது .ஏனெனில் சிந்திக்கும் நாய்கள் நாய்க் குணங்களையே உயர்வாகக் கருதுகிறது .

6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும் . இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.

7. 'மனிதாபிமான' உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை . மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த  படைப்பைப் படைக்கவல்லது .இல்லையெனில் 'மெக்பத்'
என்ற நாடகமோ 'கலிவரின் யாத்திரை ' என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது .

8. இயற்கையிலேயே பீரிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம் ,கனதனவான்கள் பதவியில் இருந்துகொண்டு 'புரட்சி' பேசுவதைச் சகித்துகொண்டிருக்கிறோம்.

9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு ,பனம்பழத்தை வீழ்த்திய கதையைச் சொல்லுங்கள் .

10. மனிதனைப் பற்றிப் பொதுவாக ஏதும் சொல்லச்சொன்னால் 'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்றுதான் சொல்லுவேன் .

இவற்றை சொல்லிவிட்டு கடைசியாக அவர் சொல்லும் வாக்கியங்களே அவரின் மிக கூர்மையான கேலிக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் உதாரணம் .

"இன்னும் தேங்காய் துவையல் , பெண்ணின் கற்பு , உலக அமைதி , எள்ளுருண்டை , காலி சிந்த் புடவை ,பல்லாங்குழி ஆட்டம் , பொய்ப் பல், இத்யாதி இத்யாதி பற்றியும் 'பொன்மொழிகள்' தர முடியும் "

நன்றி :ஜி.நாகராஜன் ஆக்கங்கள் ,
 

காலச்சுவடு பதிப்பகம்
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.