பூரண மதுவிலக்கை வலியுறுத்தி 28-வது நாளாக காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூரில், உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளை நேரில் சந்தித்துப் போராட்டத்தைக் கைவிடக் கோருகிறார் நடிகர் சிவகுமார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதியான சசிபெருமாள் 28-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மதுவின் கொடுமைகளில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்றத் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சசிபெருமாள் மகாத்மா காந்தியின் நினைவு நாளான ( சர்வோதய நாள் ) கடந்த ஜனவரி 30-ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
உண்ணாவிரதம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறி அவரை கைது செய்த போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலும் உண்ணாவிரதத்துடன் மௌன விரதத்தையும் தொடர்ந்த அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் ஆகியோர் மருத்துவமனையில் அவரைச் சந்தித்து போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சசிபெருமாள் பிப்ரவரி 23-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரத்தைத் தொடர்ந்தார்.
அங்கிருந்த அவரை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து 25-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், மயிலாப்பூரில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணியின் இல்லத்தில் 28-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், நடிகர் சிவகுமார் ஆகியோர் சசிபெருமாளை செவ்வாய்க்கிழமைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சசிபெருமாளுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உடல் நலம் கருதி அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்றார்.
இல. கணேசன்: பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கைக்காக 28-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் சசிபெருமாளுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தேன். உடல் நலம் கருதி அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும். தமிழக அரசு அவரது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தனது கோரிக்கையைக் கடிதம் மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிபெருமாள் அனுப்பியுள்ளார்.
நடிகர் சிவகுமார்: பூரண மதுவிலக்கு சாத்தியமல்ல என அரசியல்வாதிகள் கூறுவதை ஏற்க முடியாது. சசிபெருமாளைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
உண்ணாவிரதத்துடன் அவர் மௌன விரதமும் இருப்பதால் அவரிடம் மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை. உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
சசிபெருமாள் சார்பில் நான் கூற விரும்புவது ஒரே விஷயம்தான். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
குறிப்பாகத் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் இழுத்து மூட
வேண்டும் என்றார்.
நன்றி :-தினமணி, 27-02-2013
Wednesday, February 27, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.